எவ்வுயிரும் தன்னுயிர்போல் இரங்கின் வெவ்வினைகள் விலகும் - கருணை, தருமதீபிகை 411

நேரிசை வெண்பா

எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணி இரங்கினன்றே
வெவ்வினைகள் யாவும் விலகியே - செவ்விய
புண்ணியங்கள் எல்லாம் புகுந்து திகழுமே
கண்ணெதிர் காணும் கதி, 411

- கருணை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் கருதி ஒழுகும் கருணை ஒருவனிடம் உறின், அன்றே பொல்லாத வினைகள் யாவும் தொலைந்து புண்ணியங்கள் எல்லாம் பெருகி உயர்ந்து முத்தி நலனை அவன் பெற்று மகிழ்வான் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் கருணை கதி நிலையம் என்கின்றது.

அருள், தயை, கருணை, இரக்கம் என்னும் குணங்கள் ஆன்ம உருக்கங்களாய் வெளி வந்துள்ளமையால் அவை உயர்ந்த பண்புகளாய்ச் சிறந்து திகழ்கின்றன. எவனுடைய உள்ளத்தில் கருணை கனிந்துள்ளதோ அவனுடைய பிறவி புனிதமுடையதாய் உயர் நிலையை அடைகின்றது. படி ஏறிய மனிதனுடைய அடையாளமாக அருள் அமைந்து தெருள் ஒளி சிறந்து மிளிர்கின்றது.

தான் பெற்ற பிள்ளைகள் மேல் இயல்பாகவே தாய் உருகி வருகிறாள். அம் மன உருக்கம் அதி மேன்மையாக மதிக்கப் பட்டுள்ளது. புனிதமான இனிய அந்தத் தாய்மை அனபினும் கருணை மிகவும் உயர்ந்த நிலையில் ஒளி சிறந்துள்ளது.

அது சார்பு பற்றிக் குறுகிய நிலையில் மருவி வருகிறது. தன்னலமும் அபிமான உரிமையும் அதில் பின்னிப் பிணைந்துள்ளன.

யாதொரு சார்பும் சேராமல் எவ்வித அபிமானமும் நேராமல் எல்லா உயிர்களிடத்தும் பரந்து விரிந்து உள்ளம் பரிந்து வருதலால் கருணை யாண்டும் சிறந்து நீர்மையாய் உயர்ந்து திகழ்கின்றது. சீவ தயை தேவ அமுதமாய் மேவியுளது.

இந்தப் புனித நீர்மை எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவனிடம் கனிந்து விளைந்து வருகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அவன் மனித சமுதாயத்துள் உயர்ந்து மேலான ஒரு தனி மகிமையினை அடைகின்றான். உள்ளம் இரங்கியருள உயிர் ஓங்கி ஒளிர்கின்றது.

கல்வி, அறிவு, செல்வம் முதலியன உயர்வினை நல்குமாயினும் கருணைப் பண்பு போல் உண்மையான மேன்மையை அவை உதவ மாட்டா. கல்விமான் என்பதினும் கருணையாளன் என்பதில் எவ்வளவு பொருள் பொதித்துள்ளது; கருதி யுணர வேண்டும்

கல்வியும் அறிவும் அருளோடு கலந்த அளவுதான் தெருளுடையனவாய் நலம் பல காண்கின்றன; கலவாதாயின் கடுமையும் கொடுமையும் மண்டி எவ்வழியும் அவை இழிவுறுகின்றன.

இனிய கருணையை இழந்த பொழுதே இன்னா நிலையனாய் மனிதன் இழிந்து படுகின்றான்; கொடியன், தீயன், கொலைஞன், பாவி, அரக்கன், அசுரன், நீசன் என இங்ஙனம் பேசப்படுவன எல்லாம் கருணைப் பண்பை இழந்து போனமையால் நேர்ந்த ஈனங்களேயாம்.

அருளற்றார் அற்றார்;மற்(று) ஆதல் அரிது. 248 அருளுடைமை - அருளை இழந்தவன் பாவம் வளர்த்து அழிந்தே போவான் என வள்ளுவர் உள்ளம் உருகி உரைத்துள்ள இது ஈண்டு ஊன்றி உணர வுரியது.

கருணையை இழந்தவன் அதோ கதியில் இழிந்து அழிந்து போகின்றான்; அதனையுடையவன் உயர்கதியில் உயர்ந்து ஒளி சிறந்து மிளிர்கின்றான்.

எவ்வுயிர்க்கும் இனிமையாய்ப் புண்ணியம் சுரந்து வருதலால், கருணையுடையவர் யாண்டும் கண்ணியம் அடைந்து நிற்கின்றார். உயர்ந்தோர், பெரியோர் என ஒளி மிகுந்து உள்ளவர் எல்லாரும் தம் உள்ளத்தில் அளி புரிந்து வந்தவரே யாவர்.

Sweet mercy is nobility’s true badge. - Titus Andronicus 1-1

இனிய தயை அரிய பெருந்தகைமையின் உண்மை அடையாளமாயுள்ளது' என்னும் இது ஈண்டு உணர வுரியது.

எவ்உயிரும் தன் உயிர்போல் எண்ணி என்றது கருணை புரிந்து ஒழுகும் காட்சி காண வந்தது.

தனது உயிரை எந்த மனிதனும் மிகவும் அருமையாகக் கருதி எவ்வழியும் உரிமையோடு போற்றி வருகிறான். இந்த அனுபவத்தை ஊன்றியுணரின் சீவர்களுடைய இயல்பான சுபாவம் தெளிவாகின்றது; தன்னுடையது என்று கருதவே அங்கே ஒரு பிரியம் இயல்பாகவே மருவிச் செயல் புரிந்து வருகிறது.

தன்னலமே கருதி அவ்வளவில் நின்றுவிடின் அவன் சின்னவனாகவே தீர்ந்து படுகின்றான். தன்னைப் போலவே எல்லா உயிர்களையும் எண்ணியருளின் அவன் பெரிய மகானாய் அரிய மகிமையை அடைகின்றான்.

எவ்வுயிரும் தன்உயிர்போல் எண்ணும் தபோதனர்கள்
செவ்வறிவை நாடிமிகச் சிந்தைவைப்ப(து) எந்நாளோ? - தாயுமானவர்

பிறவுயிரையும் தன்னுயிர்போல் கருதி ஒழுகுபவர் விழுமிய தபோதனர்கள் என்று தாயுமானவர் இவ்வாறு துதித்திருத்தலால் அவரது புண்ணிய நீர்மையை உணர்ந்து கொள்கின்றோம்.

அந்தணர் என்போர் அறவோர்;மற்(று) எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். 30 நீத்தார் பெருமை

எல்லா உயிர்களிடத்தும் தண்ணளி புரிந்து ஒழுகுவோரே சிறந்த தவசிகள்: உயர்ந்த தரும சீலர்கள் என இது உணர்த்தியுள்ளது. அருந் தவர்களின் பெருந்தகவாய் அருள் மருவியுள்ளமையால் அதன் பெருமையும் பேறும் தெரிந்து கொள்ளலாம்.

புண்ணியங்கள் எல்லாம் புகுந்து திகழும்
கண்எதிர் காணும் கதி.

கருணையால் உளவாகும் அதிசய விளைவுகளை இது காட்டியருளியது. உயிரினங்களுக்கு யாதொரு துயரும் புரியாமல் யாண்டும் என்றும் இதமே கருதி வருதலால் அந்தத் தண்ணளி எண்ணரிய புண்ணியங்களுக்கு இனிய நிலையமாயது.

பிற உயிர்களுக்கு இரங்கியருளும் கருணையாளனைத் தரும தேவதை உரிமை கொண்டு உவந்து வருவதால் அவன் இம்மை, மறுமை என்னும் இருவகை நிலைகளிலும் அரிய பேறுகளை எளிதில் அடைந்து பெரிய இன்பங்களை மருவி மகிழ்கின்றான்.

அருளுடையானைத் தெய்வம் காத்தருளுதலால் அவன் திவ்விய மகிமைகளை அடைந்து யாண்டும் சிறந்து திகழ்கின்றான்.

Mercy and truth preserve the king; and his throne is upholden by mercy - Solomon.

'அருளும் சத்தியமும் அரசனைக் காக்கின்றன; தயையினாலேதான் அவனது சிம்மாசனம் நன்கு நிலைத்திருக்கின்றது' என சாலமன் என்னும் ஞானி இங்ஙனம் கூறியிருக்கிறார்.

சீவ கோடிகளுக்கு எவ்வழியும் செவ்விய இதமாய்த் தோய்ந்து நிற்றலால் கருணை என்றும் தருமநிலையமாய்த் தழைத்து யாண்டும் பெருமை விளைத்து இருமை நலன்களையும் அருளி வருகின்றது.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)

மன்னுயிர்க்(கு) இன்னருள் புரியும் மாண்பினன்
தன்னுயிர்க்(கு) இனியனாய்த் தரும சீலனாய்
மன்னிய பரனருள் மருவி என்றுமே
இன்னுயிர் அமுதனாய் இன்பம் எய்துமே.

இன்னவாறு முன்னோர் பலரும் கருணைப் பண்பைப் புகழ்ந்து போற்றியுள்ளனர். ஆன்ம தத்துவங்களை உய்த்துணர்ந்தவர் மேன்மையான உறுதி நலங்களை உலகம் காண உணர்த்தியருள்கின்றார்.

அல்லல் யாதும் அணுகாமல் நல்ல சுகமே நல்கி வருதலால், கருணை ஒரு இனிய சீவ.அமுதமாய் மேவியுள்ளது. அதனைக் கைக்கொண்டவர் என்றும் இன்ப நலங்களேயே கண்டு மகிழ்கின்றார். தண்ணளியில் விளைந்து வரும் தனிஅமுதே எனக் கடவுளைத் துதித்திருத்தலால் அளியுடையார் அடையும் .பொருள் நிலை தெளிவாம்; அளியுடைமை அழிவில்லாத ஆனந்தத்தை அருளுகின்றது. அதனை மருவி மகிழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Aug-19, 2:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 130

சிறந்த கட்டுரைகள்

மேலே