அறிவாழம் ஆயின் அமைதி பெருகி நெறிவாழ்வு இனிது நிலவும் - அமைதி, தருமதீபிகை 401

நேரிசை வெண்பா

அறிவாழம் ஆயின் அமைதி பெருகி
நெறிவாழ்(வு) இனிது நிலவும் - பொறிவீழ்வு
நீளா(து) அடங்கின் நிலையான பேரின்பம்
கேளாய் அடையும் கிளர்ந்து. 401

- அமைதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அறிவும் அமைதியும் பெருகின் நெறிமுறையான வாழ்வு நேரே மருவும்; பொறி நுகர்வில் வெறியராய் வீழாதவர் அரிய பேரின்ப நலனை உரிமையாய்ப் .பெறுவர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் அமைதியின் நிலைமை கூறுகின்றது.

அறிவு சீவ ஒளி, அதனால் யாவும் நடந்து வருகின்றது. எதையும் கண்டு கொள்வது கண் என நின்றது. எல்லாம் அறிந்து கொள்வது அறிவு என வந்தது. கண் உருவமாய் உடலில் உள்ளது; அறிவு அருவமாய் உயிரில் உள்ளது. அந்தக் கரண விருத்திகள் எல்லாம் அறிவின் வயமாய்க் கதித்தெழுகின்றன.

நினைத்தல், சிந்தித்தல், அறிதல், ஆராய்தல், உணர்தல், தெளிதல் என வருவன எல்லாம் அறிவின் தொழில்களேயாம்.

மருவுக்கு வாசனை போல் உயிருக்கு அறிவு மணமும் தேசுமாய் மருவியுள்ளது. சீவ வாழ்வு அதனால் சிறந்து வருதலால் தேவ ஒளியாய் அது மேவி மிளிர்கின்றது.

கண் வழியே வெளியே காணும் காட்சிகளை எல்லாம் கவனித்து நிதானித்து நன்மை தீமைகளை நாடித் தெளிந்து உண்மை உறுதிகளை உள்ளிருந்தே உதவியருளுகின்றமையால் அறிவு ஆன்ம அமுதமாய் அமைந்திருக்கின்றது.

Understanding is a wellspring of life unto him that hath it. - Bible

தன்னை யுடையவனுக்கு அறிவு, உயிர் ஊற்றாயுள்ளது” என்னும் இது இங்கே அறிய வுரியது. பயிர்க்கு நீர் போல் உயிர்க்கு அறிவு ஊற்றமாயுள்ளமையான் அதன் ஏற்றமும் இயல்பும் இனிது புலனாம். அறிவு புனிதமாய்ப் பெருகிவரின் மனிதன் தெய்வமாய் ஒளி பெறுகின்றான்; அது மலினமாய் மாறுபடின் மிருகமாய் இழிவுறுகின்றான். இனிய அறிவு ஒருவனுக்கு உரிமையாய் அமையின் அவன் எல்லா நலங்களையும் எளிதே அடைந்து கொள்கின்றான்.

அறிவுடையார் எல்லாம் உடையார்: அறிவிலார்
என்னுடையர் ஏனும் இலர். 430 அறிவுடைமை

அறிவின் பெருமையைக் குறித்திருக்கும் இந்த அருமைத் திருக்குறள் நாளும் உரிமையுடன் நினைந்து உணர்ந்து வரத்தக்கது.

புறத்தே எவ்வளவு செல்வங்கள் நிறைந்திருந்தாலும், அகத்தே நல்ல அறிவு இல்லையாயின் அவன் யாதும் இல்லாத பேதை வறியனே; வெளியே ஒரு பொருளும் இல்லையாயினும் உள்ளே அறிவு மாத்திரம் உடையனாயின் அவன் எல்லாப் பாக்கியங்களையும் ஒருங்கே அடைந்துள்ள பெரிய திருவாளனே என்றமையால் அறிவினது உண்மை இன்மைகளால் உளவாகும் உயர்வு தாழ்வுகளை நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

நுண்ணுணர்(வு) இன்மை வறுமை; அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம். 251 நாலடியார்

என்பதும் ஈண்டு எண்ணத் தக்கது.

புகழ் புண்ணியங்களை உளவாக்கி இம்மை மறுமைகளை இனிது உதவி இறுதியில் உறுதியாய் உய்வைத் தருதலால் அறிவு தெய்வத் திரு என வந்தது. இத்தகைய அறிவை உரிமையாகப் பேணி வரின் மனிதன் உயர்கதியை அடைகின்றான்.

அறிவு ஆழமாயின் அமைதி பெருகி
நெறிவு வாழ்வு இனிது நிலவும்.

என்றது உண்மையான அறிவிலிருந்து உதயமாவதை உணர்த்துகிறது. கங்கை போன்ற ஆழமான நதியில் வெள்ளம் பெருகி வரின் அந்த நீர் ஓட்டம் அமைதியாய்ச் செல்லுகின்றது; அது போல் ஒருவனிடம் அறிவு பெருகி நிறையின் அங்கே அமைதியான இனிய சாந்தம் உண்டாகின்றது.

நல்ல அறிவு எவ்வழியும் உயிர்க்கு உறுதி புரிவதால் அது அடக்கம், அமைதி முதலிய பண்பாடுகள் அமைந்து எங்கும் இனிமையாயுள்ளது. உயர்ந்த அறிவுக்கு அடையாளம் உள்ளம் கனிந்த சாந்தியே!

நேரிசை வெண்பா

நிலைமதியில் நின்று நிலவும் நிலாவின்
கலைமதியில் சாந்தம் கனியும் – தலைமதி
சீவ ஒளியாய்த் திகழ்ந்து தெளிவின்பம்
யாவும் அருளும் அமைந்து.

ஓதியுணர்ந்த உயர்ந்த அறிவு சீதள சந்திரன் போல் இனிய சோதி வீசி அமைதியாயிருக்கும் என்றமையால் அதன் நிலைமையும் தலைமையும் நீர்மையும் நினைந்து கொள்ளலாம்.

அடங்கிய நீர்மை சிறந்த அறிவாய்ச் சீர் பெறுகின்றது. அடங்காமை சிற்றறிவாய்ச் சிறுமையுறுகின்றது.

இன்னிசை வெண்பா

கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும், எஞ்ஞான்றும்
பச்சோலைக்(கு) இல்லை யொலி. 256 அறிவின்மை, நாலடியார்

நேரிசை வெண்பா

சிற்றுணர்வோர் என்றுஞ் சிலுசிலுப்பர் ஆன்றமைந்த
முற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே – வெற்றிபெறும்
வெண்கலத்தின் ஓசை மிகுமே விரிபசும்பொன்
ஒண்கலத்தில் உண்டோ ஒலி. 35 நீதி வெண்பா

நல்ல அறிவாளரையும், புல்லியரையும் இவை விளக்கியிருக்கின்றன. சுட்டியுள்ள உவமைகளால் பொருள்களை உய்த்துணர்ந்து கொள்ள வேண்டும். உள்ளே ஈரமுள்ள பசிய ஓலையும், பசும் பொன்னும் அறிஞர்க்கு ஒப்பாயின. அமைதியாளர் தங்கமாய் உயர்கின்றனர். அமைதியில்லாதவர் வெண்கலமாய் இழிகின்றனர்.

‘நல்ல அறிவாளர் நாவடங்கி இருப்பர்’ எனக் கம்பர் சொல்லியுள்ள இன்பக் கவியொன்று இங்கே காணவுரியது.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)

4367
கல்வியின் திகழ்கணக் காயர் கம்பலைப்
பல்விதச் சிறாரெனப் பகர்வ பல்லரி
செல்லிடத்(து) அல்லதொன்(று) உரைத்தல் செய்கலா
நல்லறி வாளரின் அவிந்த நாஎலாம். 115 கார்காலப் படலம், கிட்கிந்தா காண்டம், இராமாயணம்

மழைக் காலத்தில் தவளைகள் அதிகமாய்க் கத்தும்; குளிர் காலத்தில் அவை ஒலி அடங்கியிருக்கும்; அந்தப் பருவநிலையைக் குறித்து வந்த பாசுரம் இது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் சிறு பிள்ளைகளைப் போலப் பலபடியாய்க் கத்திக் கொண்டிருந்த தவளைகள் கார்காலம் நீங்கியவுடன் சிறந்த அறிவாளிகளைப் போல் நாவடங்கியிருந்தன என இங்ஙனம் நயமாக உரைத்திருக்கிறார்.. கணக்காயர் – உபாத்தியாயர், அரி - தவளை. பருவ உருவங்களில் பல வகைப்பட்ட பள்ளிச் சிறுவர்களைப் போல் பல திறப்பட்ட தவளைகள் உள்ளமையால் பல் அரி என்றார். பருவ காலங்களில் சல சரங்களின் நிலைமையைச் சொல்ல வந்தவர் உலக மக்களுக்கு இப்படி ஒரு உணர்வு நலனை உதவியிருக்கிறார்.

அடக்கமின்றித் துடுக்காய் வாய்க்கு வந்தபடி பேசுவது அறிவு குன்றிய சிறுவர் இயல்பாம்; நாவடங்கி யிருப்பது நல்ல அறிவுடைய மேலோர் பண்பாம்.

"மோனம் எனபது ஞான வரம்பு' – ஒளவையார் - என்றமையால் பரிபூரணமான உணர்வின் விளைவு மவுனம் என்பது உணரலாகும்.

’மவுனம் மலையைத் தாங்கும்’ என்னும் பழமொழி அரிய பொருளுடையது. மனம் அடங்கிய அமைதி பரமன் அருளை மருவுகின்றமையால் அந்த மவுனிகள் அற்புத நிலையினராய் அதிசய நலங்களை அடைகின்றனர்.

நேரிசை வெண்பா

மனத்தாலும் வாக்காலும் மன்னவொண்ணா மோன
இனத்தாரே நல்ல இனத்தார் - கனத்தபுகழ்
கொண்டவரும் அன்னவரே கூறரிய முத்திநெறி
கண்டவரும் அன்னவரே காண். - தாயுமானவர்

என்னும் இது இங்கே காணத் தக்கது.

உள்ளம் தெளிந்து சாந்தமாய் அடங்கியிருப்பவனை ஞான உலகம் நயந்து வியந்து புகழ்ந்து மகிழ்ந்து போற்றுகின்றது.

'சாந்தமு லேக சவுக்யமு லேது' எனத் தியாகய்யர் கூறியது அவரது அனுபவ நிலையை வெளியிட்டுள்ளது. ஆன்ம அமைதியில் ஆனந்தம் பொங்கியுள்ளது; அதனை ஞான யோகிகள் அனுபவித்து வருகின்றனர்.

‘நிலையான பேரின்பம் கேளாய் அடையும்’ என்றது சாந்த குண சீலருக்கு உளவாகின்ற ஆனந்த நிலையை உணர்த்தியது. அமைதியால் ஆன்ம பரிபாகம் உண்டாகின்றது. ஆகவே எல்லா மேன்மைகளும் தாமாகவே எதிர் வருகின்றன. இனிய அமைதி அரிய சீவ அமுதமாகிறது.

விடய இச்சைகளில் வெறிகொண்டு திரிதலும், படபடப்பும், துடிப்பும், துடுக்கும் மனம் அடக்கமில்லாத மடத்தனங்களாம்: தம்மையுடையவரை அறிவில்லாத சின்ன மனிதர் என அவை தெரியப்படுத்துகின்றன. அப் புன்மை புகாதவர் புனிதராய் உயர்கின்றனர். இயல்பு இனிமையாக உயர்வு ஒளிர்கின்றது.

இயன்றவரையும் சொற்களைச் சுருக்கு; பேச நேர்ந்தால் பயனுடைய வார்த்தைகளையே பேசு; யாண்டும் நயனுடையனாய் அடங்கியிரு; இந்த அமைதியில் அதிசய நலங்கள் அடங்கியுள்ளன என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Aug-19, 2:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 87

சிறந்த கட்டுரைகள்

மேலே