வருங்காலன் திண்ணிதே வா’ய்’ச்சொல்லே யன்று வழக்கு - சிறுபஞ்ச மூலம் 25

நேரிசை வெண்பா
(’ய்’ ஆசிடையிட்ட எதுகை)

பெருங்குணத்தார்ச் சேர்மின் பிறன்பொருள் வௌவன்மின்
கருங்குணத்தார் கேண்மை கழிமின் - ஒருங்குணர்ந்து
தீச்சொல்லே காமின் வருங்காலன் திண்ணிதே
வா’ய்’ச்சொல்லே யன்று வழக்கு! 25

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

நன்மைக் குணமுடையவர்களைச் சென்றடையுங்கள்; பிறன் பொருளை கவராதீர்கள், தீக்குணத்தாரது நட்பை விடுங்கள்; முற்றுமறிந்து பிறரைச் சொல்லும் தீயசொற்களையே சொல்லாது தடுங்கள், யமன் வருவான் இஃது உறுதியானதே; இது வாய்ச்சொல்லேயன்று; உலக வழக்காம்.

கருத்துரை:

நற்குணமுடையாரைச் சேருங்கள், பிறன் பொருளைக் கவராதேயுங்கள், தீக்குணமுடையவரை ஒழியுங்கள், தீய சொற்களைப் பேசாதிருங்கள்; காலன் வருவன்; இஃது உண்மை.

பெருங்குணம் - பெருமைக்குக் காரணமான சாந்த முதலிய நற்குணங்கள்; சொல்லிழுக்குப் பட்டுச் சோகாமலிருப்பான் தீச்சொல்லே காமின் என்றார்!

காத்தலாவது தன்னிடத் துண்டாகாது தடுத்தல்; திண்ணிது - திண்ணிது வழக்கு என்பனவற்றைச் சேர்மின் முதலிய ஐந்தனையுங் கூறும் நீதி என்பதற்குப் பயனிலையாகக் கொள்வாரும் உண்டு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Aug-25, 3:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே