அறிவீட்டம் பேணி அமைதி பெறுவார் பெறுவரே காணியாய் மேலாம் கதி - அமைதி, தருமதீபிகை 408
நேரிசை வெண்பா
பொறியோட்டம் எல்லாம் புலையாட்ட மாகி
வெறியாட்டம் எய்தி விளிவர் - அறிவீட்டம்
பேணி அமைதி பெறுவார் பெறுவரே
காணியாய் மேலாம் கதி. 408
- அமைதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
ஐம்பொறிகளின் வழியே அவாவி உழல்பவர் அவல வெறியராய் அழிவே அடைவர்; அறிவைப் பேணி அமைதியுறுபவர் மேலான கதியைப் பெறுவர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் அழிவில் வீழாமல் அமைதியில் ஆழ்க என்கின்றது.
போக நலங்களை விழைந்து உழலுவதே சீவர்களின் இயல்பாக அமைந்துள்ளது. உறங்குகின்ற நேரம் தவிர விழித்தெழுந்த போதெல்லாம் விடய இச்சைகளில் வெறியாகவே யாவரும் அலைந்து திரிகின்றனர்.
பொறிகள் ஐந்து ஆயினும் வெறிநிலைகள் அளவில்லாதபடி பல வகைகளில் பரவியிருக்கின்றன. கண்ணுக்குத் தெரிவன சில. எண்ணுக்கும் அரியன பல.
பெண் வெறி, மண் வெறி, பொன் வெறி, புகழ் வெறி, பதவி வெறி, பார்வை வெறி முதலாகப் பயித்தியங்கள் பலவாறு விரிந்துள்ளமையால் பல திறப்பட்ட வெறியர்கள் உலகம் எங்கணும் நிறைந்கிருக்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பித்தம் கொண்டு சித்த சுவாதீனத்தை இழந்து திரிகின்றார். பேதைப் பித்தர்கள் தம்மை மேதைச் சித்தர்களாக எண்ணிக் களிப்பது இயல்பாயுள்ளது.
இந்தப் பொறி வெறி எவ்வளவுக்கு எவ்வளவு குறைகின்றதோ, அவ்வளவுக்கு அவ்வளவு இனிய தெளிவுடையனாய் மனிதன் ஒளி மிகப் பெறுகின்றான். வெறி என்பது அருளற்ற மருள்நிலை. அந்நிலை இருள் நிறைந்த இன்னலையே விளைத்து வரும். அந்தப் பொல்லாத புலைநிலையை நீங்கினவர் நல்ல தெருளுடையராய் உயர்ந்து திவ்விய மகிமைகளை அடைகின்றனர்.
தவம், சீலம், ஞானம், யோகம் என்பனவெல்லாம் பொறிகளை அடக்கி நிற்கும் புனித நிலைகளையே குறித்து வருகின்றன.
பொறி வாயில் ஐந்து அவித்தான் (குறள் 6) எனக் கடவுளை இந்தவாறு குறித்திருத்தலால் பொறியடக்கத்தின் அருமை பெருமைகளை அறிந்து கொள்ளலாம். பொறிகளை அடக்கிய அளவு மனிதன் தெய்வமாகின்றான். அடக்காமல் போனால் பேயனாயிழிந்து பிழைபட்டு ஒழிகின்றான்.
‘பொறி ஓட்டம் எல்லாம் புலையாட்டம்’ என்றது அதன் நிலை காட்ட நேர்ந்தது. புலன் வழியே ஓடி உழல்கின்றவன் தனது ஆன்ம நலனை இழந்து விடுகின்றான். அந்த இழப்பால் இழிநிலைகளும் அழி துயரங்களும் உளவாமாதலால் அது புலையாட்டம் என வந்தது
தூண்டில் இரையைக் கவ்வி மீனும், விளக்கு ஒளியைக் கண்டு விட்டிலும், ஓசையைக் கேட்டு அசுணமாவும், வீசிய மணத்தை விழைந்து வண்டும், பரிசத்தை நச்சி யானையும்.அழிந்து படுகின்றன. அவ்வாறே ஐந்து புலன்களிலும் வெறியராய் மனிதர் இழிந்து கெடுகின்றனர்.
ஆசிரியப்பா
அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி
விளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும்
பன்மீன் போலவும்
மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும்
ஆசையாம் பரிசத் தியானை போலவும்
ஒசையின் விளிந்த புள்ளுப் போலவும்
வீசிய மணத்தின் வண்டு போலவும்
உறுவ துணராது செறுவுழிச் சேர்ந்தனை! 28 கோயில் நான்மணி மாலை, பதினொன்றாம் திருமுறை
அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
ஆனை யூற்றின், மீன்சுவையின்,
..அசுணம் இசையின், அளிநாற்றத்(து)
ஏனைப் பதங்கம் உருவம்கண்(டு)
..இடுக்கண் எய்தும்; இவைஎல்லாம்
கான மயிலின் சாயலார்
..காட்டிக் கெளவை விளைத்தலான்
மான மாந்தர் எவன்கொலோ
..வரையா(து) அவரை வைப்பதே. - சாந்தி புராணம்
எண்சீர் விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
உரைத்தவ சுனம்களிறு விட்டில் மீன்தேன்
..ஓசையூறு ஒளிஇரதம் நாற்ற மென்ன
நிரைத்தயிவற் றொன்றொன்றால் மாய்ந்து போகும்
..நிலையழிக்கும் அவைஐந்தும் நேரே கூடிக்
கரைத்தலுறு பவர்க்கின்பம் எங்கே? உன்றன்
..கட்டுக்கு வாதனையே கயிற்றுச் சாலம்
புரைத்தெழுநெஞ் சே!அதுவே போகு மாகின்
..பொருவில்சயம் அஃதுனக்குப் புகலுங் காலே. - ஞான வாசிட்டம்
நேரிசை வெண்பா
சிந்தா குலமனிதர் சீசீ செவிமுதலாய்
ஐந்தாலும் ஈடழிய வல்லரோ - ஐந்திலொரு
வேட்கை அசுணம் இபம்விட்டில் மீன்வண்டு
கேட்கைமுதல் ஓரொன்றன் கேடு. - அமுதசாரம்
நாயலகை நெய்விரும்பி நக்குவதும் நஞ்சிட்ட
பாயசமும் மெய்ப்பரிசம் பாவைமிகச் - சாயனீர்
வேட்கை அசுணமிபம் விட்டில்மீன் வண்டிவையின்
சாக்கியைக்கண் டார்துறவா தார். - ஒழுவிலொடுக்கம்
அசுணாதிக்(கு) ஓரொன்றால் ஐம்புல னானும்
இசையுமேல் கேடெ மக்குந் தீபற
எங்ஙனம் உய்தும் என்றுந் தீபற. - அவிரோதவுந்தியார்
கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
முந்த வேஒலி ஆதியின் ஒருகுணம் முன்னிப்
பந்த மோடிட ருற்றிறந் தனபல என்னின்
ஐந்து சேர்குணங் களுமொருங்(கு) ஆசையின் அடைந்தோர்
உய்ந்து போம்நெறி உண்டுகொ லோமதித் துரைக்கின், 11 – 4 பாகவதம்
பொறி வெறிகளால் அழிவுறுகின்ற உயிரினங்களைக் குறித்துக் காட்டி உறுதி நலங்களை இவை உணர்த்தியுள்ளன. பொருள் நிலைகளைக் கருதியுணர்ந்து மேலோருடைய உள்ளக் கருத்துக்களை ஊன்றி ஓர்ந்து கொள்க. உண்மை தெளிவது நன்மையாகும்.
வெளி முகமான விடய நுகர்ச்சி முதலில் இனிதாய்த் தோன்றினும் பின்பு கொடிதாய்த் துன்பம் தருதலால் அந்த மாய மயக்கில் வீழ்ந்து மாயாமல், அகமுகமாய்த் திரும்பி அமைதியுறின் தூய ஆன்ம போகம் நேயமாய் அமையும்.
’அமைதி பெறுவார் கதி பெறுவர்’ என்றது சித்த சாந்தம் முத்தி நிலையமாயுள்ளமையை உய்த்துணர வந்தது. மன அமைதி மன்னுயிரின் கதி ஆகின்றது.
சாந்தி யுடைமை தனிமகிமை யாயின்பம்
மாந்தி மகிழும் மதி.
புலையான பொறி நசைகளை ஒருவி உள்ளம் உள்ளே திரும்பவே நிலையான சாந்தமும் நேரான தெய்வ நீர்மையும் சேர்கின்றன. அந்த அனுபவம் பெருகிவரவே அது பேரின்பமாகின்றது என்கிறார் கவிராஜ பண்டிதர்..