திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர் - சேரன் - முத்தொள்ளாயிரம் 24

முத்தொள்ளாயிரம்
சேரன்
நேரிசை வெண்பா

திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர்
இறந்துபடின் பெரிதாம் ஏதம் - உறந்தையர்கோன்
தண்ணார மார்பின் தமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக் காணக் கதவு! 24

பொருளுரை

உறையூரின் மன்னவன் சோழன்; அவன் குளிர்ந்த மாலையணிந்த மார்பினன்; தமிழ்மக்களின் இறைவன்; அவன் நகர்வலம் வருகிறான். அதனைத் தங்கள் பெண்மக்கள் பார்க்க நேரின், அவன்பால் வேட்கை கொண்டு துன்புறுவர் எனக் கருதிய தாய்மார்கள் தந்தம் வீடுகளின் வாயிற் கதவுகளை அடைத்து வைக்கின்றனர்.

“நகர்வலத்தைக் காணவியலாத நங்கையர் ஏக்கத்தால் இறந்துவிடவும் கூடும். அவ்வாறாயின், அதனால் ஏற்படும் துன்பம் மிகப் பெரிதாம். எனவே, மங்கையர் சோழனைக் கண்ணாரக் கண்டு களிக்குமாறு கதவுகளைத் திறந்துவிடுங்கள்; அவ்வாறு காண்பதால் ஏதேனும் தீமை நேருமாயின் அதைப்பற்றிப் பின்னர் சிந்திக்கலாம்”, என்று சிலர் கூறுகின்றனர்.

(சோழனது நகர்வலத்தைக் காணவியலாமையால் உயிரை இழப்பதைக் காட்டிலும் அதனைக் கண்டு மையல் கொள்வதால் ஏற்படும் தீமை பெரிதன்று, என்பது கருத்து)

ஏதம் - துன்பம்.

எழுதியவர் : பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை (16-Aug-25, 12:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே