யாரை நம்புகிறார்கள் மக்கள்
யாரை நம்புகிறார்கள் மக்கள்?
மக்கள் ஒரு காலத்தில் இறை வழிபாட்டை மட்டுமே மேற்கொண் டார்கள். அதனால் தனது தேவைகளை, குறைகளை, கோபங்களை காட்ட இறைவன் குடியிருக்கும் ஆலயங்களுக்கு சென்று முறையிட்டார்கள், வேண்டினார்கள், சண்டையிட்டார்கள். மனம் நிம்மதியாகி திரும்பி அவரவர்களின் பிழைப்புக்கான வேலையை பார்த்தார்கள்.
அடுத்து தனக்கு ஏற்பட்ட சோகங்களை, துயரங்களை ஏன் சந்தோசங் களை கூட தன் “வினைப்பயன்” என்று சொல்லி தங்களை திருப்தி படுத்தி கொண்டார்கள். துயரங்களுக்கு இறைவனை “திட்டுவதன்” மூலம் ஆறுதல் படுத்தி கொண்டார்கள்.
சமுதாய வாழ்க்கையில் அவர்களுக்கு சிக்கல் எங்கு ஆரம்பிக்கிறது? தனது துயரங்கள், சோகங்கள், பல விதமான சிக்கல்கள் அனைத்தையும் கடவுளின் விசுவாசி, அல்லது வழிபடுபவன், கடவுளையே எந்நேரமும் நினைத்து கொண்டிருப்பவன் பொதுவாக “பக்திமார்கள்” என்று இவனால் ஏற்று கொள்ளப்படுபவர்கள், அல்லது நம்புபவர்கள், இறைவனுக்கும் இவனுக்கும் இடையில் தங்களை இணைப்பாளர்களாக நுழைத்து கொள்ளும் பொழுது…!
இவர்களை சமுதாயத்தில் வாழும் மக்கள் எதை வைத்து இவன் கடவுளுக்கும் நமக்கும் இணைப்பாளன் என்று முடிவுக்கு வருகிறார்கள்?
இவர்களை எதை வைத்து அடையாளம் தெரிந்து கொள்வது?
நெற்றியில் திருநீறு, அல்லது குங்குமம், சந்தனம் இட்டு ஒரு சிலர் பாசி மாலைகள், துளசி மாலைகள், இப்படி ஏராளமாக கழுத்தில் இட்டும், அடிக்கொருதரம் ஆண்டவன் பெயரை சொல்லி அழைப்பவர்கள், அல்லது “எல்லாம் அவன் செயல்” என்று பொது வெளியில் சொல்பவர்களை, பக்திமார்களாக இருப்பவர்கள் என்று அடையாளம் கண்டு கொள்ளலாம்.
அது போல ஒவ்வொரு மதங்களிலும் தங்களை பக்திமார்க்கத்தில் உள்ளவர்களாக காட்டி கொள்ள தங்களின் உருவங்களிலும் ஆடைகளிலும் அதற்கான அடையாளத்தை உருவாக்கி கொள்வார்கள்.
இவர்களின் உருவகங்களை பற்றி பேசுவது அல்ல இந்த கட்டுரை
பக்தி மார்க்கத்தையும் பக்திமார்களையும் சமுதாயத்தில் எந்த அளவுக்கு உயர்ந்த இடத்தில் பார்க்க விரும்புகிறதோ, சமுதாயம் அந்த அளவுக்கு, நேர்மாறாக கீழான மனப்பான்மைக்கும், மக்களின் பார்வைக்கு, இந்த பக்திமார்களாக காட்டி கொள்பவர்களின் செயல்பாடுகள் கொண்டு சென்று கொண்டிருக்கிறது தற்போதைய சமுதாயத்தின் சூழ்நிலை என்பதை பற்றி சொல்கிறது.
நம்பிக்கை என்பது மனிதனின் குணங்களில் ஒன்று. வேறுபட்ட அளவீடுகளில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் பண்பு இந்த நம்பிக்கை.
இந்த நம்பிக்கையை எல்லா மதத்திற்குள்ளும் இருக்கும் ‘பக்திமார்’ வேசமிடுபவர்கள் அந்தந்த மத நம்பிக்கை கொண்ட மக்களை தங்களது ஒழுக்க கேடான செயல்பாடுகளால் நம்பிக்கையற்றவர்களாக ஆக்கி விடுகிறார்கள்.
அளவுக்கதிமான பக்தியை காட்டுவதாக நினைத்து அளவுக்கு மீறிய, அல்லது தங்களுடைய உயிரை பறிக்கும் அளவுக்கு அல்லது பிறரது உயிரை விடும் அளவுக்கோ சென்று விடுவதும் உண்டு.
தங்களது ஒவ்வாத எண்ணங்களை இந்த “பக்தி” என்னும் போர்வையில் பெண்களை ஈடுபடவைத்து சில தகாத செயல்களை செய்யும் அளவுக்கு அவர்களை கொண்டு சென்று விடுவதும் உண்டு.
எந்த விதத்திலும் தன்னுடைய கீழ்மை குணங்களை விடமுடியாத சிலர் அதை பிறர் கண்டு பிடிக்க முடியாத வண்ணம் தங்களை பக்தியாளனாக வேடமிட்டு கொள்வதும், அந்த வேடத்தை கொண்டு, தகாத செயல்களான பிறரை காட்டி கொடுப்பது, கோள் சொல்வது, பிறரை பற்றி தவறாக செய்தியை பரப்புவது இது போன்ற செயல்களை செய்து கொண்டிருப்பார்கள். மக்களுக்கு இவர்கள் மேல் சந்தேகம் கொள்ளாத அளவுக்கு இவர்களது உருவ மாற்றங்களை வைத்து பக்திமானாக காட்டி கொள்வதால் மக்கள் இவர்களின் கதைகளை அல்லது இவர்களை நம்பவும் செய்கிறார்கள்.
தன்னை வெளிப்படையாக “நாத்திகனாக” காட்டி கொள்பவன் கூட சமுதாயத்தில் வெளிப்படையாக தவறான செயல்களை செய்ய தயங்கு கிறான். அதை தவறென்றும் அறிவிக்கிறான். ஆனால் இந்த “பக்திமான்” என்பது போல வெளியுலகத்தில் காட்டி கொள்பவர்கள் அதே செயலை வெளிப்படையாக செய்கிறார்கள். அவர்களுக்கு கவசமாக இந்த “பக்திமார்கள்” என்னும் போர்வை பல விதங்களில் உதவுகிறது.
இன்று பக்திமான் என்றும் துறவிகள் என்றும் சொல்பவர்களின் வாழ்க்கை
எந்த விதத்திலும் துறவறத்துக்குரியதாக இருப்பதில்லை. குறைந்த பட்சமாக அவர்களால் பெரிய பெரிய பள்ளிகள், கல்லூரிகள், பல பெரிய பெரிய மால்கள், கடைகள் அனைத்தும் இவர்களுக்கு சொந்தமாக இருக்க கூடியதாக இருக்கிறது. எதன் மூலம் இத்தனை சம்பாத்தியம் இவர்களுக்கு வந்தது? என்னும் கேள்விக்கு ஒரே விடை மக்களிடம் இவர்கள் காட்டும் பக்திமார்க்க மான வேடம் மட்டுமே.
அதை விட இவர்களின் வாழ்க்கை தரம் என்பது ‘மேட்டுக்குடி’ வாழ்க்கையை விட மேலானதாக இருக்கிறது. விலையுயர்ந்த கார்கள், குளிரூட்டப்பட்ட வீடுகள், தங்கும் விடுதிகள் போன்றவற்றில் தான் இவர்களின் வாசம். அதற்கு முழுக்க முழுக்க உரிமையாளவர்களாகவும் இருக்கிறார்கள். எப்படி இது சாத்தியம்?
அடுத்து வணிகம், இந்த பக்தி என்னும் ஒரு நம்பிக்கையை வைத்து “பக்திமார்களால்” எந்தளவுக்கு வணிகத்தை நடத்தி கொண்டிருக்கிறது, இந்த சமுதாயத்தில் என்பதை பார்க்கலாம். மக்களின் மனங்களில் ஒரு செயலையோ, அல்லது ஒருவரின் செயல்பாடுகளிலோ “நம்பிக்கை” என்று ஒன்றை ஏற்படுத்தி விட்டால் போதும், அதை வைத்து பலர் பிழைத்து கொள்ள முடியும்.
இப்படி பல “துறவிகளை” உருவாக்கி அல்லது அதீத விளம்பரத்தின் மூலம் “மகானாக” ஆக்கப்பட்டு அவர்களோடு சாதாரண மக்களை இணைப்புக்களை ஏற்படுத்த ஒரு இடத்தை உருவாக்கி அங்கு வருபவர்கள் அந்த மகானை சந்திக்க எற்பாடு செய்ய ஏற்பாடுகளை செய்வார்கள். அதற்காக வரும் மக்கள் தங்குவதற்கும், உணவு உண்பதற்கும் இவர்களுடைய நிறுனங்களையே ஏற்பாடு செய்ய வைத்து, அந்த இடத்தை பெரும் வணிக சந்தையாக்கி விடுவார்கள். இன்று இந்த வணிகம் தான் மற்ற எல்லா வகை வணிகங்களை விட முன்னணியில் இருக்கிறது.
பக்திமார்களாக இருப்பவர்கள் அனைவரும் தங்களை இப்படியாக காட்டி கொள்வது என்பது வெறும் வேசம்தானா? என்னும் கேள்விக்கு பதில் இல்லை. இன்றும் பக்தியை மனதில் வைத்து அந்த நம்பிக்கையினால் சமுதாயத்தில் மக்களோடு மக்களாக உயர்ந்த எண்ணங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை மக்கள் “பக்திமான்கள்” போல வேசமிட்டவர்களாக காண முடியாது. பிறருக்கு உதவும் மனம் படைத்தவர்களாக, பிறரை பற்றி குறை சொல்லாதவர்களாக, தன்னை பற்றிய விளம்பரத்தால் வெளிக்காட்டாத ஒழுக்கமானவர்களாய் இருக்கிறார்கள்.
அவர்கள் இந்த பக்தி வேசம் கொண்டு வணிகம் செய்பவர்களை போல் பெரிய பெரிய கல்வி நிறுவனங்களோ, ஹோட்டல்களோ எதுவுமில் லாமல், மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும், ஒரு காலத்தில் அவர்கள் நிறைந்தும் இவர்கள் குறைந்தும் காணப்பட்ட சமுதாயத்தில் அவர்களின் எண்ணிக்கை என்பது தற்போது குறைந்து கொண்டே வருகிறதோ என்னும் எண்ணம்தான் தற்போதைய சமுதாய வாழ்க்கை சூழ்நிலையில் எண்ண தோன்றுகிறது.
இதற்கு நம்முடைய குண நலன்களே காரணம் என தோன்றுகிறது. இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களில் தவறான எண்ணங்கள் தோன்றுவதால் சமுதாயத்தில் இருந்து தோன்றும் அந்த மக்களில் இருந்த ஒருவனது எண்ணங்கள் எப்படி இருக்கும்?
இப்படித்தான் இருக்கும் என்ன செய்வது? இறைவனை நம்புபவர்களை விட அவர்களுக்கு நான் இணைப்பாளன் அல்லது தொடர்பு ஏற்படுத்தி தருபவன் என்று காட்டிக்கொள்ள இப்படி வேசமிட்டவர்களைத்தான் நம்புகிறார்கள்.