சீவ கருணை சிவகருணை யாய்விளைந்து தேவ அமுதமெனச் சேரும் - கருணை, தருமதீபிகை 418

நேரிசை வெண்பா

சீவ கருணை சிவகருணை யாய்விளைந்து
தேவ அமுதமெனச் சேருமே - பாவ
இருள்நீக்கி எவ்வழியும் இன்பம் பொழியும்
அருள்நீக்கி வாழல் அவம். 418

- கருணை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சீவ கருணை தேவ கருணையை விளைத்து எவ்வழியும் திவ்விய அமுதமாய் அமைந்து பாவத் துயர்களை நீக்கி யாண்டும் இன்ப நலங்களையே சொரியும், அத்தகைய அருளைக் கை விட்டு வாழ்தல் அவமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பரிபக்குவமான ஆன்ம உருக்கமே கருணை என வெளியாய் ஒளி புரிகின்றது. உள்ளம் இரங்கி உருகிய அளவு அங்கே பரம்பொருளின் அருள் இறங்கி வருகின்றது. சீவ தயாபரன் என்னும் பேரை இறைவன் மிகவும் பெருமையாகப் பெற்றுள்ளமையால் அருளியல்பில் அப்பொருள் உயர்ந்துள்ளமை உணரலாகும்.

அருள் சுரந்த நெஞ்சம் தெருள் நிறைந்து என்றும் இன்ப நிலையமாய் இனிது திகழ்கின்றது. அருள் படியாதது மருள் படிந்து யாண்டும் துன்ப மயமாயத் துடித்து இழிகின்றது.

இனிய நீர்மை குன்றிய பொழுது கொடிய கேடுகள் குடிபுகுந்து விடுகின்றன. பின்பு குடிகேடுகள் ஆகின்றன. ஒளி நீங்க இருள் ஓங்குகின்றது; அளி மறையப் பழி நிறைகின்றது.

நல்ல குண நீர்மைகளை உடையவன் நல்லவனாய் உயர்ந்து எல்லா நலங்களையும் இனிது அடைகின்றான்; அல்லாதவன் பொல்லாதவனாய் இழிந்து பொன்றி ஒழிகின்றான்.

தண்ணளி மனிதனைப் புண்ணிய புனிதன் ஆக்கி எவ்வழியும் கண்ணியம் சுரந்து கதி புரிந்து வருதலால் அது அரிய இனிய அதிசய அமுதமாய்த் துதி செய்யப் பெறுகின்றது.

’சீவ கருணை சிவ கருணை’ என்றது அருள் விளைவின் பொருள் நிலை அறிய வந்தது. சிறிய துளி அளி பெரிய வெளி ஒளியாய் விளங்கியருள்கின்றது.

மனம் உருகி மனிதன் அருள் புரியின் கடவுளின் இனவுரிமையாய் உயர்ந்து அவன் தனி மகிமையை மருவுகின்றான். உள்ளம் இரங்கி உயிர்களுக்கு இரங்குவது உயர்பரனைத் தன்பரமாய்க் கொள்ள வருகின்றது. எவனுடைய உள்ளத்தில் கருணை பெருகி வருகின்றதோ அவன் கடவுளுடைய பிள்ளையாய் உயர் நிலையை அடைகின்றான்.

கண் ஒளி கதிர் ஒளியைக் கலந்து எண்ணரிய காட்சிகளை எய்தி மகிழ்கின்றது; தண்ணளி தயாபரன் அளியை மருவி விண்ணும் புகழ வியனான மாட்சிகளை விளைத்தருள்கின்றது.

நேரிசை வெண்பா

உள்ளம் அருளுடையான் ஓங்கு பரம்பொருளின்
வெள்ளம் பெருக விளைகின்றான் - உள்ளம்
மருளடைந்து வன்மையுறின் மாறாத் துயர
இருளடைந்து நிற்பன் இழிந்து.

அருள் இழந்த பொழுதே மனிதன் அநியாயமாய் இழிந்து அழிந்து படுதலை இதனால் அறிந்து கொள்ளலாம்.

நெஞ்சில் அளியில்லாதவன் கண்ணில் ஒளி இல்லாதவன் போல் இளி பழியனாய் அழிவான் என்றதனால் அவனுடைய வழியும் வாழ்வும் தெளிவாகி நின்றன. நல்ல அருள் வாசனை இல்லையாயின் எல்லாம் படு நீசமாய் நாசம் அடைகின்றன.

சீவர்களிடம் பிரியமாய்க் கருணை செய்கின்றவன் சிவ பெருமானுடைய இனிய கருணையை இயல்பாக எய்துகின்றான் என்றது உயிர் பரங்களின் தத்துவ உண்மைகளை உய்த்துணர வந்தது.

கடவுள் எங்கும் நிறைந்து எல்லார்க்கும் பொதுவான சாட்சியாய் விதி முறை செய்து விளங்கி நிற்கின்றார். பகை, உறவு என்னும் வகைகள் யாரிடமும் யாதும் அவர்க்கு இல்லை; சீவர்களுடைய செயல் இயல்களின் படியே அவரிடமிருந்து பலன்களை அவை அடைந்து கொள்கின்றன.

அருள் புரிபவன் அருள் பெற்று வாழ்கின்றான்; மருளுடையவன் மருளுற்று. மாள்கின்றான். வாழ்வும் வீழ்வும் தன் அகக்தே தழுவியுள்ளமையால் மனிதன் உண்மை நிலைமையை ஊன்றியுணர்ந்து யாண்டும் நன்மையுடையனாய் உய்ய வேண்டும்.

பிற உயிர்களிடம் தயவு புரிந்து வரின் அந்த இதயம் தரும நிலையமாய் மருவி வருகின்றது; தரும மூர்த்தியான பரமன் அதனைத் தனக்கு உரிய இனிய மனையாக உவந்து கொள்ளுகின்றான். அருள் மருவிய அளவே பாவ இருள் யாவும் கழிந்து சீவனிடம் சிவ ஒளி பெருகி எழுகின்றது.

ஆனந்த வடிவமான பரமன் ஆன்மாக்களுடைய அருள் நீர்மையில் விழைந்து வருதலால் அருள் பழுத்த பழச் சுவையே! என ஆர்வத்தோடு அன்பர்கள் கூவி அழைக்க நேர்ந்தார்.

அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

கருணை கனிந்த கனிரசமே
..கண்ணின் ஒளியே விண்ணிலவும்
அருண வெளியே அற்புதமே
..அகிலம் முழுதும் பரவியுள
வருண சீவ பேதங்கள்
..வாழ வாழும் வானகமே
தருண நிலவே தயாவுடையார்
..தன்னுள் இருக்கும் தனிமுதலே.

என இன்னவாறு இறைவன் யாண்டும் துதிக்கப்படுதலால் கருணையில் அவன் நீண்டு நிலைத்துள்ள நிலைமை புலனாம்.

தேவ அமுதம் என்றது சீவ கருணையால் ஆன்மா ஆனந்த போகங்களை அடைந்து வருதலை உணர்ந்து கொள்ள வந்தது. அருள் தேவ அமுதம் என்றமையால் அஃது இல்லாமை பாவ விடம் என்பது பெறப்பட்டது.

இரக்கமற்ற கொடிய நெஞ்சங்களிலிருந்துதான் நெடிய தீமைகள் விளைந்து வருகின்றன. அதனால் கருணையில்லாதவர் கதிநிலையை இழந்து இழி துயரங்களை அடைய நேர்கின்றனர்.

அருள்இல்லார்க்(கு) அவ்வுலகம் இல்லை; பொருள்இல்லார்க்(கு)
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 247 அருளுடைமை

சீவர்களிடம் இரங்கி அருள் புரியாதவர் பரகதியை இழந்து பரிதபிப்பர் என இது உணர்த்தியுள்ளது. அதனைத் தெளிவுறுத்த உவமை வந்தது. இவ்வுலகில் பொருள் இல்லாதவர் வறியராயிழிந்து இன்ப நலங்களை இழந்திருத்தல் போல் அருள் இல்லாதவர் மருளராய் மறுகி அவ்வுலகில் யாதொரு நலனுமின்றி அலமந்து தவிப்பர்.

அருளுடையவரே பேரின்ப வீட்டுக்கு உரியவர்; அல்லாதவர்க்கு அங்கு யாதும் இடமில்லை என்றமையால் கருணையின் மகிமையும், அது கதிநலம் அருளும் தகைமையும் காணலாகும்.

கலி விருத்தம்

அருளால் அமுதப் பெருங்கடல் ஆட்டி
அருளால் அடிபுனைந் தார்வமும் தந்திட்(டு)
அருளான ஆனந்தத் தாரமு தூட்டி
அருளாலென் நந்தி அகம்புகுந் தானே. 9

அருட்கண் ணிலாதார்க்(கு) அரும்பொருள் தோன்றா
அருட்கண் உளோர்க்கெதிர் தோன்றும் அரனே
இருட்கண் ணினோர்க்கிங் கிரவியும் தோன்றா
தெருட்கண்ணி னோர்க்கெங்கும் சீரொளி யாமே. 16

9 திருவருள் வைப்பு:

அருளில் தலைநின் றறிந்தழுந் தாதார்
அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்
அருளின் பெருமை அறியார் செறியார்
அருளின் பிறந்திட்(டு) அறிந்தறி வாரே. 1

அருளது என்ற அகலிடம் ஒன்றும்
பொருளது என்ற புகலிடம் ஒன்றும்
மருளது நீங்க மனம்புகுந் தானைத்
தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே. 8

- 10 அருளொளி, ஏழாம் தந்திரம், திருமந்திரம், பத்தாம் திருமுறை

அருளைக் குறித்துத் திருமூலர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

பரம்பொருளுக்கும் அருளுக்கும் உள்ள உரிமையை இந்தச் சிவயோகி சுவையாக விளக்கியுள்ளார். குறிப்புகளைக் கூர்ந்துணரின் அருளின் சிறப்புகளைத் தேர்ந்து கொள்ளலாம்.

தன்னையுடையானை முன்னவனாக்கிப் பேரானந்தப் பெருவாழ்வைத் தந்து வருதலால் அருள் நீர்மை மனிதனுக்கு இனிய அமுத சஞ்சீவியாய் அமைந்துள்ளது

’அருள் நீக்கி வாழல் அவம்’ இருள் நீக்கி இன்பம் பொழிகின்ற அருளை இழந்தொருவன் வாழ்வது மருள் மலிந்த துன்பமாதலால் பழிபட்ட அப் பாழ் வாழ்வை இது பரிந்து இகழ்ந்தது.

சீவ கருணை குன்றியவுடனே பாவம் படிகின்றது, படுதுயர்கள் தொடர்கின்றவாதலால் அது கெடுநிலை என வந்தது. அருளுடைய வாழ்வே உயிரின் பொருளுடையதாம்; அல்லாதது மருளுடையதாய் மாண்டு படுகின்றது. ஆன்ம அமுதை மேவிய அளவு மேன்மையும் இன்பமும் மேவி வருகின்றன.

கருணைப் பண்பு மனிதனைத் தெய்வமாக்கி மகிமை பல தருகின்றது; அதனை உரிமையுடன் ஓம்பி உயர் நிலை அடைக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Aug-19, 6:56 am)
பார்வை : 85

மேலே