கருவிளையும் தோன்றியும் துறந்தார் வரல்கூறும் - கார் நாற்பது 9
நேரிசை வெண்பா
கருவிளை கண்மலர்போற் பூத்தன கார்க்கேற்
றெரிவனப் புற்றன தோன்றி - வரிவளை
முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும்
இன்சொற் பலவும் உரைத்து! 9
- கார் நாற்பது
பொருளுரை:
கண்மலர் போலப் பூத்தனவாகிய கருவிளம் பூக்களும், கார்ப்பருவத்திற்கு எதிர்ந்து தீயினது அழகையுற்றனவாகிய தோன்றிப் பூக்களும் வரியையுடைய வளைகள் முன்னங் கையினின்று கழல இனிய சொற்கள் பலவும் மொழிந்து பிரிந்து சென்ற தலைவர் வருதலை கூறா நிற்கும்!
கருவிளை - கருங்காக்கணம்பூ; அது கண்போலும் என்பதனைக் கண்ணெனக் ‘கருவிளை மலர' என்னும் ஐங்குறு நூற்றானு மறிக.
தோன்றிப்பூ செந்நிற ஒளியுடையது; ‘சுடர்ப்பூந் தோன்றி' என்பது பெருங்குறிஞ்சி. உரைத்து இறப்பத் துறந்தார் என்க. கருவிளையும் தோன்றியும் துறந்தார் வரல்கூறும் என முடிக்க!

