சத்-தர்சன் ------தவச்சாலை

சத்-தர்சன் சிறுவாணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது. ஆனந்தகுமார் அதை ஒரு தவச்சாலை போல் அமைத்திருக்கிறார். இசை, ஓவியம், இலக்கியம், தியானம் ஆகியவற்றுக்கான இடம் அது. குளிர்ந்த காடு சூழ்ந்த கட்டிடங்கள். இனிய காற்று. உளம்கவரும் அமைதி.

மாலை அருகிலிருந்த மாரியம்மன் ஆலயத்திற்குச் சென்றோம். ஐம்பதாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கூரையிட்ட கோயில். அருகே பெரிய ஆலமரம். ஆனால் அப்பகுதியே ஆயிரமாண்டு தொன்மையை காட்டியது. அந்தியில் அங்கே சென்றது ஒரு ஆழ்ந்த அனுபவமாக அமைந்தது

சிறுவாணி ஆறு வெள்ளத்தில் மேலெழுந்து ஆனந்தகுமாரின் தோட்டத்தின் பெரும்பகுதியை மூடி சேறு நிறைத்து மீண்டுவிட்டிருந்தது. ஆகவே அந்தியில் அங்கே மின்மினிக்கூட்டம் எழுகிறது. ஏழுமணிக்கு அங்கே இருளில் ஓசையின்றி மின்மினிகள் எழுவதற்காகக் காத்திருந்தோம். மெல்லமெல்ல அனல்பொறிகள் எழுந்தன. சூழ ஒரு விண்மீன்வெளி உருவாகியது. மிதக்கும்போது ஒளிக்கோடு. பறந்தலையும் இமைப்பு. இருளில் விண்மீன்களினூடாக மிதந்தலைவதுபோல் ஒரு நடை.

ஆனந்தகுமார் இந்த இடத்தை எழுத்தாளர்கள் கலைஞர்களுக்காக உருவாக்கியிருக்கிறார். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இங்கே தங்கி எழுதவோ கலையை உருவாக்கவோ தியானம் செய்யவோ முடியும். மது, ஊனுணவு அனுமதி இல்லை. நாளுக்கு ஒன்றரை மணிநேரம் அங்கே ஏதேனும் வேலை செய்யவேண்டும். ஒருநாளில் காலை அரைமணிநேரம் தியான அறையில் ‘அமைதியாக அமர்ந்திருத்தல்’ என்னும் பயிற்சி உண்டு. அதற்கு வந்தாகவேண்டும். உணவுடன் தங்குமிடம் நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 350 ரூபாய் மட்டுமே.

வசதியான அறை. நல்ல உணவு சூழ்ந்திருக்கும் காடு. இரவின் ஆழ்ந்த ஓசைகள். நகரிலிருந்து விலகிச் சென்று எதையேனும் உருவாக்க நினைப்பவர்களுக்குரிய இடம் அது.

திறப்புவிழாவுக்குப்பின் தியானக்கூடத்தில் அமர்ந்து ஒரு மணி நேரம் பேசினோம். நண்பர் கதிர்முருகன், யோகேஸ்வரன் ராமநாதன் ஆகியோர் பாடினார்கள். நான் இந்து மெய்யியல் மரபில் குருமுறை பற்றி அரைமணிநேர உரை ஒன்றை ஆற்றினேன். மூன்று அடிப்படைக் கருதுகோள்கள் பற்றிய உரை.

காலையில் குளித்து நூற்பு அமைப்பிலிருந்து வாங்கிய இயற்கைச்சாயம் கொண்ட கைநெசவு சட்டையை அணிந்துகொண்டேன். நண்பர்களுடன் காட்டுக்குள் ஒரு நீண்ட நடை சென்றோம். நண்பர் கி.ச.திலீபன் [ஓலைச்சுவடி இணைய இதழ்] என்னை ஒரு நீண்ட பேட்டி எடுத்தார்.

எழுதியவர் : எழுத்தாளர் ஜெயமோகன் by Email (21-Jan-20, 7:09 pm)
பார்வை : 35

சிறந்த கட்டுரைகள்

மேலே