படிப்போம் பகிர்வோம் புத்தகங்களால் விரிந்த சிந்தனைச் சிறகு

வாழ்வை மாற்றிய புத்தகங்கள் குறித்தும் வாசிப்பு அனுபவம் குறித்தும் வாசகிகளை எழுதச் சொல்லி கடந்த வாரம் வெளியான இணைப்பிதழில் கேட்டிருந்தோம். தங்கள் சிறு வயது வாசிப்பு அனுபவத்தில் ஆரம்பித்து சிந்தனையை நேர்ப்படுத்திய புத்தகங்கள்வரை பலவற்றையும் வாசகிகள் உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டனர். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவங்கள் உங்கள் பார்வைக்கு…
-------------------------

பள்ளிப் பருவத்தில் நான் கலந்துகொண்ட போட்டியில் வெற்றிபெற்றதற்காகக் கிடைத்த பரிசுப் புத்தகத்தைத்தான் நான் முதலில் வாசித்தேன். வாசிப்பில் ஆர்வமூட்டியவர் என் அண்ணன். அவருடைய கல்லூரிப் பேராசிரியர், புத்தகம் வாசித்தால் மேன்மையான வாழ்க்கை அமையும் என்றும் பல நல்ல புத்தகங்கள் அறிவு வளர்ச்சிக்கு வித்தாக அமையும் என்றும் கூறியுள்ளார். அதைக் கேட்ட என் அண்ணன் பல புத்தகங்களைப் படித்தார். அவர் வேலைக்குச் சென்ற பின்னர் பல புத்தகங்களை எனக்குக் கொடுத்து வாசிக்கச் செய்தார். ஆர்.கே. நாராயண் எழுதிய, ‘சுவாமி அண்ட் ஃபிரெண்ட்ஸ்’ என்னும் ஆங்கிலப் புத்தகம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதற்குப் பிறகு பல புத்தகங்களை வாசித்தேன்.

கல்லூரியில் பேராசிரியர் சொன்னதைக் கேட்டு ‘பொன்னியின் செல்வன்’ வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், அதன் தமிழ்ப் பதிப்பு அந்நேரத்தில் கிடைக்காததால் நூலகத்தில் இருந்து ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தேன். திருமணத்துக்குப் பிறகு கணவர் பல புத்தகங்களை வாங்கித் தருகிறார். அவற்றை ஆனந்தமாகப் படித்து அறிவை வளர்த்துக்கொண்டு வலைத்தளத்தில் பல கட்டுரைகளை எழுதிவருகிறேன். எனக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்து, தன்னம்பிக்கையை ஊட்டியதில் புத்தகங்களின் பங்கு இன்றியமையாதது.

- சரண்யா, சென்னை.
-----------------------------
என் வயது 62. அப்போதைய தஞ்சை மாவட்டம் (இப்போது நாகை மாவட்டம்) கீழ்வேளூர் என் சொந்த ஊர். ராஜாஜியின் சுதந்திரா கட்சியில் என் தந்தை இருந்ததால் எங்கள் வீட்டில் ‘கல்கி’ வார இதழை வாங்குவார்கள். எனக்கு நினைவு தெரிந்து சுமார் பத்து வயது முதல் கல்கி இதழைப் படிக்க ஆரம்பித்தேன். ‘கல்கி’ எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ தொடர்கதையை 12 வயதிலேயே படிக்க ஆரம்பித்துவிட்டேன். அதைப் படிக்க நாங்கள் போட்டி போடுவோம். இதற்கிடையில் எங்கள் பக்கத்து வீட்டில் நாங்கள் படித்த பள்ளியின் இசை ஆசிரியை வசித்துவந்தார். அவருடைய கணவர், எங்கள் ஊரில் இருந்த நூலகத்தில் இருந்து கதைப் புத்தகங்களை எடுத்து வந்து படிப்பார். அவரிடம் கெஞ்சி அந்தப் புத்தகங்களை அப்பாவுக்குத் தெரியாமல் வாங்கி வந்து படிப்பேன்.

என் கணவருக்குத் தஞ்சாவூருக்கு மாற்றலானபோது அரசு வீட்டு வசதி வாரிய வீட்டில் குடியிருந்தோம். அந்த நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. அங்கு ஒரு சிறிய நூலகம் இருந்தது. அதில் உறுப்பினராகி நானும் என் தோழியும் இரண்டு நாட்களுக்கு ஒரு புத்தகமாக எடுத்துப் படிப்போம். நூலகத்தில் இருந்த முக்கால்வாசி புத்தகங்களைப் படித்து முடித்துவிட்டோம். என் கணவர் அரசாங்க வேலையில் இருந்ததால் அடிக்கடி மாற்றல் வரும். எந்த ஊருக்குச் சென்றாலும் வீடு பார்த்துக் குடியேறியவுடன் நூலகம் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து உறுப்பினர் ஆவதுதான் முதல் வேலை.

என் அத்தை வீட்டில் ஒரு நூலகமே வைத்திருந்தார்கள். என் அத்தையின் மகன்கள் நல்ல படிப்பாளிகள்; எழுத்தாளர்களும்கூட. அந்த நூலகத்தில் இருந்து உ.வே.சாமிநாத ஐயரின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘என் சரிதம்’ படிக்கக் கிடைத்தது. இப்பொழுதும் வார, மாத இதழ்கள் தவிர ஊர்ப்புற நூலகத்தில் இருந்து புத்தகங்கள் எடுத்துப் படித்துவருகிறேன். தினமும் இரவு புத்தகம் படித்தால்தான் தூக்கமே வரும்.

- பி.லலிதா, திருச்சி.
---------------------------------
ஹாலிவுட் திரைப்படமான ‘நார்னியா’வில் ஒரு காட்சி வரும். உறவினர் வீட்டில் இருக்கும் ஒரு பழங்கால பீரோவின் கதவைத் திறந்து ஒளிவதற்காகச் செல்லும் சிறுவர்கள், அதனுள் இருக்கும் வேறு ஒரு பனிப்பிரதேச உலகத்துக்குள் சென்றுவிடுவார்கள். அங்கே உள்ள உயிரினங்களுடன் பழகி, விளையாடி, போரிட்டு, வெற்றி பெற்று உலா வருகையில் கானகத்தில் நுழைந்து, திரும்ப பீரோவின் வழி அந்த வீட்டுக்கே வந்துவிடுவார்கள். அது மாய உலகமா உண்மை அனுபவமா என்பதைப் பார்வையாளரின் சிந்தனைக்கு விட்டுவிடுவார்கள். என் சிறு வயதில் அப்பாவின் புத்தக அலமாரி, அம்மாவின் புத்தகப் பெட்டி இரண்டுமே எனக்கு ‘நார்னியா’வில் வரும் பீரோவைப் போலதான்.

அப்பாவின் சேகரிப்பில் தேசியத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சார வெளியீடுகள், தமிழிலக்கியக் கட்டுரைகள் போன்றவை இருக்கும். அம்மாவின் பெட்டியில் ‘ராணிமுத்து’ நாவல்கள், பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதைகள் ஆகியவை இருக்கும். என் அன்றைய மனநிலையைப் பொறுத்து அம்மாவின் சேகரிப்பிலும் அப்பாவின் சேகரிப்பிலும் மாறி மாறிப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன்.

நான் ஐந்தாம் வகுப்பில் இருந்தபோது என் அப்பா ரேவதி ‘கொடி காட்ட வந்தவன்’ என்ற புத்தகத்தை எனக்குப் பரிசளித்தார். அது என் சிந்தனையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அது, விடுதலைப் போராட்டக் காலத்தில் நடந்த கதை. என் மனதில் அந்தப் புத்தகம் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தீண்டாமை பற்றி அப்போது எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதில் வந்த சிறுவனைப் போல் நாமும் ஏதேனும் பொதுக் காரியத்தில் ஈடுபட வேண்டும் என்ற சிந்தனையும் ஏன் சிறுமிகள் அவ்வாறு செய்யக் கூடாதா என்ற கேள்வியும் என் மனதில் தோன்றின.

குறைந்தது இரண்டு நாட்களாவது என் அப்பாவிடம் அந்தப் புத்தகம் பற்றிப் பேசி இருப்பேன். அதன் விளைவாக அருகில் உள்ள கிளை நூலகத்தில் உறுப்பினராக இருந்த என் மாமாவிடம் இருந்து நூலக டோக்கன் என் வசம் வந்தது. 3 புத்தகங்கள் எடுக்கலாம். அம்மாவுக்கு நாவல், அப்பாவுக்குப் பொதுக் கட்டுரை, இன்னொன்று என் விருப்பம் என்று தேர்வு செய்வேன். ஐந்தாம் வகுப்பில் தொடங்கிய பழக்கம், பல்லாண்டுகள் தொடர்ந்தது.

நூலகத்தில் கிடைத்த மறக்க முடியாத புத்தகம் தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’நமது சமூக அமைப்பு குறித்தும் பெண்மை பற்றிய கற்பிதங்களைப் பற்றியும் எனக்கு வெளிச்சத்தை ஏற்படுத்தியது அந்தப் புத்தகம். பதின் பருவத்தில் படிக்கையில் என் சிந்தனையில் பெரும் பாய்ச்சலை அது அளித்தது. இன்னும் பல புதிய படைப்புகளை எதிர்நோக்கிப் பயணித்துக்கொண்டிருகிறேன் நான்.

- ரஞ்சனி பாசு, மதுரை.
-------------------------------------
கிராமமாக இருந்து இன்று சிறு நகரமாக மாறிக்கொண்டுவரும் ஊரில் நான் பிறந்தேன். எனக்கு வாசிப்பில் நேசிப்பை ஏற்படுத்தியவர் என் அப்பாதான். பாடப் புத்தகங்களைத் தாண்டிய உலகத்தை அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். என் சிறு வயதில் தினமும் எங்கள் தையல் கடையில் காலையில் நாளிதழை நான் சத்தமாக வாசிக்க, அவர் கேட்டுக்கொண்டே துணிகளைத் தைப்பார். எனது வாசிப்பைத் திருத்துவார். நான் மூன்றாம் வகுப்பு படித்தபோதே என் வீட்டருகில் இருந்த நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன்.

பள்ளி நாட்களில் தினமும் நூலகம் மூடும் வரையில் படித்துக்கொண்டிருப்பேன். விடுமுறை நாட்களில் காலையில் நூலகம் சென்றால் மதியம்வரை அங்கேதான் இருப்பேன். நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து வந்தும் படிப்பேன்.

சாப்பிடும்போது புத்தகம் படிக்காமல் எனக்குச் சாப்பாடே இறங்காது. தமிழ்வாணன் எழுதிய சங்கர்லால் துப்பறியும் கதைகள், ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் என்று தொடங்கி அனுராதா ரமணன், இந்துமதி, சிவசங்கரி, வாஸந்தி, லட்சுமி என்று பரவி பாலகுமாரன், பிரபஞ்சன், எண்டமூரி வீரேந்திரநாத், சுஜாதா, சு.சமுத்திரம், அசோகமித்திரன், மதன் என்று விரிந்து கிடக்கிறது. இன்னதுதான் படிக்க வேண்டும் என்று நான் எந்தக் கட்டுப்பாட்டையும் வைத்துக்கொள்ளவில்லை. பொட்டலம் கட்டி வந்த பேப்பரைக்கூட படித்தபின்தான் தூக்கிப் போடுவேன். கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலைச் சமீபத்தில்தான் படித்தேன். அவரது எழுத்து நடை என்னை அப்படியே கட்டிப்போட்டுவிட்டது. ராஜராஜ சோழன் காலத்துக்கே நான் சென்றுவிட்டேன். என் மனதை மிகவும் கவர்ந்த புத்தகங்களில் இதற்குத்தான் முதலிடம்.

- தேஜஸ், கோவை.
-----------------------------
என் அப்பா கூட்டுறவு வங்கிப் பணியாளர். வாசி்ப்பு அவரது சுவாசமாக இருந்தது. எங்கள் வீட்டில் எப்போதும் செய்தித்தாள்களும் புத்தகங்களும் நிறைந்திருக்கும். என் வாசிப்பு அனுபவம் 3-ம் வகுப்பு படித்தபோதே ஆரம்பித்துவிட்டது. எட்டு வயதில் கதைப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். இப்போது 35 வயதிலும், திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பும் என் வாசிப்பு தொடர்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நான் தொலைந்துபோகாமல் நிறைய புத்தகங்களைப் (கட்டுரைகள், வரலாறு, தமிழ் இலக்கியம்) படித்துக்கொண்டே இருக்கிறேன். புத்தகங்கள் என் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்தன. படிப்பது சுகம், வாசிப்பது பேரானந்தம் என்பதை அனைவரும் உணரும் நாள் விரைவில் வரும்.

- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை.
---------------------------------------------------
புதுக்கோட்டையில் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்து கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவள் நான். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் புத்தகப் பிரியர்கள். வீடு முழுவதும் புத்தகங்களாக இருக்கும். ஆங்கில இலக்கியப் புத்தகங்கள் முதல் துப்பறியும் கதைப் புத்தகங்கள்வரை எல்லாம் நிறைந்து கிடக்கும். புத்தகங்களே துணையாக வளர்ந்த எனக்கு வாசிப்பில் ஆர்வம் வந்ததில் ஆச்சரியமில்லை. ஆறாம் வகுப்பு படித்தபோது வாரம் ஒருமுறை வாசிப்பு கட்டாயமானது. நூலகத்தில் இருந்து தமிழ்ப் புத்தகங்கள் எடுத்து வந்து ஒவ்வொரு மாணவருக்கும் ஆசிரியர் புத்தகம் கொடுத்து அமைதியாக மனதுக்குள் படித்துக்கொள்ளச் சொல்வார். அது மிகவும் நல்ல அனுபவம். தொடர்ந்து வாசிப்பில் ஈடுபட்டதால் வாசிப்பின் பரிமாணம் கூடியது. தமிழில் லட்சுமி, தேவன், ஜெயகாந்தன், கல்கி, ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன் ஆகியோரின் எழுத்துகள் என் வாசிப்பு உலகை விரிவடையச் செய்தன.

தற்போது எனக்கு 75 வயதாகிறது. புத்தகங்கள்தான் எனக்கு ஆறுதல், துணை, தோழி எல்லாம். வாசிப்பு ஒரு வரம். என் குழந்தைகள் சிறுவர்களாக இருந்தபோது அமர்சித்திரகதாவில் புராணக் கதைகள், சரித்திரக் கதைகள் போன்றவை சித்திரங்களுடன் வெளியாயின. சித்திரக் கதைகள் வந்த புதிது அது. ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் வாங்கிவிடுவேன். இன்றும் வாசிப்புப் பழக்கம் என் குழந்தைகளை விடவில்லை. மற்றவர்களுக்குப் பிறந்தநாள் பரிசாகப் பெரும்பாலும் புத்தகங்களைத்தான் கொடுப்போம். வாசிப்பு என்பது யாரையும் தொந்தரவு செய்யாத அமைதியான பொழுதுபோக்கு.

- லட்சுமி சுப்பிரமணியன், சென்னை.
---------------------------------------------------------
பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது என்ற பிற்போக்கு எண்ணமுடைய குடும்பத்தில் நான் பிறந்தேன். பிறந்து வளர்ந்தது மட்டுமல்ல; அதே கட்டமைப்பு கொண்ட குடும்பத்துக்கு மருமகளாகச் சென்றேன். புத்தக வாசிப்பால்தான் என் சிந்தனைக்குச் சிறகு முளைத்தது. ‘பாரதியார் கவிதைகள்’ என் செயலில் மாற்றத்தை ஏற்படுத்தின. நான் பள்ளியில் படித்தபோது பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்குவேன். நான் பரிசுகள் வாங்க உறுதுணையாக இருந்தவை பாரதியார் கவிதைகள்தாம். ஒவ்வொரு முறை போட்டிகளில் கலந்துகொள்ளச் செல்லும் போதும் என் அப்பா பாரதியார் கவிதைகளில் இருந்து மேற்கோள் காட்ட கவிதைகளை எடுத்துக் கொடுப்பார். பின்னர், ஒரு கட்டத்தில் நானே பாரதியார் கவிதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். பின் அவரின் ரசிகையாக மாறிவிட்டேன்.

நான் சோர்வாக இருக்கும்போதெல்லாம் பாரதியாரின், ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை’ என்ற வரிகளை மனதுக்குள் நினைத்துக்கொள்வேன். உடனே உற்சாகம் பிறந்துவிடும். ஜெயகாந்தன் எழுதிய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவல், முற்போக்குச் சிந்தனையை வளர்த்தது. பெரியாரின் புத்தகங்கள் என் மூடநம்பிக்கையை அகற்றின. அம்பேத்கரின் புத்தகங்கள் சமுதாயத்தின் பக்கம் என் பார்வையைத் திருப்பின. சான்டில்யனின் ‘கடல் புறா’ போன்றவை சரித்திரத்தை கண்முன்னே கொண்டுவந்து காட்டின. வாழ்க்கை மாற்றத்துக்கான கருத்துகள் எப்போதும் புத்தகங்களின் மூலமாகவே எனக்குக் கிடைக்கின்றன. களிமண்ணாக இருந்த என்னை உருவாக்கிச் செதுக்கியவை புத்தகங்களே. புத்தகங்கள் கையிலிருப்பதால்தான் நான் உயிர்ப்புடன் இருக்கிறேன்.

- பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி.
---------------------------------------------------------------------

எழுதியவர் : இந்து தமிழ் திசை Hindu Tamil (25-Jan-20, 5:32 am)
பார்வை : 121

சிறந்த கட்டுரைகள்

மேலே