அப்பர் -------------- தமிழ் நான்மறை உடன் தொடர்புடைய தேடல்கள்- -----------------Tamil and Vedas
அப்பர்
நாடு வளரும்; சிவநெறி வளரும்; செந்தமிழ் வளரும்; அல்லன. அகலும், அறம் வளரும்; அன்பும் அமைதியும் இன்பமும் வளரும்; எங்கும் அன்பே அமையும்; பெரு வாழ்வு தோன்றும்.
சமுதாயக் கேடுகளை எதிர்த்தவர்
அப்பரடிகள் இறைநெறியில் எவ்வளவு காலூன்றி நின்றாரோ அவ்வளவுக்குச் சமுதாயத் துறையிலும் காலூன்றி நின்றவர். சமுதாயக் கேடுகளைக் களைவதில் முனைப்புடன் ஈடுபட்டவர்.
அப்பரடிகளுடன் இணைந்த கருவி உழவாரம். திருக்கோயில் விமானங்கள், மதில்கள், திருச்சுற்றுகள் முதலிய வற்றில் முளைத்த செடி கொடிகளை அப்புறப்படுத்துதலே உழவாரப் பணி. இந்த உழவாரத் திருத்தொண்டை கைத் திருத்தொண்டு என்று சிறப்பித்துக் கூறுவார் சேக்கிழார். ஏன்? சிவபெருமானே - திவிழிமிழலை இறைவனே அப்பரடி களின் கைத்திருத் தொண்டில் திருவுள்ளம் கொண்டு வாசி இல்லாத காசு அருளிய பான்மை உள்ளவாறு உணரத்தக்கது. திருத்தொண்டு செய்யும் பாங்கு வளர்தல் வேண்டும். திருமறைக்காட்டில் மூடப்பெற்றிருந்த திருக்கோயில் கதவைச் செந்தமிழ்ப் பதிகம் பாடித் திறக்கச் செய்து எல்லோரும் வழிபாடு செய்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கினார்.
சமுதாயத்தில் நிலவிய சாதிகளை வன்மையாக மறுத்தவர் திருநாவுக்கரசர். .
சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திர மும்குல மும் கொண் டென்செய்வீர் பாத்தி ரம் சிவ மென்று பணிதிரேல் மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே! (5.60.3)
என்பார். படித்தவர்கள் செய்வது சாத்திரம். படித்தவர்கள் உண்மையான சமுதாய நலத்திற்கு எதிரிடையாகக் கூடச் சாத்திரம் செய்வதுண்டு. இதைப் பாரதி “பொய்ச் சாத்திரம்”
--------------------------------------
பல அடியார்கள் தங்களை நெருப்பு பற்றி எரியும் விறகில் அகப்பட்ட எறும்பு என்று உவமிக்கின்றனர். இது ஒரு அருமையான உவமை. எரியும் வீட்டில் நாம் சிக்கி விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்; நடு அறையில் மாட்டிக் கொண்டோம்; வாசல் பக்கம் போனாலும் தீ; கொல்லைப் புறம் சென்றாலும் தீ என்றால் நம் மனம் எப்படி இருக்கும்? இதைப் போலத் தவிக்கும் தவிப்புதான் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை.
ராம கிருஷ்ண பரமஹம்சரிடம் சென்று இறைவன் இருக்கிறானா? என்று கேட்ட விவேகாநந்தரிடம் ‘இருக்கிறானே. உனக்கும் காட்டுகிறேன்’ என்று சொன்னவுடன் அதை விவேகாநந்தர் நம்பவில்லை; ஏன் எனில் அதற்கு முன்னர் பல போலி சாமியார்களைக் கண்டவர் அவர். ‘எங்கே காட்டுங்கள் பார்க்க்கலாம்’ என்று சொன்ன உடனே, விவேகாநந்தர் தலையில் அவர் கை வைத்தவுடன் அவர் மூச்சுத் திணறிப் போகிறார். எங்கும் கடவுள்; கை, கால் வைக்க இடமில்லை. அதாவது தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடுபவன் நிலைமை. ராம கிருஷ்ண பரமஹம்சர் பின்னே சொல்கிறார்: ” தண்ணீரில் மூழ்கிவிட்ட ஒருவன், மேலே வந்து மூச்சு விட எவ்வளவு தவிப்பானோ அவ்வளவு தவிப்பு இருப்பவனே இறைவனைக் காண முடியும் என்று.
அப்பர், மாணிக்க வாசகர் எல்லாம் இப்படிப்பட்ட நிலையில் இருந்து , இறைவனையும் கண்டதால் தேவாரமும் திருவாசமும் பாடி, காலத்தால் அழிக்க முடியாத இடம் பெற்றனர். ஆயினும் நம்மைப் போன்றோருக்காக இப்படி ‘இருதலைக் கொள்ளி எறும்பு போல’ தவிப்பதாகப் பாடிச் சென்றனர். இதோ அப்பர் பெருமானின் அருட் புலம்பல்:–
உள்குவா ருள்ளத்தானை யுணர்வெனும் பெருமையானை
உள்கினே நானுங்கண்பா நுருகினே நூறியூறி
எள்கினே நெந்தைபெம்மா நிருதலை மின்னுகின்ற
கொள்ளிமே லெறும்பெனுள்ள மெங்கனங் கூடுமாறே
–நாலாம் திருமுறை
பொருள்
தன்னை நினைப்பவர்களின் உள்ளத்தில் நின்று அவர்களுடைய உணர்வாக நிற்பவன் இறைவன்.
அவரை நான் உள்கி, உருகி, ஊறி நின்று, அரியவராகக் கொள்ளாது எளியவனாகக் கருதினேன். இரு பக்கமும் நெருப்பு மின்னி எரிய , இடைப்பட்ட எறும்பு போல, என் உள்ளமானது பரிதவிக்கின்றது. ஈசனுடைய திருவடிப் பேற்றை அடைய வேண்டும் என்று உள்ளம் அலை பாய்கின்றது.
பதவுரை:
உள்குவார் உள்ளத்தான் =நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொண்டவன்;
உணர்வு என்னும் பெருமையானை = பரமசிவன் தலைசிறந்த பெருமையாகிய அருளை உடையவன்;
உள்கினேன் ஊறி ஊறி உருகினேன்; ஊறுவது அன்பு, உருகுவது உள்ளம்;
எள்கினேன் = அரியனாகக் கருதாது எளியனென்று கொண்டிட்டேன்;
இரு தலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பு = இரு பக்கமும் எரிகின்ற கொள்ளிக் கட்டையின் நடுப்பக்கத்தில் நின்று கொண்டு போக வழி இல்லாமல் சிக்கிய எறும்பு போல;
எறும்பு= உள்ளத்துக்கு உவமை.
மாணிக்கவாசகரும் இருதலைக் கொள்ளியினுள் எறும்பு ஒத்து நினைப் பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய்– — என்று பாடியது காண்க.
–நீத்தல் விண்ணப்பம்
இறைவனின் புகழ்பாடுவோர் எல்லோரும் ஒரே விஷயத்தை அழகு தமிழில்- பழகு தமிழில் – சொல்லுகின்றனர். சிலர் நெற்றியில் மூன்று படுக்கைக் கோடுகளை (விபூதி) வரைகின்றனர்; மற்றும் சிலர் நெற்றியில் நெடுக்கைக் கோடு (நாமம்) வரைகின்றனர். எல்லாம் பூமியிலிருந்து கிடைப்பனவே; வேஷம் வேறானாலும் சொல்ல வந்த விஷயம் ஒன்றே; இதை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பதிகங்களுடன் ஆழ்வார்கள் பாடிய திவ்வியப் பிரபந்த பாசுரங்களை ஒப்பிடுகையில் அறியலாம்.
இதோ ஓரிரு படல்கள் மட்டும்!
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்— பூதத்தாழ்வார்
அறிவைக் கொடுக்கும் தமிழ் நூலை இயற்றிய நான் , அன்பு அகலாகவும்,ஆர்வம் நெய்யாகவும் இனிய மனத்தைத் திரியாகவும், மெய்யுணர்வு மயமான உள்ளுயிர் கிளர்ந்தெரியும் விளக்கை நாராயணனுக்கு ஏற்றினேன்
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக — செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடராழி நீங்குகவே என்று — பொய்கையாழ்வார்
பொருள்:-
இந்த உலகமே ஒரு அகல்; அதைச் சூழ்ந்த கடலே அதிலுள்ள நெய்;செங்கதிரே/சூரிய ஒளியே தீச்சுடர் என்று ஒளி பொருந்திய திருமாலின் (ஆழியானின்) திருவடிகளுக்கு இடர்கள் நீங்க, நான் பாமாலை சூட்டினேன்
இடர் ஆழி= துயரக் கடல்
ஆழ்வார் பாடல்களை அப்பர் பாடலுடன் ஒப்பிடுங்கள்; அழகு புரியும்.
உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகளியாக
மடம்படு முணர்நெய்யட்டி யுயிரெனுந் திரிமயக்கி
இடம்படு ஞானத்தீயா லெரிகொள விருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே
–நாலாந் திருமுறை
பொருள்-
உடம்பு என்னும் வீட்டில் உள்ளத்தை அகல் சட்டியாக்கி, அதில் உணர்வு என்னும் நெய்யை ஊற்றி, உயிரையே திரியாக வைத்து, ஞானத்தீயை ஏற்றினேன். கடம்ப மலர் மாலையை அணிந்த முருகனின் தந்தையான சிவனைக் காண்பதற்கான வழி இது.
உடலான வீட்டில், சிவமான பொருள் இருப்பது, மடமான இருளால் தெரிந்திலது; விளக்கேறிப் பார்த்துணர்தல் வேண்டும். உள்ளமான அகலுள் பசுஞானமான நெய் சேர்த்து, உயிரான திரியிட்டுச் சிவஞானமான தீயால் எரிதலைக்கொள்ள, அச்சிவஞானப் பிரகாசத்திலிருந்து நோக்கினால், சிவமான பொருளைக் காணலாம்.
கடம்பமர் காளை தாதை= கடம்ப மலர் மாலையை விரும்பும் முருகப் பிரானின் தந்தை
திருமங்கை ஆழ்வார்
ஓடினேன் ஓடிச்சென்று உருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சிவாயமே— என்பார் அப்பர் எனும் திருநாவுக்கரசர்
வாடினேன், வாடி வருந்தினேன் மனத்தால்; பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன்; கூடி இளையவர் தம்மொடு அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன்; ஓடி உய்வது ஒரு பொருளால் உணர்வு எனும் பெரும்பதம் திரிந்து
நாடினேன்; நாடி நான் கண்டுகொண்டேந் நாராயணா என்னும் நாமம்
என்பார் திருமங்கை ஆழ்வார். இப்படி ஒப்பிட்டுக்கொண்டே போகலாம்.
------------------
தேவாரத்தைப் பக்தியோடு படிப்பது ஒருவிதம்; ஓதுவாரின் இனிய குரலில் கோவில் பிரகாரங்களில் கேட்டு ரசிப்பது மற்றொரு விதம்; இலக்கிய நயத்துக்காக , இயற்கைக் கட்சிகளுக்காக, தமிழர் வரலாற்றுக்காக படிப்பது மற்றொரு ரகம். இதில் மூன்றாவது ரகத்தைச் சேர்ந்தவன் நான். அந்தக் காலத்தில் தர்மபுர ஆதீனம் வெளியிட்ட ஆராய்ச்சிப் பதிப்பு முதல் இந்தக் காலத்தில் வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்ட அத்தனை பதிப்புக ளையும் புரட்டிப் புரட்டிப் பார்க்கும்போது புதுப் புது கருத்துகள் கிடைக்கும்; எனக்கு மட்டுமா? எல்லோருக்கும்தான்!
அது மட்டுமா? போகிறபோக்கில் மாணிக்கவாசகர், தனக்கு முன் வாழ்ந்தவர், மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தருமி என்ற பிராமணனுக்கு சிவபெருமான் கவிதை எழுதிக் கொடுத்தது, மாமன்னன் மஹேந்திர பல்லவன் தன்னைக் கொடுமைப் படுத்தியது — எனப் பல வரலாற்றுக் காட்சிகளையும் நம் முன் அப்பர் படைக்கிறார். படிக்கப் படிக்கத் தெவிட்டாதது தேவாரம், திவ்யப் பிரபந்தம், திருமந்திரம், திருவாசகம்; எந்தக் கோணத்தில் இருந்து ஆராய்ந்தாலும் இன்ப மழை பொழியும்; அமிர்த தாரை வழியும்; பருகுவார் பருகலாம்.
பார்வதியைக் கண்டு பாம்பு பயந்ததாம்; பாம்பைக் கண்டு பார்வதி பயந்தாளாம்; இதை எல்லாம் வேடிக்கை பார்த்த சிவன் முடியில் உள்ள பிறைச் சந்திரன் ஏங்கியதாம்; இத்தனையையும் தன் தலையில் தாங்கிய சிவபெருமானுக்கு ஒரே சிரிப்பாம்! ஆனால் வாய் விட்டு கெக்கென்று சிரித்தால் காட்சி மறை ந்துவிடக் கூடுமல்லவா?ஆகையால் புன்முறுவல் பூத்தாராம் அகில புவனங்களையும் தன் ஆட்டத்தினால் (நட ராஜ)அசைவிக்கும் எம்பெருமான்!
இது அப்பர் கண்ட காட்சி; சிவ பெருமானை தினமும் பாடும் அப்பர், சொன்ன விஷயத்தையே திரும்பத் திரும்பச் சொன்னால் நமக்கு எல்லாம் ‘போர்’ (BORE) அடிக்கும் அல்லவா? ஆகையால் அவரும் அழகாக கற்பனை செய்கிறார்.
நிறையக் கொடுத்தால் திகட்டிவிடும்!
இதோ அப்பர் தேவாரத்தின் நான்காம் திருமுறையில் இருந்து இரண்டே பாடல்கள்:–
கிடந்தபாம்பு அருகுகண்டுஅரிவை பேதுறக்
கிடந்தபாம்பு அவளையோர் மயிலென்று ஐயுறக்
கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே
கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே
-திருவதிகை வீரட்டானப் பதிகம், நாலாம் திருமுறை
பொருள் சிவன் திருமுடியில் தவழும் பாம்பானது, சிவபெருமானின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் உமா தேவியாரைக் (பார்வதி) கண்டு அஞ்சுகின்றது; ஏனெனில் அவள் மயில் போல இருக்கிறாள். உமாதேவியோ பாம்பைக் கண்டு பயப்படுகிறாள்; ‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பது தமிழ்ப் பழமொழி அல்லவா? இதைப் பார்க்கும் சிவன் முடியிலுள்ள பிறை ஏங்குகின்றதாம்; கிரஹண காலத்தில் நிலவை விழுங்குவது பாம்பு அல்லவா? இதை எல்லாம் வேடிக்கைப் பார்க்கும் சிவனோ மென்முறுவல் பூக்கிறார்.
சிறுவர்களிடம் அச்சம் உண்டாக்க நாம் சில பொம்மைகளைப் போட்டுவிட்டு அவர்கள் பயப்படும்போது, கண்டு ரசிக்கிறோம் அல்லவா? அது போல சிவனும் சில விஷமங்களைச் செய்கிறார். ஆனால் குழந்தைகளைப் பயமுறுத்திய தாய் பின்னர் எப்படி குழந்தைகளை அனைத்து பயப்படாதே அவை வெறும் பொம்மை என்று ஆறுதல் சொல்லுவது போல ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து அருளும் சிவன் எல்லோரையும் காப்பான்.
அப்பர் இதை ஒரு சிறிய நகைச் சுவை தோன்ற அமைத்து இருக்கிறார். இது போல சங்க இலக்கியப் பாடல்களிலும் நகைச் சுவை உண்டு. உண்மையான நவாப் பழங்களை (நாகப் பழம்) வண்டு என்று பயப்படும் குரங்குகளையும், வண்டுகளை நாகப்பழம் என்று நினைத்து வாயருகே கொண்டுபோகும் குரன்குகள், திடீரென்று அஞ்சி அவைகளை விட்டெறிவதையும் தமிழ்ப் பாடல்களில் கண்டு ரசிக்கலாம்.
இதோ இன்னும் ஒரு தேவரப் பாடலிலும் அப்பர் இதே கருத்தைச் சிறிது மாற்றிப் பாடுகிறார்:-
நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்சை யென்று
வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து
பாதத்தில் நிமிர்தல் செய்யாத் திங்களை மின்னென்று அஞ்சி
ஆகத்திற் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே
–திருவாரூர்ப் பதிகம்
பொருள்:-
சிவபெருமான் திருமுடியில் தரித்திருக்கும் நாகத்தைக் கண்டு, கங்கையானவள் அஞ்சுகிறாள்; அந்த நங்கையை மயில் என்று கருதி நாகப் பாம்பு அஞ்சுகின்றது! சிவபெருமான் போர்த்தி இருக்கும் யானையின் தோல் கருப்பு நிறத்தில் மேகம் போலக் காட்சி தருகிறது. அதில் பிறைச்சந்திரன் பளிச்சென்று மின்னியவுடன் பாம்பு அதை இடி மின்னல் என்று நினைத்து அஞ்சுகின்றது (‘இடி கேட்ட நாகம் போல’ என்பது தமிழ்ப் பழமொழி) இத்தன்மையுடன் விளங்கும் பெருமானே ஆரூரில் வீற்று இருக்கிறான்.
மயில்- பாம்பு பகைமை, இடி- பாம்பு பகைமை, மனிதன்-பாம்பு பகைமை ஆகியவற்றைக் கொண்டு நயம்படப் பாடியிருக்கிறார் அப்பர் என்னும் திருநாவுக்கரச நாயனார்.
----------------------------------------------------------------------------------------------------------
கரும்பு பிடிக்குமா? இரும்பு பிடிக்குமா?அப்பர் கேள்வி
கரும்பு பிடித்தவர் காயப்பட் டாரங்கொர் கோடலியால்
இரும்பு பிடித்தவ ரின் புறப்பட்டா ரிவர்கணிற்க
அரும்பவிழ் தண்பொழில் சூழணி யா ரூமர்ந்தபெம்மான்
விரும்பு மனத்தினை யாதென்று நானுன்னை வேண்டுவதே
–நாலாம் திருமுறை- தேவாரம், அப்பர்
மூவர் அருளிய தேவாரத்தைப் பல கோணங்களில் படிக்கலாம்.
சம்பந்தர் தன்னைப் பாடினார்
அப்பர் என்னைப் பாடினார்
சுந்தரர் பெண்ணைப் பாடினார்
என்று சிவன் சொல்லுவதாக சிலர் சொல்லுவர்; இது ஒரு கோணம்
தேவாரத்தில் வரும் இயற்கை வருணனை, சிவ பெருமானின் லீலைகள் வருணனை, திருத்தலங்களின் சிறப்பு, அவர்கள் செய்த அதிசயங்கள பற்றிய பாடல்கள், வரலாற்று உண்மைகள், சம்பவங்கள், திருநீறு முதலிய சின்னங்களின் மகிமை, தமிழ் மொழி அழகு, எதுகை, மோனை, பழமொழிகள், அக்காலத் திருவிழாக்கள் — என்று நாம் விரும்பும் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
நான் படித்தவரை, அதிசய நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தர் தேவாரமும் வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு அப்பர் தேவாரமும் மிக உதவும் என்று கண்டேன்.
சங்கம் பற்றியும், தருமி பற்றியும் அப்பர் பாடியதால், 1400 ஆண்டுகளுக்கு முன்னர்– சங்க காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த ஒரு புகழ்பெற்ற காட்சி நம் கண்களுக்கு முன்னே வருகிறது (திருவிளையாடல் சினிமாவிலும் காணலாம்)
நரியைப் பரியாக்கிய சம்பவத்தை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் சொன்னதால், மாணிக்க வாசகப் பெருமான் , அப்பருக்கும் சம்பந்தருக்கும் சற்று முன்னர் வாழ்ந்தவர் என்பதையும் அறிகிறோம்.
மூவர் தேவாரமும் மணிவாசகப் பெருமானின் திருவாசகமும், 12 ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தமும், திருமூலரின் திருமந்திரமும் படிக்கப் படிக்கத் தெவிட்டாதவை . பல அதிசயச் செய்திகள் நிறைந்தவை; பாஸிட்டிவ் எண்ணங்களை உருவாக்குபவை.
‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை ‘ — என்று சம்பந்தர் பாடியதைப் படிக்கையில் தற்காலத்தில் ராஜாஜி எழுதி எம்.எஸ். பாடிய “குறையொன்றுமில்லை, கோவிந்தா” என்ற பாடல் நினைவுக்கு வரும்.
சுருங்கச் சொன்னால் ரிக் வேதம், யஜூர் வேதம் போல எங்கே பார்க்கினும் பாஸிட்டிவ் எண்ணங்கள்! வீட்டில் ஒலித்தால் துன்பங்கள் யாவும் கரைந்துபோகும்.
ஒரு பாடலில் அப்பர் பெருமான கரும்பு பிடித்தவனுக்கும் இரும்பு பிடித்தவனுக்கும் என்ன நேர்ந்தது என்று பாடி, “ஏ, சிவ பெருமானே உனக்கு கரும்பு பிடிக்காதா? இரும்புதான் பிடிக்குமா?” என்று வியக்கிறார்.
சிவ பெருமானைப் பாடுகையிலும் கூட அரைத்த மாவையே அரைக்காமல் பல உண்மைச் சம்பவங்களைச் சொல்லி விடுகதை போடுகிறார் திருநாவுக்கரசர்! நாவுக்கு அரசன் அல்லவா?
இதோ பாடலின் முழுப்பொருள்:–
கரும்பு பிடித்தவர்= மன்மதன்; சிவனால் எரிக்கப்பட்டவர்
இரும்பு பிடித்தவர் = சண்டேசுவர நாயனார்; சிவன் அருள் பெற்றவர்
சுவையான கரும்பாகிய வில்லை உடைய மன்மதனை எரித்து, இரும்பாகிய கோடலியைக் கொண்ட சண்டேசுவரருக்கு அருள்பாலித்த – மகிழ்வித்த — பெருமான் ஈசன் — பொழில் சூழ்ந்த ஆரூரில் வீற்றிருப்பவனே! எனக்கும் உம்மைப் பிடிக்கும்; யாது வேண்டுவது? உமக்கு கரும்பு பிடிக்குமா? இரும்பு பிடிக்குமா?
------------------
காலன் மட்டும் அறிந்த கழலடி!
தரும தேவதையாகத் திகழும் யமனைக் கண்டால் எல்லோருக்கும் ஒரு வெறுப்பு. பயம். கவிஞர்களுக்கோ சொல்லவே வேண்டாம்.
பாரதியார் உட்பட அனைவருமே காலா என்னருகே வாடா, உன்னைக் காலால் சற்றே எட்டி மிதிக்கிறேன் என்ற அளவில் தான் பாடுவர்.
அப்பர் பிரான் சிவனின் காலால் யமன் எட்டி உதைக்கப்பட்ட சம்பவத்தை பற்பல பாடல்களில் எடுத்துக் கூறுவார்.
ஆனால் அவரே யமனின் அதி புத்திசாலித்தனத்தைப் பாராட்டி மகிழும் பாடலும் ஒன்று உண்டு.
யமன் எப்படி புத்திசாலித்தனமாக நடந்து கொண்டான்?
சிவனின் முடியைத் தேடி அலைந்த பிரம்மாவால் அதைக் கண்டுபிடிக்க முடிந்ததா? இல்லை.
தோல்வி தான் மிச்சம்.
சிவனின் அடியைத் தேடிச் சென்ற விஷ்ணுவால் அடியைக் காண முடிந்ததா? இல்லை.
தோல்வி தான் மிச்சம்.
ஆனானப்பட்ட பிரம்மா, விஷ்ணுவால் செய்ய முடியாத காரியத்தை எப்படிச் செய்வது.
யமன் யோசித்தான்.
மாற்றி யோசித்தான். ஒரு சின்ன தந்திரம் செய்தான்.
அதன் விளைவாக சிவ பக்தனான மார்க்கண்டேயன் மீது ‘துணிந்து’ பாசக் கயிறை வீசினான்.
விளைவு, யாருமே பார்க்க முடியாத சிவனின் காலால் உதையுண்டான். சிவன் தரிசனம் சாத்தியமானது.
அந்தக் கழலடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் என்று சொல்லவும் வேண்டுமா?
பாடினார் அப்பர:-
“மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று, கீழ் இடத்து
மாலும் அறிந்திலன் மால் உற்றதே வழிபாடு செய்யும்
பாலன்மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக்
காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழல் அடியே”
(ஆறாம் திருமுறை – தனித் திரு விருத்தம்- பவளவரைத் தடம் போலும் என்று தொடங்கும் பதிகத்தில் பதினொன்றாம் பாடல்)
காலன் மட்டும் அறிந்த கழலடி சிவனது அடி!
அறிதற்கு அறியா கழல் அடியை யமன் மட்டும் அறிந்ததை அப்பர் இப்படிப் பாராட்டுகிறார்.
கொள்ளப்பட்டுள உயிர் :கம்பன் கூறும் ஜாக்பாட்!
அடுத்து கம்பனுக்கு வருவோம்.
கம்பன் பல பாடல்களில் யமனைப் பாடியுள்ளான்.
ஆனால் அவனது ஜாக்பாட் பாடல் யமனுக்கு அடித்த ஜாக்பாட் பற்றித் தான்!
அனுமன் இலங்கைக்குள் புகுந்து அசுரரை அழிக்க ஆரம்பித்தான். இராவணனின் புதல்வனான அக்ககுமாரன் – (அட்சகுமாரன்)என்பான் அனுமனுடன் போரிட வந்தான்.
அவ்வளவு தான், அனுமன் யமனுக்கு நண்பன் ஆகி விட்டான்.
ஒரு உயிர், இரண்டு உயிர் என்று எவ்வளவு நாள் எடுத்துக் கொண்டு போவான் யமன்.
ஜாக்பாட் அளவில் கொள்ளை கொள்ளையாக் உயிர்களைக் கொண்டு போக வகை செய்தான் அனுமன்.
பாடலைப் பார்ப்போம்:
பிள்ளப்பட்டன நுதலோடைக்கைர் பிறழ்பொற் தேர்பறி பிழையாமல்
அள்ளப்பட்டழி குருதிப் பொருபுனலாறாகப்படி சேறாக,
வள்ளப்பட்டன மகரக் கடலென மதிள் சுற்றியபதி மறலிக்கோர்
கொள்ளைப்பட்டுள வுயிரென்னும்படி கொன்றான் ஐம்புலன்வென்றானே
நித்திய பிரம்மச்சாரியாக இருப்பதால் ஐம்புலன் வென்றான் அனுமன்.
தோணிகள் (வள்ளப்பட்டன) நிறைந்த மகர மீன்கள் நிறைந்துள்ள கடலே அரணாக அமைந்துள்ள தனித் தீவு இலங்கை.
(அங்கு போரில்) வருகின்ற பிராணிகளை எல்லாம் அடித்துப் போட்டு அதனால் பெருகும் இரத்தம் ஆறு போல ஓடுகிறது.
அதில உடல் பியக்கப்பட்ட நெற்றியில் வீரப்பட்டம் அணிந்த யானைகளும் தேர்களும் குதிரைகளும் அந்த ஆற்றில் படிந்த சேறாக மாறும் படி யுத்தம் செய்கிறான் அனுமன்!
மறலிக்கு (எமனுக்கு) கொள்ளைப்பட்டுள உயிர் எனும்
எராளமான உயிர் என்னும் ஜாக்பாட்டை அளித்தான் அனுமன்!
ஓய்ந்து உலந்த எமன்
யமனின் நிலை பற்றி ஏற்கனவே கிங்கரர் வதைப் படலத்தில் ஒரு பாடலில் கம்பன் குறிப்பிடுகிறான்.
அனுமனைக் கொல்ல வரும் கிங்கரர்களை அவன் வதை செய்ய அரக்கர்களில் உயிர நீத்த உடல்கள் அரக்கருடைய தெருக்களில் எல்லாம் நிரம்பிக் கிடக்கின்றன.
அதனால் என்ன ஆயிற்று?
பாடலைப் பார்ப்போம்.
ஊனெலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான்
தானெலாரையும் மாருதி சாடுகை தவிரான்
மீன் எலாம் உயிர் மேகமெலாம் உயிர் மேன்மேல்
வானெலாம் உயிர்மற்றும் எலாம் உயிர் சுற்றி
(கிங்கரர் வதைப் படலம் பாடல் 45)
அனுமனால் கொல்லப்பட்ட உயிர்களை எமனால் எடுத்துச் செல்ல முடியவில்லை.
உடம்புகளிலிருந்து உயிரைக் கவரும் காலன் ஓய்ந்து வலிமை கெட்டான்.
அதனால் எடுத்துப் போவாரின்றி நட்சத்திர மண்டலம் எல்லாம் உயிர்.
மேக மண்டலம் எல்லாம் உயிர்.
மிக உயரத்தில் உள்ள ஆகாயம் எல்லாம் உயிர்.
மற்றுமுள்ள இடைவெளி எல்லாம் உயிர்,
எப்படி இருக்கிறது யமனுக்கு வேலை, பாருங்கள்!! எல்லா உயிரையும் ‘கலெக்ட்’ செய்து – சேகரித்துக் கொண்டு செல்ல வேண்டும் அவன்!
எப்படி ஒரு காட்சியை நம் முன்னே கொண்டு வருகிறான் கம்பன்!
உலக மொழிகளில் எல்லாம் ஒப்பற்ற இலக்கியம் தமிழ் இலக்கியம்
இது போல “யமப் பாடல்கள்” தமிழ் இலக்கியத்தில் நூற்றுக் கணக்கில் உள்ளன. தமிழ் இலக்கியத்தில் மட்டுமே இப்படிப்பட்ட பாடல்கள் உள்ளன.
***
--------------------------
பிறப்பு-இறப்பு என்னும் பெருங்கடலில் இருந்து தப்பிக்க என்ன வழி என்று அப்பரும், மாணிக்க வாசகரும் சொல்லும் வழிகள் இலக்கிய நயம் படைத்த பாடல்கள் ஆகும். முதலில் மாணிக்க வாசகர், திருவாசகத்தில் கூறியதைப் பார்ப்போம்:-
தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்
தடத்திரையா லெற்றுண்டு பற்றொன்றிக்
கனியை நேர் துவர் வாயாரென்னும் காலால்
கலக்குண்டு காமவாள் சுறவின் வாய்ப்பட்
டினி யென்னே யுய்யுமாறென்றென்றெண்ணி
அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை
முனைவனே முதலந்தமில்லா மல்லற்
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே (27)
— திருவாசகம் திருச்சதகம்
பொருள்:
கடவுளே! நான் பிறவிப் பெருங்கடலில் (ஒப்பிடுக- குறள் “பிறவிப் பெருங்கடல் நீந்துவார்…..) விழுந்தேன்; துன்பங்கள் என்ற அலைகள் என்னை ஆட்டிப் படைக்கின்றன; கொவ்வைக்கனி போல சிவந்த வாயுடைய பெண்கள் என்ற புயற்காற்றும், காமம் என்னும் சுறாமீன்களும் (ஒப்பிடுக-ஆதிசங்கரரின் விவேக சூடாமணி ஸ்லோகம் 79, 141) என்னைப் பிடித்துவிட்டன. என்ன செய்வதென்று திகைத்தபோது ஐந்தெழுத்து என்னும் படகு கிடைத்தது. அதைப் பற்றிக்கொண்டு விட்டேன்; நீ என்னைக் காத்தருள்வாயாக.
பிறவிப் பெருங்கடல் என்பது கீதை முதலிய சம்ஸ்கிருத நூல்களில் காணப்படும் சம்சார சாகரம் என்பதன் தமிழ் வடிவமாகும்.
பக்தர்கள் இரண்டு வகை. பூனைக்குட்டி, குரங்குக் குட்டி போல இரண்டு வகையினர். ஆனால் மாணிக்க வாசகரும் அப்பரும் அதற்குப் பதிலாக ஏணியையும் தோணியையும் (படகு, தெப்பம்) பயன்படுத்துகின்றனர். ஐந்தெழுத்து என்பது நமசிவாய என்னும் அரிய பெரிய மந்திரம். யஜூர்வேதத்தில் ருத்ரம் என்னும் பகுதியில் அமைந்த மந்திரம் ஆகும்.
மற்கட நியாயம், மார்ஜர நியாயம்
இதை பல தருணங்களில் பல விஷயங்களை விளக்கப் பயன்படுத்தலாம். இருந்த போதிலும் பக்தர்களின் வகைகள் எத்தனை என்று விளக்க இதைப் பெரும்பாலும் பயன்படுத்துவர்.
பக்தி இலக்கியத்தைப் படைத்தவர்கள் பொதுவாக பக்தர்களை இரண்டு வகையாகப் பிரித்து இருக்கின்றனர். குரங்கு போன்ற பக்தர்கள், பூனை போன்ற பக்தர்கள் என்று.
குரங்குகள் என்ன செய்யும்? மரத்தை விட்டு மரத்துக்கு தாவிக் கொண்டே இருக்கும். அதனுடைய குட்டியும் கூடவே செல்ல வேண்டும்.. இதற்கு என்ன வழி? குரங்குக் குட்டி தனது தாயை இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்ளும். எத்தனை உயரத்தில் இருந்து குரங்குகள் கீழே குதித்தாலும், மேலே தாவினாலும் மிக மிக அபூர்வமாகவே குட்டி கீழே விழும். ஆக பக்தர்களில் குரங்கு போன்ற பக்தர்கள் தாமாகவே சென்று இறைவனைப் பிடித்துக் கொள்வார்கள். தமிழில் ‘குரங்குப் பிடி’ என்ற சொற்றொடரே இருக்கிறது.
மாணிக்கவாசகர் போன்ற அடியார்கள், “சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே” என்று பாடுவர்.
பூனைகள் என்ன செய்யும். குட்டி போட்ட பின்னர், தாய்ப் பூனை இடம் விட்டு இடம் போனால் குட்டியை தானே வாயில் கவ்விக் கொண்டு போகும். குட்டிகளோ வெறும் ஜடம் போல சும்மா இருக்கும். அதாவது எல்லாப் பொறுப்புகளையும் அம்மாவிடம் விட்டுவிட்டு அம்மாவே பார்த்துக்கொள்ளட்டும் என்று குட்டிப் பூனை பேசாமல் இருந்துவிடும். இது மற்றொரு வகை பக்தர்களுக்கு எடுத்துக்காட்டு.
சுருக்கமாக, நாமே சென்று கடவுளைச் சிக்கெனப் பிடித்தால் நாம் குரங்கு போன்ற பக்தர்கள். எதையுமே கேட்பதில்லை. கடவுள் விட்ட வழி என்று அவனைச் சரண் அடைந்து இருப்பவர்கள் பூனை போன்ற பக்தர்கள்.
இதே மற்கட, மார்ஜர நியாயத்தை அப்பர் பெருமான் தனக்கே உரிய பாணியில் வழங்குகிறார். அவர் பக்தர்களை 1.ஏணி வகை, 2.தோணி வகை என்று இரண்டாகப் பிரிக்கிறார்.
ஏணி என்ன செய்யும்? தாமாக மேலே ஏற முயன்றவர்களை மேலே ஏற்றிச் செல்லும். நாம் தான் ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். இது மற்கட நியாயத்துக்கு சமம். எப்படிக் குரங்குக் குட்டிகள் தாயை இறுகப் பற்றியதோ அப்படி நாமும் ஏணியைப் பிடிக்கவேண்டும். இது ஏணி நியாயம்.
தோணி (படகு) வகைப் பக்தர்கள் எப்படிப்பட்டவர்கள்? படகில் ஏறிவிட்டால், படகோட்டியே நம்மை அக்கரைக்குக் கொண்டு செல்லுவான். அதற்குப் பின்னர் நம் வேலை எதுவும் இல்லை. இது பூனை வகை பக்தர்களுக்குச் சமம். இறைவனைச் சரணடைந்துவிட்டு ஆண்டவனே நீயே என்னை அக்கரைக்கு கொண்டு செல் என்று அவன் கையில் பொறுப்பை ஒப்படைத்து விடும் பக்தர்கள் இந்த வகையில் வருவர். இது தோணி நியாயம்.
இதோ பாருங்கள், அப்பர் பெருமானின் ஆறாம் திருமுறை தேவாரப் பாடலை:–
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை
பித்தர் தம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை, இடர்க்கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு,
இளைகின்றேற்கு அக்கரைக்கே ஏற வாங்கும்
தோணியை, தொண்டனேன் தூய சோதிச்
சுலா வெண்குழையானை, சுடர் பொன்காசின்
ஆணியை, — ஆவடுதண்துறையுள் மேய
அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்தேனே (6—461)
பொருள்: பிறை சூடிய பெருமான் (சிவன்), அவனுடைய பக்தர்களை முக்தி பெற அழைத்துச் செல்லும் ஏணி ஆவான். பிறவிக் கடல் என்னும் துன்பக் கடலில் சிக்கித் தவிக்கும் என்னை அக்கரைக்கு , அதாவது, முக்திக்கு அழைத்துச் செல்லும் தோணி போன்றவன் அவன். காதில் ஆடும் அழகான வெள்ளை நிறக் குழை அணிந்தவன். பொற்காசை உரைத்து பார்க்கும் கட்டளைக்கல் போன்றவன். குளிர்ந்த ஆவடுதுறையில் வசிக்கும் அவனைக் கடையனுக்கும் கடையேனாகிய நான் அடைந்து உய்வுபெற்று விட்டேன்.
இவ்வாறு திருக்குறள், விவேக சூடாமணி, தேவாரம், திருவாசகம் ஆகிய பல நூல்களில் ஒரே கருத்து நிலவுவது பாரதீய அணுகுமுறை ஒன்றே என்பதை எடுத்துக்காட்டும்.
–_________________
காதல் வயப்பட்ட ஆணோ பெண்ணோ என்ன செய்வார்கள் என்று வடமொழியில் ஒரு அழகான ஸ்லோகம் இருக்கிறது. இதை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இன்பம் பயக்கும்.
I
அஷ்டாங்க மைத்துனம்
ஸ்மரணம் கீர்த்தனம் கேலி: ப்ரேக்ஷணம் குஹ்யபாஷணம்
சங்கல்போ(அ)த்யவசாயஸ்ச க்ரியாநிஷ்பத்திரேவ ச
-விருத்த வசிஷ்டர்
பொருள்:-
ஒரு பெண்ணை நினைத்த்ல், அவளைப் பற்றிப் பிதற்றல், , அவளுடன் விளையடல், அவளைப் பார்த்தல் (அடிக்கடி), அவளுடன் கிசுகிசு ரஹசியம் பேசல் (மொபைல்போன், பேஸ்புக், ஈ மெயில் மூலம்), அவளுடன் அனுபவிக்க வேண்டியது பற்றி எண்ணுதல்/கனவு காணுதல், அவைகளை அடைய திட்டமிடல்/முயற்சி செய்தல், இதன் காரணமாக செய்ய வேண்டிய கடமைகளை மறந்துபோதல் என்று அஷ்டாங்க மைதுனம் (எண்வகைப் புணர்ச்சி) பற்றி முதுவசிட்டன் சொல்லுகிறான்.
இந்தக் கருத்துகளை அப்பர் பெருமான் தனது தேவாரப் பாடலில் அப்படியே வடித்துள்ளார்:
அப்பர் தேவாரம்
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;
அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தே ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்
தலைப் பட்டாள் நங்கை தலைவன் றாளே
—–தேவாரம், ஆறாம் திருமுறை, பாடல் 258
சங்க இலக்கியத்தில் அகப்பாட்டுகளைப் படித்தோருக்கு காதலன், காதலியின் நிலை விளங்கும். அப்பர் கூறிய பக்திப் பித்தை, பைத்தியத்தை அங்கும் காணலாம்.
கடவுளை காதலனாக, தாயாக, தந்தையாக, நண்பனாக, எஜமானனாக,வேலைக்கரனாக பார்த்து உரிமை கொண்டாடும் அற்புதமான அணுகுமுறை இந்துமதத்தில் மட்டுமே உண்டு. இதை அடியார்களின் பாடலில் காணலாம். இமயம் முதல் குமரி வரை பல மொழிகளில் இக்கருத்துகள் உள. நமது காலத்தில் பாரதியார், இதே போல கண்ணபிரானைப் பாடிப் பரவியுள்ளார்.
பக்தனின் ஒன்பது நிலைகளை நாரத பக்தி சூத்திரம், பாகவதம் ஆகியவற்றிலும் காணலாம்.
பாகவத புராணத்தில் வரும் ஸ்லோகம் இதோ:
ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம் (பாகவதம் 7-5-23)
அதாவது கடவுளின் நாமத்தைக் 1.கேட்டல், பக்திப் பரவசத்துடன் 2.பாடுதல், கடவுளின் பெயரை சதாசர்வ காலமும் 3.நினைத்தல், அவனுடைய பாதாரவிந்தங்களில் 4.பணிவிடை செய்தல், பூவாலும் இலையாலும் பொன்னாலும் மணியாலும் அவனை 5.அர்ச்சித்தல், அவனை சிரம் மேற் கைகூப்பி 6.வணங்குதல், அவனுக்கு 7.அடிமைபோல பணியாற்றல், அவனை உயிருக்குயிரான 8.நண்பனாகக் கருதல், இருதயபூர்வமாக 9.தன்னையே அர்ப்பணித்தல் ஆகிய ஒன்பது செயல்களைப் பக்தனிடம் காணலாம். இவைகளை ஆண்டவனுக்கு மட்டுமின்றி இறையடியார்க்கும் செய்வர்.
ஆக, பக்திப் பைத்தியமும் காதல் பைத்தியமும் ஒன்றே! இவ்வளவையும் எழுதிய நம்முடைய முன்னோர்கள் இன்னொரு விஷயத்தையும் தெளிவாக எழுதிவைத்து விட்டனர்.
பக்திப் பைத்தியம், பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்லும். அது நித்தியானந்தம், பிரம்மானந்தம் தரும். பக்திக்கடலில் நீந்தி, முக்தி நிலையை அடைந்து விடுவர்.
ஆனால் காதல் பைத்தியமோ, சிற்றின்பமே; மேலும் அது சம்சார சாகரத்தில் — அதாவது பிறவிப் பெருங்கடலில் – நம்மை மூழ்கடித்து, தத்தளிக்கச் செய்துவிடும். இது திகட்டக்கூடியது. முன்னது தெவிட்டாத சுவயுடைத்து என்பது ஆன்றோர்களின் அனுபவ மொழி!
-------------------------------------------------------
தேவார சுகம்
வெகுண்டெழுந்த அப்பர் விரட்டுவது எவற்றை?
ச.நாகராஜன்
சாது மிரண்டால்!
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது பழமொழி.
அருளாளரான அப்பரே விரட்டுகிறார் என்றால், அதில் இருக்கும் விஷயம் பொருள் பொதிந்த ரகசிய விஷயமாகத் தானே இருக்க வேண்டும்!
கெடுவீர்காள் (நீங்கள் கெட்டு அழிந்தொழிவீர்கள்) எனக் கடுமையாக எச்சரிக்கிறார்!
தருக்கேன்மின்னே, நீர் நடமின்களே (கர்வப் படாதீர்கள், விட்டுப் போய்த் தொலையுங்கள்) என்று விரட்டுகிறார்!
ஈங்கு அலையேன்மின் (இங்கு கிடந்து அலையாதீர்கள் எனத் திருப்பித் திருப்பிச் சொல்கிறார்?
என்ன விஷயம்? உலகைப் படாத படுத்தும் மாய சக்திகளைப் பட்டியலிடுகிறார் அவர், அது தான் ரகசியம். அவற்றை அழைத்து, என்னிடம் வராதீர்கள்; வந்தால் அழிந்து ஒழிவீர்கள்; நான் சிவனின் பக்தன் என்று கூறி அவற்றை விரட்டுகிறார்!
அதன் மூலம் மாய சக்திகளை நமக்கு இனம் காட்டி நம்மை ஜாக்கிரதையாக இருக்குமாறு ரகசிய அறிவுரை தருகிறார்!
---------
ஓடுங்கள், மாய சக்திகளே!
புண்ணியங்களே! தீவினைகளே! திருவே! இம்மாயக் கடலை அரித்துத் தின்னும் உங்களுக்கு என்னிடம் இடம் கிடையாது. நல் ஆரூர் தடங்கடலை, சிவபிரானின் திருவடியைப் பற்றித் தொடர்கின்றேன், எனக்கு இடர் தந்தால் கெட்டு ஒழிவீர்கள்! (ஜாக்கிரதை!)
ஐம்பெரும் மா பூதங்களே! இந்த பூமி எல்லாம் உம் வசமாக்க வல்ல திறனை உடையவர்கள் நீங்கள்! ஆனால் நீங்கள் என்னை நுகர்ந்து போகம் அனுபவிக்க விட மாட்டேன். நான் ஆரூர் அமிர்த வள்ளலின் அடியவன். உங்கள் தருக்கை விட்டு விடுங்கள்! (என்னிடம் அது செல்லாது)
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனப்படும் ஐந்து புலன்களே! ஐயோ! உங்களுக்கு இந்த வையகமே போதாதே! ஆரூர் சிவக் கொழுந்து என் சிந்தையில் உள்ளான். ஆகவே உங்கள் கர்வம் என்னிடம் செல்லாது!
வெற்றியுடன் சோர்வு படுத்தும் சூழ்ச்சியே! உங்களிடம் உலகம் எல்லாம் உழறும். ஆனால் என்னிடமோ உங்கள் ஆட்டம் பலிக்காது. எம்பெருமானை அடைந்தவன் நான்! இங்கு வந்து வீணே அலையாதீர்கள்!
பொங்கு மதமே, மானமே! ஆர்வமே! செற்றமே! குரோதமே! லோபமே! பொறையே!
துன்பமே! பாவமே ஆசையே வெறுப்பே! வறுமையே! செல்வமே! பொல்லா வெருட்சியே! மகிழ்ச்சியே! வெறுப்பே! நீங்கள் இந்த பூமியையே அரித்துத் தின்று விடுவீர்கள்! ஆனால் நீங்கள் நுகரும் போகம் நான் அல்ல! என்னிடம் உங்கள் வேலை பலிக்காது! நான் கற்பகத்தை, தற்பரத்தை, ஆரூர் பரஞ்சோதியை நாடி வந்து விட்டேன். ஓடிப் போங்கள்!
சுருக்கமே! பெருக்கமே! காலநிலையே! செல்வமே! வறுமையே! இந்த உலகைச் சுற்றி உங்கள் ஆட்சியைச் செலுத்துவது போதாதா? எம்பிரான் பாதம் பற்றிய என்னிடம் வந்தால் கெட்டு அழிவீர்கள்!
இப்படி வெகுண்டு சக்தி வாய்ந்த சொற்களால் அப்பர் விரட்டுகிறார் என்றால் அந்த உலக மாயைகள் எப்படிப் பட்ட வல்லமை படைத்தவையாக இருக்க வேண்டும்.
கண்ணெதிரே தான் காண்கிறோமே, தினசரி அன்றாட வாழ்க்கையில்.
இவை ஒவ்வொன்றும் படுத்தும் பாடு, அடடா என்ன பாடு படுகிறது இந்த உலகம்! – 750 கோடி உலக மக்களை – எண்ணற்ற கோடி விதங்களில் என்ன பாடு படுத்துகிறது.
வெல்லும் சிவ சக்தி
இவை அனைத்தையும் எதிர்கொண்டு விரட்டவும் வெல்லவும் ஒரே சக்தி, சிவ சக்தி தான்!
அது இருக்கும் போது எதுவும் நம்மிடம் பலிக்காது.
திருஆரூர்ப் பூங்கோயிலில் அப்பர் அருளிய “பொய் மாயப் பெருங்கடலில்” எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடுவோர்க்கு மேலே சொன்ன மாயைகளின் ஜால வேலைகள் பலிக்கவே பலிக்காது. அவரே, “கெடுவீர்காள்! இடறேன்மின்னே” என்று எச்சரித்து விட்ட போது நமக்கு என்ன பயம்!
பத்துப் பாடல்களில் அப்பர் வரிசையாக இனம் காட்டும் மாயைகள்:
புண்ணியம், பாவம், ஐம்பெரும் பூதங்கள், ஐம்புலன்கள், சோர்வு படு சூட்சியம் (வஞ்சனைகள்), செருக்கு, மானம், காமம், பகை, கோபம், கஞ்சத்தனம், பொறை, துன்பங்கள், தீவினை, வேட்கை, வெறுப்பு, வறுமை, செல்வம், கோபம், மகிழ்ச்சி, வெறுப்பு, ஐம்பொறிகளாகிய காக்கைகள், சுருக்கம், பெருக்கம், காலநிலை, செல்வம், வறுமை ஆகியவை (அவர் சொன்ன வரிசைப்படி!)
ஆறாம் திருமுறை – திருவாரூர்ப் பதிகம்
பாடல்களில் சிலவற்றைப் பார்ப்போம் (மீதியையும் தேடிப் படிக்கும் ஆர்வம் நிச்சயம் எழும்!):-
பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற
புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
இம்மாயப் பெருங்கடலை யரித்துத் தின்பீர்க்
கில்லையே கிடந்ததுதான் யானேல் வானோர்
தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்
தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்
எம்மான்ற னடித்தொடர்வா னுழிதர் கின்றேன்
இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே
ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற்
றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம்
உம்பரமே உம்வசமே யாக்க வல்லீர்க்
கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
உம்பருமா யூழியுமா யுலகே ழாகி
ஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர்
தம்பெருமா னாய்நின்ற அரனைக் காண்பேன்
தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே
உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத்
துறுப்பினது குறிப்பாகு மைவீர் நுங்கள்
மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோ
வையகமே போதாதே யானேல் வானோர்
பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்
புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை
தன்னுருவைத் தந்தவனை யெந்தை தன்னைத்
தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே
துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க
சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள்
ஒப்பனையைப் பாவித்திவ் வுலக மெல்லாம்
உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யென்றன்
வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல்
மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள்
அப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும்
ஆட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே
பொங்குமத மானமே ஆர்வச் செற்றக்
குரோதமே யுலோபமே பொறையே நீங்கள்
உங்கள்பெரு மாநிலத்தி னெல்லை யெல்லாம்
உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யானேல்
அங்கமலத் தயனொடுமா லாகி மற்று
மதற்கப்பா லொன்றாகி யறிய வொண்ணாச்
செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை யாரூர்ச்
செல்வனைச்சேர் வேன்நும்மாற் செலுத்து ணேனே
இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை
வெறுப்பேயென் றனைவீரும் உலகை யோடிக்
குடைகின்றீர்க் குலகங்கள் குலுங்கி நுங்கள்
குறிநின்ற தமையாதே யானேல் வானோர்
அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை
அமரர்கள்தம் பெருமானை யரனை ஆரூர்
உடையானைக் கடுகச்சென் றடைவேன் நும்மா
லாட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே
விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா
வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்
நிரைந்தோடி மாநிலத்தை யரித்துத் தின்பீர்க்
கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்
கரைந்தோட வருநஞ்சை யமுது செய்த
கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரில்
பரஞ்சோதி தனைக்காண்பேன் படேன்நும் பண்பிற்
பரிந்தோடி யோட்டந்து பகட்டன் மின்னே
சுருக்கமொடு பெருக்கநிலை நித்தல் பற்றித்
துப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடிச்
செருக்கிமிகை செலுத்தியும செய்கை வைகல்
செய்கின்றீர்க் கமையாதே யானேல் மிக்க
தருக்கிமிக வரையெடுத்த அரக்கன் ஆகந்
தளரவடி யெடுத்தவன்றன் பாடல் கேட்டு
இரக்கமெழுந் தருளியஎம் பெருமான் பாதத்
திடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே
செல்வம், வறுமை, காம, க்ரோதம், மத, லோபம், புண்ணியம், பாவம், சுருக்கம், பெருக்கம், காலநிலை உள்ளிட்ட ஏராளமான மாய சக்திகள் தம் தம் வேலையை இதை ஓதுபவரிடம் காட்ட முன் வருமா, என்ன? வரவே வராது!
பாடலை நிறுத்தி மனதில் சுவைத்து பக்தியுடன் பாராயணம் செய்வோம்; பரமனின் அருளைப் பெறுவோம்.
**************
தேவார சுகம்
நமது கேள்விகளும் அப்பர் பதில்களும்!
ச.நாகராஜன்
நல்ல கேள்விகள் கேட்பவர் சிலரே! அதற்குச் சரியான விடைகள் தருபவர் நிச்சயமாக வெகு சிலரே!
நமக்குப் புரிய வேண்டிய பல விஷயங்கள் குறித்து நம்மவரில் பலர் பளிச் பளிச் என்று கேள்விகள் கேட்க அருளாளர் அப்பர் பளார் பளார் என பதில்களை அள்ளி வீசுகிறார்.
எங்கே! தேவாரத்தில்!!
கேள்விகளும் பதில்களும் இதோ:-
ஞானம் எது? கல்வி எது?
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நன்னெறி காட்டுவது எது? நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே
நமது வினைகள் ஓடிப் போக என்ன செய்ய வேண்டும்?
ஆடிப்பாடி அண்ணாமலை கை தொழ ஓடிப் போம் நமதுள்ள வினைகளே!
துன்பப் படுகிறேன், வினை விடவில்லை, பழைய வினைகள் படுத்துகின்றன, நான் என்ன செய்வது?
அல்லல் என் செயும்? அருவினை என் செயும்?
தொல்லை வல்வினை தொந்தம் தான் என் செயும்?
தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லதோர் அடிமைப் பூண்டேனுக்கே
காக்கைக்கு உடலை இரையாக்குவார் யார்?
பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரையாகிக் கழிவரே (ஆக்கை – உடல்)
இறைவனது திருவடி நீழல் எப்படி இருக்கும்/
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே!
சுவர்க்கம் செல்ல வழி என்ன?
துளக்கில் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும்
மெய்ந் நெறி ஞானம் என்றால் என்ன?
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானம் ஆகும்
நண்பன் யார்?அவனுக்கு என்ன கொடுப்பது?
கண் பனிக்கும்! கை கூப்பும்! கண் மூன்றும் உடை நண்பனுக்கு எனை நான் கொடுப்பன்!
நெஞ்சுக்கு உபதேசம் என்ன?
நக்கரையனை நாள்தொறும் நன்னெஞ்சே! வக்கரை உறைவானை வணங்கு நீ!!
ஈசன் யார்க்கு எளியன்? யார்க்கு அரியன்? வஞ்சகர்க்கு அரியர் போலும், மருவினோர்க்கு எளியர் போலும்!
நன்நெறிக் கண் சேராதவர்கள் யார்? “துரிசு அறத் தொண்டு பட்டார்க்கு எளியானை, யாவர்க்கும் அரியான் தன்னை, இன்கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் தெளியானைத்,
திருநாகேச்சரத்து உளானைச் சேராதார் நன்நெறிக் கண் சேராதாரே!
கிரகமும், நட்சத்திரமும் சரி இல்லை, என்ன செய்வது? “நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார், கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம்! குறிக்கொண்மினே! (குறித்துக் கொள்ளுங்கள்)
இடர் தீர வழி? பொன் ஒத்த நிறத்தானும், பொருகடல் தன் ஒத்த நிறத்தானும் அறிகிலாப் புன்னைத் தாது பொழில் புகலூரரை ‘என் அத்தா’ என என் இடர் தீருமே!
பிறந்தவர்கள் என்று யாரைச் சொல்லலாம்? வஞ்சர் சிந்தையுள் சேர்விலாதார், கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்தப் பெற்றார் பிறந்தவரே! மற்றுப் பிறந்தவர் பிறந்திலரே!!
துயர் கெட வழி?
கந்த வார் பொழில் நாகைக்காரோணனைச் சிந்தை செய்யக் கெடும் துயர், திண்ணமே!
யாருடைய செல்வத்தை மதிக்கக் கூடாது? ஏன்? சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும், மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம், மாதவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்!
யாரைக் கடவுளாக வணங்கலாம்? ஏன்?
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய், ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும், கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளரே!
செத்துச் செத்துப் பிறப்பவர் யார்?
திருநாமம் அஞ்செழுத்து செப்பார் ஆகில்
தீவண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில்
ஒருகாலும் திருக்கோவில் சூழார் ஆகில்
உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில்
அரு நோய்கள் கெட வெண்ணீறு அணியார் ஆகில்
அளி அற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்
பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப்
பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே!
குறை இல்லாமல் இருப்பது எதனால்?
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்,
ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே!
இப்படி அள்ள அள்ள குறையாத பதில்கள் அப்பரின் பதிகங்கள் முழுவதும் நிரம்பியுள்ளன.
நம் கேள்விகளுக்கு உரிய பதில்கள் மட்டும் அல்ல அவை! அனைத்தும் அற்புத இரகசியங்கள்!
***********