காமருதோட் கிள்ளிக்குத் திரிதரும் பேருமென் நெஞ்சு – முத்தொள்ளாயிரம் 29

நேரிசை வெண்பா

நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக்
காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற – யாமத்(து)
இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்
திரிதரும் பேருமென் நெஞ்சு. 29 -

முத்தொள்ளாயிரம், சோழன் 7

தெளிவுரை:

நாணம் ஒருபக்கம் இழுக்கவும், சோழனது அழகு ஒருபக்கம் உள்ளத்தை உருகச் செய்யவும் பேரழகு மிக்க தோள் கொண்ட சோழனுக்காக என் கண்கள் வருந்தவும் இரவின் யாமத்தில் இரு பக்கமும் எரியும் மூங்கில் குழாயினுள் அகப்பட்ட எறும்பு துன்புறுதல் போல என் நெஞ்சம் சுழலுகின்றது; பெயர்கிறது; வேறுபடுகிறது.

வாங்க – இழுக்க, நெகிழ்ப்ப - உருகச் செய்தல், கண்கவற்ற – கண்கள் வருத்தமடைய, யாமம் – மாலைப் பொழுதின் பின் பத்து நாழிகை, திரிதரும் – சுழலும்,
காமருதோள் – பேரழகு மிக்க தோள்,

’இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போல’ என்னும் தொடர் எரியும் மூங்கில் குழாயின் இடையில் இருக்கும் எறும்பு போல, சோழனைக் கண்டு காமுற்ற தலைவி காதல் ஏக்கத்தால் மீள முடியாமல் தவித்தாள் என்னும் பொருள் பொதிந்து சிறந்த உவமையைக் கொண்டு திகழ்கிறது.

எழுதியவர் : பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை (27-Aug-25, 12:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே