உச்சிவெயில்

இன்றைக்கு நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
ரசம் சாதமும் கத்திரிக்காய் கறியும்.
இன்று அவியல் பண்ணியிருக்க கூடும் என்று நினைத்தேன்.

சுள்ளென்று ஒரு எரிச்சலும் கோபமும் பரவ சாப்பிட்டது போல் பாவனை பண்ணிக்கொண்டு வாசலுக்கு வந்து விட்டேன்.

இன்றைய நிப்டியும், சென்செக்ஸும் இறங்கிக்கொண்டே இருந்தது. கம்ப்யூட்டரை அணைத்து விட்டு சாப்பிட உட்காரும்போதுதான் ரசம் சாதம்.

வாசலில் வெயில். ஒரே வெயில். மத்தியானத்தை யாராவது குத்தி கொன்றால் என்ன என்று வந்தது. வெயில் நறநறவென பல்லை  காட்டிக்கொண்டு இளித்தபடி ஒரே இடத்தில் நின்றது. வெகுவாய் சிலர் சாலையில் நடமாடினர்.

எந்த அலுப்பும் இன்றி யாருக்கோ போனில் பேசியபடி அவள் தனியே போய் கொண்டிருந்தாள்.  அவள் அங்கங்களை வெயில் மிருதுவாக தொட்டு தடவி நீவிக்கொண்டிருந்தது.

திண்ணையில் மாறி மாறி உட்கார்ந்து கொண்டு கடந்த காட்சிகளை மனம் நக்கி நக்கி வாலாட்டி நினைப்பதை பொறுக்க முடியாமல் முதுகில் வெயில் சுள்ளென்று எரிய எரிய அமர்ந்து கொண்டேன்.

வேண்டும் எனக்கு. இன்னும் நன்றாக வேண்டும். இன்றைய தகவல்கள் சந்தை நிலவரத்தை கணிக்க முடியாது செய்து விட்டது. தவறி விட்டேன். இன்று நான் அதில் செயல்பட்டிருக்க கூடாது.

போயிற்று. நான்கு மணிக்கு கூப்பிடுவான். சார் நாளைக்கு செக் தருவீங்களா? எப்படி தர முடியும்? எடுத்து கொண்டு போனால் இந்த வெயிலில் போக வேண்டும். நடக்க வேண்டும்.கொடுக்க வேண்டும்.

பணம் பத்திரமாய் வருமா என்று சொல்ல முடியாது. திரும்பவும் போட வேண்டும். காசை காசாக்க நாய் போல உட்கார்ந்து இருக்க வேண்டும்.

யாரோ தின்றது போக எனக்கு மிச்சம் ரசம் சாதமும், கத்திரிக்காய் கறியும். ரேஷன் கடை பாமாயிலில் செய்தது.

திண்ணை வெயில் நரம்பை குத்தியது. இன்னும் சுடும். சுடட்டும். சுட்டு பொசுக்கட்டும். அப்படியே எரிந்து போனாலும் யாருக்கு என்ன நஷ்டம்?

கோபமா...சே..ஒருவேளை அழுகிறேனோ...இல்லை. நானும் அழும் மனிதன் அல்ல. பிண்டம். ஒரு பிண்டம்.
யாரோ என்னை சாப்பிட ருசிக்க கிளம்பி வந்து சேர்ந்திருக்கும் பிண்டம்.இப்போது என்னை வெயில் தின்கிறது. நாளை குளிர் தின்னும்.

வராண்டாவில் வெயில் கூசியது. வெள்ளை வெள்ளையாய் ரத்தத்தை உறிஞ்சி கொண்டிருந்த இந்த வெயில் என் புத்தியை எப்படி சாகடிக்கறது? மரமெல்லாம் வெட்டி தின்றவன் காருக்குள் ஏசி போட்டு குளிர குளிர மொபைலில் என்னவோ பார்த்து கொண்டிருப்பான்.

என்ன பார்ப்பான்...எவளையாவது பார்ப்பான்.எதையாவது அவள் பண்ணிக்கொண்டு இருக்க நவத்துவாரமும் அவன் கொழுப்பு வழிந்து கொண்டிருக்கும். இந்த திண்ணை வெயிலில் நான் மட்டும் புழுக்க வேண்டும்.

போன் ஒலித்தது. ஆயிற்று...அவன்தான்..சார் செக்...

எடுத்தபோது அவன் இல்லை. நான் நினைத்தவனும் இல்லை. எவனோ பேசினான். பேசிக்கொண்டே இருந்தான்.

ரெஜிஸ்டர்ப்போஸ்ட் சார்...போனை வாய்ப்பக்கம் இடுக்கி கொண்டு கையெழுத்து போட்டேன். செத்துப்போன மாமாவுக்கு டிவிடெண்ட் வந்திருந்தது.

இவர் காலமாகி விட்டார் என்று நியாயமான நேர்மையான பதிலை அவரிடம் சொன்னதும் போஸ்ட்கார் கையோடு பிடுங்கி கொண்டு எக்ஸ்பெயர்ட் என்று கிறுக்கிக்கொண்டு போய் விட்டார்.

ஏன் செத்த மனிதனுக்கு சம்சாரம் கூடாதா...அவர்கள் கர்நாடகா பொன்னி வாங்கி பொங்கி திங்க கூடாதா? அவியல் திங்க கூடாதா? ரசம் சாதம்தான்...

என் வாய்க்கொழுப்பின் நேர்மையில் வெயில் செருப்பால் அடித்து சிரித்தது.
இப்படித்தான் இன்று ஆகும். இன்று காலை முதல் எதுவோ சரி இல்லை. வரவேண்டிய போன் வரவில்லை. மார்க்கெட் இல்லை.
வந்த பணமும் போயாச்சு. திண்ணை வெயிலில் ஈ போல் அலைய வேண்டியதுதான். அலைந்தேன்.

வர வேண்டிய போன் இன்றல்ல. நிறைய நாளாய் வரவில்லை. நிறைய நாட்கள் காத்திருந்த போது நிறைய நாள் ரசம் சாதமும் கத்திரிக்கா கறி சாப்பிட்டு இருக்கிறேன். கோபம் வரவில்லை.

இன்று வருகிறது. இந்த வெயில் வந்தவுடன் வருகிறது. அவள் புட்டம் குலுக்கி எவனுடனோ சிரித்து போனில் பேசி கடந்தபோதும் சூடு ஏறி வருகிறது.

ஏன் இப்படி ஆகிறது. திண்ணை மாடிப்படியில் உடம்பை குறுக்கி கொண்டு அமர்ந்தேன். என்ன உடம்பு. நோஞ்சான் உடம்பு. சோறில்லை. இளைத்து கிடக்கிறது.

கேட்டால் பாடி மெயின்டனென்ஸ்.
சிக்குன்னு இருப்பேன் பார்க்கிறதுக்கு. சொல்லிக்கொள்ளலாம் யார் கேட்டாலும். இந்த பீத்த பெருமைக்கு ஒரு குறைச்சலும் இல்லை.

இரண்டரை மணிக்கு வந்து உக்காந்தாச்சு. ஒரு காக்கா குருவி இல்லை. எப்படி இருக்கும்? இருந்த காலத்தில் அதற்கு என்ன கிழித்தோம்?

தெவசம் போட்டு கா கா வென்று கத்தி கூப்பாடு போடலாம். அது எலியை துப்பிவிட்டு வருமா? நாமக்கார செட்டியார் கடை அரிசி என்ன அத்தனை ருஜியா?

காக்கா எங்கே உக்காரும்?மரமா இருக்கு? பேசுமா? பாரதியாரோடு பேசும்...
அப்போகூட இப்படி வெயில் இல்லை என வெங்கிட்டு மாமா சொன்ன போது வயிறு எரிந்தது.

போச்சு. எல்லாம் போச்சு. காசு இருப்பவன் ஏசியில் இருக்கலாம். எத்தனை நாளைக்கு இருப்பான்...அந்த ரூமில் குசு போட முடியாது. மூக்கை மூடிக்கொண்டிருக்க முடியாது.

அவனும் தெருக்கு ஓடி வரணும். வெயில் விழும். பலமாய் அறைந்து சவட்டி விழும்.
அவனுக்கும் வேர்க்கும். அரையிடுக்கில் கட்டி வரும். பொம்மனாட்டி கூப்பிட்டால் அவளை வெயில் மாதிரி பார்ப்பான்.

எனக்கு என்ன ஆயிற்று இன்று? கொஞ்சம் அமைதி கொள்ள வேண்டும்.
காக்கை சிறகினிலே பாடலாம்.வேண்டாம். அது ஒன்றுதான் இப்போ குறைச்சல்.

மூணு மணிக்கு டீ குடிக்கலாம். அதில் ஜீனி கொஞ்சம் கூட போட்டால் போச்சு. இன்னிக்கு கிலோ  முப்பத்தெட்டு ருவாய்.
ஏம்ப்பா இப்படி வெலை...ஜி எஸ் டி எல்லாம் நொட்டிட்டா விலை மயிராட்டம் உதிர்ந்து போய்டும் னு சொன்னாங்கனு...கேட்கலாம்.

கேக்க மாட்டேன். எப்படி கேக்க முடியும்?படிச்ச ஜபர்தஸ்து. ரேட் ஒரே விலையா? எப்போ குறையும்.கேக்கலாமே. மாட்டேன். ஒரே புன்னகைதான் என் முகத்தில். கடைவாய் வரை தெரியும் அப்போது.

அந்த கடைக்காரி குட்டிக்கு எத்தனை பெருசு அது. அடுத்த முறை வந்தா பாக்கணுமே...மனசில் வெயில் அடிக்கும். அதுவும் சாக்கடை வெயில். நாற்ற வெயில். மூத்திர வெயில்.

திண்ணையில் காற்று அசங்கியது. வேர்த்த இடத்தில் கொஞ்சம் குளிரியது.
டிசம்பரில் இப்படி குளிரும். இப்போ அதுவும் குறைகிறது.

மணி மூணு. அடுக்களையில்  அம்மா ஓட்டை இடுக்கியில் பாத்திரத்தை பிடித்து வானமும் பூமியுமாய் ஆற்றி கொண்டிருந்தாள்.

ஆற்றி முடிக்கட்டும். வெயிலை பார்ப்போம்.
கூப்பிடும்போது போவோம். இன்னிக்கு விதிச்சது ரசம் சாதம். இருக்கட்டும்.
சாயந்திரம் சப்பாத்தி சாப்பிட்டு கொள்வோம். மூன்று வாங்கினால் போதும். அதுக்கு மேல் ஜீரணம் ஆகாது.

ஈனோ குடிக்கலாம். இஞ்சி மறப்பா சாப்பிட்டால் பல் கூசும்.  கூசினால் சென்சோடைன் வாங்கணும். நூற்றி ஐம்பது ரூவாய்க்கு ஒரு பிரஷ் இனாம்.
பல் கூச காரணம் கார்ப்பரேட் கம்பனிதான்...வேறு என்ன?

யாரை கேட்டாலும் அதைத்தான் சொல்வார்கள். அப்படி பழக்கி வைத்துள்ளனர். மூத்திரமாய் போகும் பீரும் விஸ்கியும் அவன் தேசத்தில் இருந்து வந்தால் வாங்கி குடிக்கும்போது மூத்திரம் மாதிரியே இருக்காது. இருந்தாலும் கார்ப்பரேட் குடும்பிகளுக்கு வெயில் ரசம்சாதம் கத்திரிக்கா கிடையாது. ஸ்வீட்சர்லேண்ட்...மாட்டு கறி....

நான் அம்மாவாசை தர்ப்பணம் பண்ணிட்டு காக்காய்க்கு காத்திண்டு இருக்கணும்.அன்னிக்கு முடிஞ்சா கத்திரிக்கா ரஸவாங்கி பண்ணலாம்.

அம்மா கூப்பிடுகிறாள். டீ. மூலிகை டீ. காக்கிலோ நூற்றி முப்பது ரூபாய். வெள்ளைக்காரன் கொடுத்துட்டு போன டீ.
கீரைத்தண்டுக்கு கழியாத மலம் இந்த டீயில் கழியும். விவசாயிகள் அப்புராணிகள். பாவம். ஓட்டு போடுவதோடு முடிந்தது அவர்களுக்கும்.

ஏழு மணிக்கு சப்பாத்தி தானே சாப்பிட போறோம். இன்னும் நாலு மணி நேரம்.ஓடி போய்டும். அது ஹோட்டல் இல்லை. தெருவிலும் இல்லை. எங்கேயோ மாவு வாங்கி பிசைந்து சுட சுட தருவார்கள். மழைக்காலத்தில் மட்டும் இல்லை.மூடி விட்டு போய் விடுவார்கள். குப்பை தொட்டியை அதில் ஒரு நாயை மட்டும் பார்த்து விட்டு வரலாம்.

டீ குடித்து விட்டு டீவி பார்க்கலாம். திண்ணை வெயில் ரேழிக்கு வந்தாச்சு.
கிழவியை போல் காலை நீட்டிக்கொண்டு பரக்க பரக்க அனல் காற்றை கொட்டி கொண்டு முறைத்தது. பாழாய் போன இந்த வெயில் காற்றையும் அல்லவா திரிந்து போக செய்கிறது.

டீவியில் சினிமா...ஓடட்டும்... கண்தான் பார்க்கும். மனசுமா பார்க்க போகிறது.
வாசலில் யாரோ வேகமாய் அங்குமிங்கும்
போகிறார்கள். ஏன் இந்த வேகம்?
காற்று. காற்றுதான்.வீசி அடிக்கிறது.
நல்ல வேகம். தூசி கிளம்பி பறக்கிறது.

கும்மென்று இருட்டி மழை பிடித்தது ஆங்காரமாய்.இனி நிற்காது.
நாசமாய்ப்போகிற மழை இப்போ வருது நிக்காமல்.

சப்பாத்தி கடைய மூடிடுவான்.

எழுதியவர் : ஸ்பரிசன் (25-May-19, 12:47 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 249

மேலே