காதலே காதலே

எழுத்தில் இணைந்திருக்கும் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்,
முதல்முறையாக அதுவும் காதல் கதை ஒன்றை சிறுகதையாக எழுதியிருக்கிறேன். நண்பர்கள் தங்களின் மதிப்புமிக்க கருத்துக்களை எதிர் நோக்கி காத்திருக்கிறேன். மேலு‌ம் ஒரு கதைப் போட்டிக்காக எழுதப்பட்ட முதல் முயற்சி, என் முதல் கதை இது படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே...


தலைப்பு :

காதலே காதலே:



மழை துளியின் தொடுதலில் இதழ் விரித்த மல்லிகை போல் இமைகள் மெல்ல திறந்து பார்த்தாள் ப்ரியா. வெளியே பனி கொட்டியது சன்னல் கண்ணாடிகள் நீர் துளிகளால் அழுது வடிந்து கொண்டு இருந்தது. சற்றே சிரமப்பட்டு கடிகாரத்தை பார்த்தாள், மார்கழி மாதம் விடிந்தாலும் சூரியன் உதிக்காதக் காலை. உடல் மொத்தமும் போர்வைக்குள், தலையை வெளியே நீட்டி உற்றுப் பார்க்க காலை ஐந்து முப்பது என்று காட்டியது கடிகாரம்.
'5.30 தா ஆகுதா, அப்போ இன்னும் ஒரு அரைமணி நேரம் தூங்கலாம். ஆறு மணிக்கு எழுந்தா சரியா இருக்கும்' என்று மனதுக்குள் நினைத்தவாறு மீண்டும் புரண்டு படுத்தாள். கண்கள் இரண்டும் இரவு சீரான தூக்கம் இல்லாமல் போக இமைகளின் நுனியில் வெப்பத்தை கக்கி புரையோடி எரிச்சலைத் தந்து இருந்தது. இன்னும் சிறிது நேரம் உறங்கினால் காலையில் அலுவலகத்தில் சிரமம் இல்லாது வேலையில் கவனம் செலுத்த இயலும் என்று மனக்கணக்கு போட்டு கொண்டாள். விடிய விடிய எதை எதையோ உள்ளுக்குள் வைத்து இதயம் கனத்து அதன் உரசலில் பற்றிய கனலால் புகைத்துப் புகைத்து கண்கள் எரிச்சல் கொண்டு கண்ணீர் சிந்தியது தான் மிச்சம்.. இரவெல்லாம் நீர் சுரந்த விழிகள் காலையில் வறண்டு பாலைவனம் போல ஆனது.
இந்த கண்ணீர் மட்டும் இல்லாதிருந்தால் பாவம் பெண்களின் பாடு அதோ கதிதான், துக்கமோ துயரமோ கோபமோ ஆத்திரமோ துன்பமோ இன்பமோ எதுவாக இருந்தாலும் அதன் வெளிப்பாடு சிலத் துளிக் கண்ணீர் மட்டுமே பேச இயலும்.
அப்படி ஒரு வரம் வாங்கி வந்தவள் தான் ப்ரியா.
உடல் சோர்வைக்காட்டிலும் மனச்சோர்வு வெகுவாக அவளை வாட்டி வதைத்து இருந்தது. எதைச் சொல்லி தன் நிலையை நொந்து கொள்ள முடியும் அவளால், கண்ணீரை அன்றி வேறு எதுவாலும் அவள் துயரங்களை மறக்கடிக்க இயலாதே..
"ப்ரியா... ப்ரியா.. எழுந்திரு மணி எட்டாகுது, ஒரு பொம்பள புள்ளைக்கு இத்தன நேரம் தூங்குற பழக்கம் ஆகாது, நாளைக்கு மாமியார் வீட்டுலையும் இப்படியே எழுந்து பழகு என்னைதா காரித் துப்புவாங்க என்ன புள்ளப் பெத்து வளத்திருக்கன்னு. எழுந்திரு தினமும் உன்னோட இதே ராமாயணமா போச்சு, இப்ப எழுந்து வரியா தண்ணிய மூஞ்சில ஊத்துட்டா " என்று கேட்டவாறு அவள் அம்மா மீனாட்சி படுக்கை அறைக்குள் வர, இவள் எழுந்து தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்த வண்ணம் இருந்தாள். "இத்தனை கத்து கத்திட்டு இருக்கனே எழுந்திருச்சிட்டேன்னு சொல்றதுக்கு என்ன உனக்கு, வாழ்ற வீட்டுல மரநாய் கத்துற மாறி நான்தான் கத்தனும், எல்லாம் எங்கோ காத்தடிக்குது எங்கோ மழையடிக்குதுன்னு அவங்க அவங்க பாட்டுக்கு இருங்க. எல்லாம் நான் வாங்கி வந்த வரம் அப்படி, உங்க அப்பன சொல்லணும் எல்லாம் அவரு குடுக்கிற செல்லம் இப்படி இருக்க நீ. வரட்டும் உங்க அப்பங்கிட்ட சொல்றேன். இன்னொருந்தங்க வீட்டுல வாழப் போறவளுக்கு இப்படி தூக்கம் ஆகுமா, மூதேவி நடுவீட்டுல வந்து தா உட்காருவா.. அப்புறம் குடும்பம் எங்கத்த விளங்கும் " என்று பட்டாசு போல் விடாது கத்திக் கொண்டே இருந்தாள் அன்னை மீனாட்சி.
"சும்மா காலங்காத்தால எழுந்திருக்கும் போதே எரிச்சலைக் கிளப்பாதம்மா, ஏற்கனவே கண்ணு எரியுதேன்னு கடுப்புல இருக்கேன் நீயும் டென்சன் பண்ணாத. அதா எழுந்து உட்கார்ந்து தான இருக்கேன் அப்பறம் என்ன. தினமும் என்னை திட்டலனா உனக்கு விடிஞ்ச மாறி இருக்காதா" என்றாள் சற்று சத்தம் தூக்கலாக.
" ஆமாண்டி உன்னை திட்டணும்னு எனக்கு ஆசை பாரு, ரெண்டு வச்சாதா நீ அடங்குவ பெரியவளா ஆகிட்டன்னு கை வைக்காம இருக்கேன் பாரு என்னை சொல்லணும் " சற்று மிரட்டலாக சொல்லிவிட்டு சமையலறையில் தன் வேலையை தொடர போனாள் மீனாட்சி.
பட்டென்று தலையில் அடித்துக் கொண்டு வெடுக்கென்று எழுந்து போர்வையையும் பாயையும் மடித்து வைத்து விட்டு பக்கத்தில் இருந்த நீர் செம்பை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள், வாயில் கொஞ்சம் நீரை ஊற்றி கொப்பளித்து துப்பிவிட்டு மீதம் இருந்த நீரை வெடுக்கு வெடுக்கென்று குடித்து முடித்தாள்.
சமையலறையில் அம்மா வைத்திருந்த தேநீரை எடுத்துக் கொண்டு மரசோபாவில் வந்து உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தாள். மனதுக்குள் எண்ண அலைகள் புரண்டு வர ஆரம்பித்தது. 'என் வாழ்வில் தான் எத்தனை மாற்றங்கள். எல்லாமே மாறிவிட்டது, என் உள்ளம் ஒன்றைத் தவிர. எத்தனை கனவுகள், எத்தனையாயிரம் நினைவுகள் எல்லாமே சில நேரங்களில் கானல் நீர் போல் அல்லவா மாறிப் போனது. எதிர்காலம் பற்றிய கனவுகளில் ஏதோ சூன்யம் பிடித்தது போல் ஓர் உணர்வு, என்ன செய்யப் போகிறேன் இனி. தனிமையைக் காட்டிலும் பெரும் துயர் இவ்வுலகில் வேறொன்று உண்டென்றால் அது எல்லாமும் இருந்து இல்லாது இருப்பது போன்ற இந்த உணர்வு எவ்வகையான துயரம் என சொல்ல முடியவில்லை. ' இதயம் கனத்து இமைகள் சிறிது நேரம் மூடிக்கொண்டாள்.
இப்படி அமர்ந்திருந்தால் இதற்கும் சேர்த்து இவள் திட்டுவாங்க வேண்டும். எழுந்து கையில் இருந்த காலி டம்ளரை பாத்திரம் கழுவிமிடத்தில் போட்டுவிட்டு குழிக்க சென்று விட்டாள். இதோ காலைக்கடன்களை முடித்துக் குழித்து உடைமாற்றி போதுமான அலங்காரம் செய்து தன் கைப்பையில் தேவையானவைகளை எடுத்து திணிக்க ஆரம்பித்தாள். நேரம் ஆகிறது என்று சாப்பிடாமல் பேருந்துக்கு தேவையான பணத்தை மட்டும் வாங்கி பையில் திணித்து விட்டு அம்மாவிடம் சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்பினாள் ப்ரியா. பேருந்தில் ஏறி போக வேண்டிய நிறுத்தத்தை சொல்லி பயணச்சீட்டை வாங்கி பையில் திணித்தாள்.
ஏதோ இயந்திரம் போல ஒரு வாழ்க்கை, வழி தெரியாமல் தவிக்கும் நாடோடி போல பரிதவித்து நிற்கும் நிலை.
சொல்லியும் தீராத பெரும் துயர் தன் இதயத்தை அனுதினமும் அரித்து சிதைத்து கொண்டிருப்பதை உணர்ந்தால்,
ஏமாற்றங்களும், கவலைகளும் பெண்களுக்கு புதிதில்லையே. இருந்தும் வாழ்வில் சில கட்டங்களில் நம் மனதின் நிலைப்பாடு வேறாக அல்லவா இருக்கிறது.
கனவுகளும் கற்பனைகளும் கண்களோடும், உள்ளத்தோடும் நின்றுபோய் விடுகிறது.
திடீரென விசில் சத்தம் கேட்டு பேருந்து நின்றது இவளும் சுயநிலைக்கு வந்தாள், இறங்க வேண்டிய நிறுத்தம் வரவும் இறங்கி வேகமாக அலுவலகம் நோக்கி நடந்தாள்.
வந்த வேகத்தில் மடமடவென வேலைகளை தீவிரமாக பார்க்க ஆரம்பித்தாள், இதோ முடிந்து விடும் அதோ முடிந்து விடும் என்று அரை நாளை விழுங்கி இருந்தது.
எம் எஸ் ஆபிஸில் சில வாடிக்கையாளர்கள் வேண்டுதல் கடிதம் சிலதை மெயிலில் அனுப்பிவிட்டு, எக்ஸ் எல் டேட்டாக்களை சரி பார்த்து அன்றைய வேலையின் முடிவுகளையும் அதில் தட்டச்சு செய்து சேமித்து வைத்தாள்.
மேலாளரிடம் சென்று அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊரின் மையப்பகுதியில் உள்ள மெயின் பஜார் தாண்டி ஐயப்பன் தெருவிற்கு போனாள், அங்கிருந்து ஒரு பத்து நிமிட நடை அதோ அவன் வீடு அதுதான். வாசலில் அழைப்பு மணியின் அழைப்பில் கதவைத் திறந்து வந்தான் ஆனந்தன். இவளை அங்கு எதிர்பார்க்கவில்லை என்றாலும் ஒரு வெளுத்த சிரிப்புடன் "உள்ள வா" என்றான். "அம்மா, யார் வந்திருக்காங்கன்னு பாரேன். " என்றபடியே உள்ளே நகர பார்த்தவனை " நில்லு, அவங்க இவங்கன்னு சொல்ற அளவுக்கு ஆகிடுச்சு இல்ல" என்று கேள்வியாய் பார்த்தாள்.
ஆனந்தன் எதுவும் பேசாமல் நிற்க ப்ரியா வேறு எதையோ கேட்க வாயெடுக்க, " வாம்மா ப்ரியா, எப்படி இருக்க" என்று கேட்டுக் கொண்டே வெளியே வந்த ஆனந்தனின் அம்மா தமயந்தி ஆசையாய் அவள் கையைப் பிடித்துக் கொண்டு தன் அருகில் அமரும்படி சைகை செய்தார். அதற்கு மேல் அவன் முகத்தைப் பார்க்க பிடிக்காமல் தமயந்தியிடம் என்ன ஏது என்று நலம் விசாரிக்க ஆரம்பித்தாள். தமயந்தியின் பேச்சு முழுக்க இவளையும் ஆனந்தனையும் சுற்றியே சுழன்று கொண்டு இருந்தது.
"எனக்கு உன்ன புடிக்கும் ப்ரியா, ஆனா என்ன பண்றது நீ மருமகளா கிடைக்க எனக்கு குடுத்து வைக்கல. அவன் அவனோட வாழ்கைய அவனே அமச்சுக்கிட்டான். நாம சொல்றதெல்லாம் எங்க அவன் காதுல ஏறுது, என்னமோ ஆனந்தன் வாழ்க்கை இப்படி தான்னு இருக்கும் போல. ஆனா, நீ இப்படியே இருந்திடக் கூடாது. கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கனும் சரியா. நீ நல்லா இருக்கணும். அந்த ஆண்டவன் கிட்ட உனக்காக வேண்டிக்கிட்டு இருக்கேன். " என்று ஒரே கோர்வையாக பேசி முடித்தார். இவளோ தலையைக் குணிந்து கொண்டு சரி என்பது போல் அசைத்துக் கொண்டே இருந்தாள்.
நிமிர்ந்து ஒரு நேரான பார்வை, தமயந்தி இப்போது தலையை தாழ்த்தி தரையை வெறித்துப் பார்த்தார். தன் இடது கரத்தால் தாயின் கரத்தைப் பற்றி" கவலைப்படாமல் இருங்க, கண்டிப்பா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். வருத்தப்படாம இருங்க. உடம்ப பாத்துக்கங்க, நான் கிளம்பறேன்" என்றுவிட்டு சட்டென்று எழுந்து கைப்பையை தேடினாள்.
ப்ரியாவின் வலக்கரத்தை பற்றி " ஏம்மா என் கையால உனக்கு எதாச்சும் செஞ்சு தரணும்னு ஆசையா இருக்கு, சாப்பிடுவியா " என்று குழந்தை போல தமயந்தி கெஞ்சியதை கண்டதும் ப்ரியாவால் கண்ணீரை அதற்கு மேலும் அடக்க முடியவில்லை. மடையைத் திறந்தது போல மடமடவென தண்ணீர் வந்துவிட்டது. துக்கம் தாளாமல் அவர் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்.
இதை அனைத்தையும் நேரில் பார்த்துக் கொண்டு இருந்த ஆனந்தனுக்கோ தொண்டையை அடைத்தது. நெஞ்சை அடைப்பது போல ஒரு உணர்வு. ப்ரியாவின் கையைப்பிடித்து இழுத்து தன் மாரோடு அணைத்து அவள் கண்ணீரை தன் கரங்களால் துடைக்க வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு, ஆனால் கல்லாக நின்றான். இந்தக் கல்லுக்குள் ஈரம் இருந்தது, அது கண்களின் வழியே வழிந்தது. யாரும் காணாது கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தன் அம்மாவிடம் சென்றான். பெண்கள் இருவரும் இறுக அணைத்துக் கொண்டு நிற்க, இவனால் யாரை விலக்குவது என்று தெரியவில்லை. தமயந்தியின் தோளைப் பற்றி "அம்மா, அம்மா அழுதது போதும். அவள இன்னும் கஷ்ட படுத்த வேண்டாம். நிறைய அழுதுட்டா, இனிமேலும் அவ அழறத என்னால பாக்க முடியாது. தயவுசெய்து அழாதீங்க. எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு" விருட்டென்று தமயந்தியின் தோளிலிருந்து முகத்தை எடுத்த ப்ரியா "இப்பையும் உங்க வேதனை தாளாம தான் எங்க அழுகைய நிறுத்த சொல்றீங்க. எங்க வேதனையை பத்தி கவலை இல்லை. ஓ... ஆமா இல்ல, எங்க வேதனையை நினச்சு கவலைப்பட நீங்க யாரு.. நீங்க சரியாத்தான் யோசிக்கறீங்க ஆனந்த். நான் தான் ஆரம்பத்தில் இருந்தே உங்கள பத்தி புரிஞ்சுக்காம இருந்துருக்கேன். நீங்க சொல்றது எல்லாம் உண்மைன்னு நம்பிகிட்டு பைத்தியக்காரி மாதிரி இருந்து இருக்கேன்.
இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காவது ஒரு நாள் உங்க துரோகத்தை நான் உணர்ந்து தான் இருக்கணும். ஆனா எனக்கு அப்போ பெரிய இடியா இருந்து இருக்கும். இப்போ ஆண்டவனே அப்படியோரு சூழ்நிலையை என் வாழ்க்கையிலிருந்து விலக்கிட்டார் போல. எல்லா துன்பத்தையும் முன்னாடியே கொடுத்துட்டார்." என்றுவிட்டு கைகளால் முகத்தை மூடியபடி அழுக ஆரம்பித்து விட்டாள்.
" ப்ரியா, நீ நம்பு நம்பாத அது உன் இஷ்டம். எனக்கு அதப் பத்தி கவலையில்லை. ஆனா இந்த நிமிஷம் வரை என் மனசுல நீதான் இருக்க. அது என்னைக்குமே மாறாது. என்னோட மனசாட்சியே என்னை கொன்னுக்கிட்டு இருக்கு, நீ இவ்ளோ கஷ்டப்படறத என்னால பாக்க முடியல. ப்ளீஸ், என் முன்னாடி இப்படி அழத ". என்றுவிட்டு அவள் முகத்திலிருந்து கையை விலக்க அருகே போனான். அவள் விரல்கள் மீது இவன் கை பட்டதுதான் தாமதம்.
" தொடாத, என்னை தொடுற உரிமையை யார் உனக்கு குடுத்தா. ஆறு மாசம் பேசாம இருந்துட்டா, எல்லாத்தையும் மறந்துட்டு இன்னொரு பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்குவியா. நான் என்னால எந்த பிரச்சனையும் வேண்டாம்னு தான் ரொம்ப அமைதியா போயிட்டு இருக்கேன். எனக்கு இனி ஓ வாழ்க்கையை பத்தி, உன்னப்பத்தி தெரிஞ்சுக்க எந்த ஆர்வமும் இல்ல. நான் ஓ அம்மாவதான் பாக்க வந்தேன். நீ இங்க இருக்கன்னு தெரிஞ்சிருந்தா வந்திருக்க மாட்டேன். எல்லாமே உன் தங்கச்சி வேலையா, எங்க அவ ". என்றவாறே வீடெல்லாம் தேடினாள். சமையலறையில் இருந்தவளை கோபமாக பார்த்து ஏதோ சொல்ல வந்தவளை நிறுத்தி,
"நீங்க உங்கள பத்தியே பேசிட்டு இருக்கீங்க, ஆனா எங்க அண்ணன் பக்கம் இருக்க நியாயத்தை சொல்ல ஒரு வாய்ப்பு குடுக்க மாட்டீங்களா". கண்ணீரோடு கயல்விழி கேட்ட கேள்விக்கு அமைதியாக அவள் விழிகளை நோக்கி "சொல்லு கேட்டுக்கறேன். ஆனா இனிமே அதையெல்லாம் கேட்டுமட்டும் என்ன ஆகப் போகுது, எதுவும் மாறப் போறது இல்ல கயல். வாழ்க்கை முழுக்க நினைக்கவும் முடியாம, மறக்கவும் முடியாம ஒவ்வொரு நாளும் நரகத்துல வாழப் போறேன்" மீண்டும் கண்ணீர் பீறிட்டு வழிய கயல் அவள் கரங்களால் ப்ரியாவின் கண்ணீரைத் துடைத்துவிட, அவளது கையை விலக்கிவிட்டு ஜன்னல் பக்கம் திரும்பி வெற்று வானத்தை விரக்தியோடு பார்த்திருந்தாள்.
பக்கத்து வீட்டில் டூயட் படப்பாடல் மெல்ல மெல்ல கேட்க ஆரம்பித்தது. 'காதலே என் காதலே இன்னும் என்ன செய்ய போகிறாய். நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்...' ஒரு கண்ணில் மட்டும் நீர் வழிய தானே துடைத்துக் கொண்டு அருகில் யாரோ நிற்பதை உணர்ந்து திரும்பியவளுக்கு திடுக்கென்று ஆகிவிட்டது. ஆனந்தன் இவள் முகத்தையே பார்த்தவாறு கண்களில் கண்ணீரோடும் நின்றிருந்தான். இவள் பார்ப்பதை உணர்ந்து வேகமாக திரும்பி வெளி அறைக்கு போய்விட்டான். நால்வருக்கும் தேநீரை தயார் செய்து கொண்டு கயல் ப்ரியாவையும் அழைத்துக்கொண்டு வெளியறைக்கு வந்தாள். குணிந்த தலையை நிமிராமல் ப்ரியா தேநீரை குடிக்க ஆரம்பித்தாள், தமயந்தி ஏதோ சொல்லவர "நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்மா, அவரு சொல்லட்டும்."
என்றதும் வீடே அவ்வளவு நிசப்தமாக இருந்தது. தமயந்தியோ ப்ரியாவுக்கு சமைக்க சமையலறைக்கு கயலையும் சேர்த்து கூட்டிச் சென்றுவிட்டார்.
இவர்கள் இருவர் மட்டும் தனியாக இருக்க என்ன சொல்லப் போகிறான் என்ற ஆவலுடன் பெண்கள் மூவரும் காத்திருந்தனர்.
" நான் கல்யாணமே பண்ணக் கூடாதுன்னு இருந்தேன் ப்ரியா, ஆனா என் வாழ்க்கையில என்னையும் மீறி என்னென்னமோ ஆகிறுச்சு.
உன்னைப் பத்தின கவலையும், குற்ற உணர்ச்சியுமே என்னை பாடாய் படுத்தி எடுக்குது. நீ அழுது நான் பார்த்தது இல்ல. இவ்ளோ அழுது இன்னைக்கு தான் பாக்கறேன். உன்னோட கண்ணீர் என்னை என்னவோ பண்ணுது ப்ரியா " என்று ஆனந்தன் சொல்லி முடித்து அவள் முகத்தை பார்க்க.
" என்னைப் பத்தி பேச சொல்லல, எனக்கு ஒரு விளக்கம் வேணும். அது இன்னமும் உங்ககிட்ட இருந்து வரல. சொல்ல விருப்பம் இல்லன்னா ஒரு பிரச்சினையும் இல்ல. நான் என் பாட்டுக்கு நடையைக் கட்டுறேன்" என்றாள் ஒரு தீர்க்கமான குரலில்.
"நீ முதல்ல உட்காரு, பொறுமையா நான் சொல்றத கேளு ப்ளீஸ் " என்றான் ஆனந்தன்.
எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்ற இடத்திலேயே உட்கார்ந்தாள்.
சற்றே இடைவெளிவிட்டு ஆனந்தனும் அமர கேள்வியாய் அடுத்தது என்ன என்பதுபோல ஒரு பார்வை பார்த்துவிட்டு தலையை குணிந்து கொண்டாள் ப்ரியா.
லேசாக தொண்டையை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தான்,
"ப்ரியா, என் மனசு முழுக்க நிரம்பி இருந்த ஒற்றை வார்த்தை, என் ஆயுள் முழுக்க சொல்ல நெனச்ச ஒற்றை மந்திரம், என் கண் வழியே புகுந்து இதயம் நாடி நரம்பு என எல்லாவற்றிலும் நிறைந்த என்னவளின் பெயர். தவழும் குழந்தை போல எந்தவித எதிர்பார்ப்பும் அற்ற ஒற்றை புன்னகையால் என்னுள்ளே எங்கும் நிறைந்தவள், அவளின் கரங்களை பற்றியே என் மிச்ச வாழ்க்கையை கடக்க வேண்டுமென ஆவலாய் காத்திருந்தேன்.
அன்போடும் ஆசையோடும் காதலை வளர்த்து சேரும் நாள் எந்நாளோ என ஏங்கி நான் தவித்திருந்த அந்த நாட்கள் ஒன்றே என் வாழ்வில் வசந்தகாலமடி.
எல்லாவற்றுக்கும் என் தந்தையே எதிரியாக வருவார் என எதிர்பார்க்கவில்லை. ஏதோ உடலில் வியாதி என மூன்று மாதமாக அவர் விருப்பத்திற்கு என் திருமணம் நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார். உனை நினைத்து நானோ அவர் பேச்சை தட்டிக்கழித்தே வந்தேன். உன்னை தொடர்பு கொள்ள எத்தனித்து பலமுறை ஏமாந்து போனேன். எங்கே இருக்கிறாய், என்ன ஆனாய் என்று எதுவும் தெரியவில்லை. நண்பர்கள் மூலம் விசாரித்தும் எந்த தகவலும் இல்லை. கடைசியில் உனக்கு திருமணம் நடந்திருக்கும் என நண்பர்கள் கூற சுக்குநூறாக உடைந்து போனேன். அந்த சமயத்தில் வாழ்வதற்கும் திராணியற்ற எனக்கு முகநூலில் ஒரு பெண்ணுடன் சிநேகம் ஏற்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல ஓர் நாள் எனை விரும்புவதாகவும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் சொன்னாள்.
நானோ ஏதோ பிரம்மை பிடித்தவன் போல ஓடிக் கொண்டிருந்தேன்.
எதிலும் ஆர்வமற்று வாழ்க்கையை வெறுத்துப் போன எனக்கு அந்த பெண்ணின் வார்த்தைகள் ஏனோ உன்னையும் உன் நினைவுகளையும் மீட்டுத்தந்தது போல் அருமருந்தாக இருந்தது. நீ இருக்கும் இதயத்தில் அவள் மெல்ல நுழைய ஆரம்பித்தாள்.
இனி வரும் நாட்களை எண்ணி அவளை ஏற்றுக் கொள்ள முடிவெடுத்து என் விருப்பத்தையும் அவளிடம் கூறினேன்.
எந்நிலையிலும் பிரியாதிருக்க சீக்கிரத்தில் பதிவு திருமணம் செய்ய வேண்டும் என என்னை கட்டாயப்படுத்தினாள். சரி இனி அவள்தானே நம் வாழ்க்கை என முடிவெடுத்து அவளது வீட்டிற்கு தெரியாமல் என் பெற்றோர்கள் முன்னிலையில் அவளை பதிவு திருமணம் செய்தேன். இது நடந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு தான் அவள் வீட்டில் எங்கள் விவகாரங்கள் எல்லாம் தெரியவந்து பின் எல்லோரும் அறிய திருமணமும் நடந்தது.
எல்லாமும் முடிந்த பிறகு தான் இதற்கு எல்லாவற்றிற்கும் காரணம் என் தந்தை என்பதே தெரிய வந்தது. உன் நம்பரை என் நண்பன் மூலம் அந்த செல் கம்பெனியில் சொல்லி தடை செய்ய வைத்தது, அதன் பிறகு உனக்கு திருமணம் முடிந்து விட்டது என நண்பனை வைத்து பொய் சொல்ல வைத்தது, புதியவளை என்னுடன் அறிமுக படுத்த திட்டம் தீட்டியது என அனைத்தும் அவர் மூலமே அரங்கேறி இருக்கிறது.
இவை எல்லாம் எனக்கு தெரியவந்த சில நாட்களுக்குள் உனக்கும் என் தங்கை மூலம் தெரிந்துவிட்டது. இனி ஒன்றும் செய்ய இயலாது என்ற தீர்மானத்தில் தான் என்னை சமாதானப்படுத்தி கொண்டேன். என் தந்தையோடு பேசுவதில்லை. நான் தனியே போய்விட்டேன்.
மனைவியாய் வாய்த்தவள் என்னை மட்டுமே வேண்டுமென்கிறாள். என் வீட்டில் வேறு யாருடனும் உறவு வைத்துக் கொள்ள விரும்பவில்லையாம்.
எப்படியெல்லாம் உன்னோடு வாழ வேண்டும் என கனவுகள் கண்டேன், அது எல்லாமும் கனவாகவே போனதடி.
எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிவிட்டேன், மன்னிப்பு கேட்கும் தகுதி கூட எனக்கில்லை.
காதல் கூட வேண்டாம், உன் கருணைப் பார்வை ஒன்றிற்காக ஏங்கி நிற்கிறேன். என் தாய்க்கு நிகர் அல்ல, அவரினும் உயர்ந்தவள் நீ. என் பிழைகளை மறந்து என்னை மன்னிப்பாயா...". என்று இடைவிடாது சொல்லிவிட்டு ப்ரியாவின் மடியில் முகம் புதைத்து அழ ஆரம்பித்துவிட்டான் ஆனந்தன். இரண்டு கைகளையும் தன் தலை உயரத்திற்கு தூக்கியவாறு அவன் அழுவதையே வெறித்துப் பார்த்தாள். செய்வதறியாமல் அவளும் சிலையாய் அமர்ந்திருக்க, அவனோ அழுது முடித்த பாடில்லை.
தன்னிலை உணர்ந்தவளாய் நடப்பதை உணர்ந்து மனதை கட்டுப்படுத்திக் கொண்டு ஆனந்தனை எழுப்பினாள்.
ப்ரியாவின் கைகள் இரண்டும் நடுங்கியது, அவளையும் அறியாமல் அவளது விரல்கள் அவன் கண்ணீரைத் துடைத்தது.
அவன் முன் நெற்றியில் அவளும் தலைசாய்த்து "என்கிட்டே இப்படி நடந்ததுன்னு ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லி இருந்தா, இன்னைக்கு நீ இவ்ளோ கஷ்டத்தை அனுபவிக்க வேண்டி இருக்காதே. உங்க அப்பாவுக்கு என்னை பிடிக்கலைன்னு ஏ நீ சொல்லல. நடந்தது நடந்திருச்சு, இனி போனத நெனச்சு கவலைப்படாமல் இருக்கிற வாழ்க்கையை எப்படி நிம்மதியாக வாழ்றதுன்னு யோசி.
இனி என்னைப் பத்தின நினைப்பும் கவலையும் அநாவசியமானது. என் வாழ்க்கைய நான் பாத்துக்கறேன். உங்க மனைவியோட இனி நீங்க சந்தோஷமா வாழ்ற வழிய பாருங்க. இப்பவும் எப்பவும் என்னை பத்தி நினச்சு யாரும் கவலைப்பட தேவையில்லை ". இப்போது ஒரு நிமிடம் எந்த பேச்சும் இல்லை, ஒரே நிசப்தம் அந்த அறையையே சூழ்ந்து இருந்தது.
"எனக்கு கடைசியா ஓரே ஒரு கேள்வி கேட்கணும், கேட்கட்டுமா?".
ப்ரியாவின் கண்களில் கண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து கொண்டு இருந்தது.
"கேளு ப்ரியா" என்றான் ஆனந்தன்.
அவன் விழிகளையே பார்த்தவாறு" வேற ஒண்ணும் இல்ல, என்னோட அன்பும் காதலும் கடைசியில கற்பனையாகிருச்சு. கடந்த இரண்டு வருச காதலுக்காக என்னோட பத்து வருட காதலை குப்பைன்னு நெனச்சு தூக்கிப் போட்டுடியான்னு தெரியணும்.
என் காதல் செத்துருச்சான்னு தெரியணும்.
ஓ மேல நான் வச்ச அன்பும் பாசமும் காதலையும் கடந்தது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது.
நம்ம காதலுக்கு இன்னும் உயிர் இருக்கா?.
நம்ம அன்புக்கு மதிப்பு இருக்கா?
இதுமட்டும் எனக்கு தெரிஞ்சா போதும்".
என்று கேட்டாள் ப்ரியா.
அவள் கண்களைப் பார்த்தவாறு," என் மூச்சு இருக்கிற வரை நம்ம காதலும் சாகாது நாம ஒருத்தர் இன்னொருத்தங்க மேல வச்ச அன்பும் மாறாது, எங்க இருந்தாலும் இந்த உலகத்துல எந்த மூளையில இருந்தாலும் என் இதயம் உன்னை நினச்சு துடிச்சிக்கிட்டே இருக்கும்.
இன்னும் நான் என்னோட வாழ்க்கைய ஆரம்பிக்கல, என்னைக்கு உன் வாழ்க்கை ஆரம்பிக்குதோ அன்னைக்கு தான் என் வாழ்க்கை ஆரம்பிக்கும்.
தயவு செய்து சீக்கிரமே நல்ல பையானா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ. எப்பயும் எல்லாரும் சந்தோஷமா இருக்கணும் ன்னு நீ நினைப்ப, என் சந்தோஷமும் இனி உன் கைலதான்.
என்ன இரண்டு பேரும் வேற வேற துணையோட வாழ்க்கைய பகிர்ந்துக்க போறோம். நாம நினைச்ச மாதிரி வாழ்க்கை அமையிலனா என்ன, கிடைச்ச வாழ்க்கைய பிடிச்ச மாதிரி மாத்திக்குவோம், என்ன சொல்ற ". என்றான் ஆனந்தன் ஒரு தீர்க்கமான குரலில்.
அவன் தன் வாழ்க்கையே இன்னும் தனக்காக ஆரம்பிக்கவில்லை என்று தெரிந்ததும் பேரதிர்ச்சியாக இருந்தது ப்ரியாவுக்கு.
" நான் நல்லபடியா கல்யாணம் பண்ணி மகிழ்ச்சியா வாழ்ந்தா நீயும் சந்தோஷமா இருப்பன்னா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குவேன்" என்றாள் உறுதியாக.
மனதில் இருந்த வலி சற்றே குறைந்தது போல இருந்தது இருவருக்கும்.
இப்போது அவளது விழிகள் முதன்முறையாக ஆனந்த கண்ணீர் சிந்தியது.
ஆனந்தன் உணர்ந்தான், ப்ரியாவின் தெளிவான இதயம் இனி துன்பத்தில் துவண்டு போகாது என.
அப்போது தான் அவர்கள் இருவரும் நெருக்கமாக அமர்ந்திருப்பது உணர்ந்து உடனே நகர்ந்து உட்கார்ந்து கொண்டனர்.
அவர்களையும் மீறி சற்று நேரம் சிரித்துக் கொண்டனர்.
"சரி, நான் கிளம்பறேன் ஆனந்த். ரொம்ப நேரமாகிருச்சு" என்றாள் ப்ரியா.
"அப்படியெல்லாம் கிளம்ப முடியாது கண்ணு, அம்மா கையால சாப்பிட்டு தான் போக முடியும்" என்றவாறே தமயந்தி தட்டில் அவளுக்கு பிடித்த உணவை செய்து கொண்டு வந்தார். தமயந்தி தன் கையால் உணவை எடு‌த்து‌ முதலில் ஊட்டினார். பின்னாடியே கயல்விழியும் இன்னொரு வாய் உணவை நீட்ட சிரித்தபடியே அதையும் வாங்கிக் கொண்டு மென்று முழிங்கினாள்.
இன்னொரு கையும் உணவை ஏந்தி ஆசையோடு அவள் வாய் அருகே போக "அம்மா, போதும்மா" என்றவள் நிமிர்ந்து பார்த்ததும் அதிர்ச்சி. ஆனந்தன் புன்னகையோடு அவள் சாப்பிடுவாளா மாட்டாளா என்பது போல் பார்த்தான்.
முதன்முறையாக அவன் காதலை சொன்னபோது ப்ரியா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். ஒரு முறை அவன் அம்மா இதே போலத்தான் உணவு சமைத்து ஊட்டிவிட்டார், அப்போதும் ஆனந்தன் இதே போல சாப்பாடு ஊட்டிவிட ஆசையாய் வர சம்மத புன்னகையோடு ப்ரியா அதை வாங்கிக் கொண்டதும் அவளது விருப்பத்தை அறிந்தான். இப்போதும் அதே போல தான் மன்னிக்கப்பட்டதை உறுதி செய்ய முயற்ச்சிக்கிறான் என்பதை உணர்ந்தாள்.
மெல்ல சிரித்துவிட்டு கடைசியாக தன் காதலனின் கையால் தந்த உணவை கண்ணீரோடு வாங்கிக் கொண்டாள்.
இவளும் ஆளுக்கு ஒருவாய் தன் கையால் ஊட்டினாள். சிறிது நேரம் அந்த அறையில் மகிழ்ச்சியால் நிறைந்து இருந்தது.
அங்கிருந்து மனசெல்லாம் நிம்மதியும் சந்தோஷத்துடனும் வெளியேறியவள், ஏதோ நிம்மதி பெருமூச்சு விட்டாள். மனதுக்குள் கடவுளிடம் எப்போதும் போல வேண்டினாள் 'இறைவா என் ஆனந்தன் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்' என்று. தூரத்தில் இருந்த கோவிலில் மணியடித்தது..




நன்றி,
தமிழ் ப்ரியா....

எழுதியவர் : தமிழ் ப்ரியா (12-Feb-19, 12:51 pm)
Tanglish : kaathale kaathale
பார்வை : 619

மேலே