திருவேடகம் - பாடல் 6
கலிவிருத்தம்
(விளம் விளம் விளம் விளம்)
பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார்
வைகையின் வடகரை மருவிய வேடகத்
தையனை யடிபணிந் தரற்றுமின் னடர்தரும்
வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே. 6
- 032 திருவேடகம், மூன்றாம் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்
பதவுரை:
பொய்கை - இயற்கையிலுண்டான நீர் நிலைகள்,
அரற்றுமின் - - இறைஞ்சி மீண்டும் மீண்டும் வேண்டிக் கேளுங்கள்,
வெய்யவன் பிணி - கொடிய துன்புறுத்தலாலும், எளிதில் நீங்கப் பெறாமையாலும் ஆகிய பிணி.
பொருளுரை:
இயற்கையிலுண்டான நீர் நிலைகளில் உருவாகிய பூஞ்செடிகளில் பூத்த அன்றலர்ந்த அழகுமிகு புதுமலர்களின் மணத்தைச் சுமந்து தென்றல் காற்று வீசும் வைகை ஆற்றின் வடகரையை அடுத்துள்ள திருஏடகத்தில் வீற்றிருக்கும் அப்பன் சிவபெருமான்.
அவன் திருவடிகளைப் பணிந்து இறைஞ்சி மீண்டும் மீண்டும் வேண்டிக் கேளுங்கள். மிகுந்த துன்பம் தரும் கொடிய, தீர்க்கவியலாத நோய்களும் குணமாகி, மறுமையில் முத்திப்பேறு அடைவது மிக எளிதாகும்.