ஒளியேற்றியவர்--------செயல்

ஒளியேற்றியவர்
--------------------------
ஆகஸ்ட் 5, 2017
ஜெ,
இன்று எதேச்சையாக இக்கட்டுரையை காண நேர்ந்தது. இருமுறை கடந்து சென்றபின் தெரிந்த முகம் என உறைத்து படித்து பார்த்தேன். மேகாலயாவின் தொலைதூர மலைப்பகுதியை
நமது குழும நண்பர் (உயர்ந்த மனிதர்) ராம்குமார் IAS அவர்கள் அம்மக்களின் பங்களிப்போடு ஒளியேற்றிய கதை.
ஒரு நாளில் பல செய்தி கட்டுரைகளை கடந்து செல்கிறோம். பெரும்பாலும் எதுவும் கவனத்திலோ நினைவிலோ நிற்பதில்லை. ஆனால் இக்கட்டுரையில் சில எளிய தகவல்கள் மற்றும் அனுபவங்கள் வழியே அந்நிலத்திற்கு கூட்டிச் செல்கிறார் நமது கலெக்டர்.
அறித்த முகங்களை செய்திக் கட்டுரையில் பார்ப்பது எப்போதும் ஒரு பரவசம்தான்:)

தே.அ.பாரி
---------------------
அன்புள்ள பாரி,

நன்றி. நீங்கள் சொல்லவில்லை என்றால் கவனித்திருக்க மாட்டேன். நம் நண்பர்கள் குழு அனைவருக்குமே பெருமிதம் அளிக்கும் செய்திதான். ராம் குமார் அந்த மாநிலத்திற்குச் செய்த பிற பணிகளும் நாம் அறிவோம். ஒவ்வொரு தருணத்திலும் அவர் அந்த மாநிலத்தையே நினைத்துக்கொண்டிருப்பதை எண்ணி வியந்து பேசியிருக்கிறோம்.

ஒருமுறை பயணத்தில் மிளகுக்கொடியைப் பார்த்ததுமே மிளகு மேகாலயாவில் வளருமா என்று அவர் ஆர்வம்கொண்டதையும் அதற்கான நிபுணர் ஆலோசனைகளை தேடியதை நினைவுகூர்கிறேன். சூரிய ஒளி மின்சக்தி அளிப்பதைப்பற்றி அவர் தொடர்ந்து உற்சாகத்துடன் பேசியிருக்கிறார்

வெற்றுப் பேச்சு நம்மை ஆட்கொண்டிருக்கும் காலம் இது. உண்மையான செயல்வீரர்கள் நம் வணக்கத்திற்குரியவர்கள்.

ஜெ
--------------------------------------------------------------------------------------------------------
செயல்
-------------
ஜனவரி 25, 2020

அன்பின் ஆசிரியருக்கு,

நான் அரசில் பணி செய்ய முயன்றதற்கு காரணமே செயல் தான். எந்த பெரிய பொது செயலை செய்யவும் அதன் பயனை பெறவும் அரசின் பங்கு மிக முக்கிய ஒன்று. சிறிய செயல்களாக பலவற்றையும் தனி நபர்களோ சிறு குழுக்களோ செய்யலாம் ஆனால் அதை நிறுவனமயமாக்குவதென்பது அரசு மட்டுமே செய்ய முடியும். அதனாலேயே நான் இந்த பணியில்சேருவதற்கு முயன்றேன். இந்த பணியில் சேர்வதற்கு முயலும் அனைவரும் அப்படியே எண்ணுகிறார்கள் என்றே நம்புகிறேன். பணியில் சேர்ந்து சில ஆண்டுகளில் அன்றாட சீரமைப்பில் இருந்து முக்கிய செயல்களாக மாறிய பணிகளைப்பற்றி சமீபத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

மேகாலயாவில் நான் பணி செய்யும் தென் மேற்கு காரோ மாவட்டத்தில் இருந்த பெரிய சிக்கல்பெண்கள் தங்கள் இல்லங்களிலேயே பிரசவம் பார்த்துக்கொள்வது. அதுவே அங்கு இயல்பானபழக்கம். உலக சுகாதாரன நிறுவனமும் பல வல்லுனர்களும் நிரூபிப்பது அப்படிப்பட்ட பிரசவங்கள் தாய் அல்லது பிள்ளையின் மரணவிகிதத்தை அதிகரிக்கின்றன. எங்கள் மாவட்டம் முழுவதும் கிராமங்களால் ஆனது. ஒரு சிறு, குறு நகரம் கூட கிடையாது. மக்கள் அரசின் மருத்துவ வசதிகளை நம்பியே உள்ளனர். ஒரு தனியார் மருத்துவர் கூட கிடையாது. இந்த சூழலில் என் மாவட்டத்தின் மொத்த பிரசவங்களுள் 50 சதவீதம் மட்டுமே மருத்துவமனைகளில் நடைபெற்றன. தமிழகத்தில் இது 98 சதவீதத்திற்கும் மேல். இந்த பிரசவத்தை மருத்துவமனைகளில் பார்த்தால் சிசுவையும் தாயையும் தொற்றுநோய்கள் இன்றி காப்பாற்ற முடியும். மேலும் பிள்ளைகள் ஆரோக்கியமாக வளர்வதற்கான தடுப்பூசிகள் இடுவதற்கும் காப்பதற்கும் இதுவே முக்கிய தொடக்கம். இதை எல்லாம் விடமுக்கியமானது இப்படிப்பட்ட பிள்ளைகள் இருக்கிறார்கள் தாய்மார்கள் இருக்கிறார்கள் என்பதே அப்போது தான் அந்த அரசு நிர்வாகத்திற்குள் தெரியும். எனவே ஊரக மருத்துவத்தை சற்றேனும் மாற்ற வேண்டும் என்றால் அதற்கு முதலில் செய்ய வேண்டியது தாய் சேய் நலம்.

பிற மாநிலங்களில் இதை எப்படி செய்திருக்கிறார்கள் என்று பார்க்கும்போது அது பெரும்பாலும் பெரிய ஊக்கத்தொகையை மைய்யப்படுத்தியே இருந்திருக்கிறது. தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒருபிரசவத்திற்கு 18,000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. 12,000 பணமாகவும் 6,000 ரூபாய்பொருட்களாகவும் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு பிரசவத்தை அரசு மருத்துவமனையில்செய்வதற்கு ஆகும் சராசரி செலவு 22,000 முதல் 23,500 ரூபாய். தமிழகத்தின் மொத்த பொதுஉடல்நல மற்றும் சுகாதாரத்துறையின் பட்ஜெட் 12,500 கோடி ரூபாய். மேகாலயாவின் மொத்தபட்ஜெட்டே 15,000 கோடி தாண்டாது. பொது மருத்துவம் சிறப்பாக இருந்தாலும் கேரளாவில் பிரசவம் பெரும்பாலும் தனியார் மருத்துவம்தான்.

தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் நிலைமை இப்படி இருக்க ஊக்கத்தொகை இல்லாமல் எப்படி இந்த பிரசவங்களை மருத்துவமனைகளில் நிகழ்த்துவது என்பது பெரிய சவாலாக இருந்தது. சமீபகாலங்களில் தொழில்நுட்பத்தைப்போல வறுமையை ஒழிக்கும் ஒரு ஆயுதம் இல்லை. வறுமையை வேறு ஒரு வடிவமாக்குவது, அதில் பிறரை பங்கெடுத்து வறுமையை குறைக்க உதவுவது, ஊழலைஒழிப்பது, குறைப்பது, சமூக ஏற்றத்தாழ்வுகள் இன்றி அனைவருக்கும் ஒரே தரமான சேவையைகொண்டு சேர்ப்பது என்று தொழில்நுட்பம் பலவகையில் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சமூகசீர்த்திருத்த கருவியாக மாறிவருகிறது. அதுவும் மிகவும் பின் தங்கிய சமூகங்களில் இதன் பலனை உடனடியாக பார்க்க முடியும். இதை பல்வேறு விதத்தில் கற்று உணர்ந்த நான் செலவில்லாமல் செய்வதற்கான வசதிகளை தேடிக்கொண்டிருந்தேன். அப்படி கிடைத்தது ஒரு செயலி. ஹார்வர்ட்பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்த செயலி சி.டி.எப்.ஐ என்ற ஒரு சமூகநோக்குகொண்ட இந்திய நிறுவனத்தால் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்த செயலியின் மூலம் இறுதிகட்ட பிரசவகாலத்தில் இருக்கும் தாயை அணுகி அவர்களின் விவரம்அறிந்து அதை பதிவேற்றி, தினமும் அவர்களை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டுவரவழிவகைகள் செய்தோம். இந்த செயலியை இடைநிலை மருத்துவச்சிகளுக்கும்மருத்துவர்களுக்கும் அளித்து இந்த பணியை செய்ய சொன்னோம். இந்த செயலி இணையம்இல்லாத சமயங்களிலும் செயல்படும். தகவல்களை சேகரிக்க இணையம் தேவையில்லை. மருத்துவச்சிகள் தகவல்களை சேகரித்து அவர்கள் சென்றதற்கு சான்றாக ஒரு புகைப்படமும் அந்தஇடத்திற்கான புவியிடங்காட்டியையும் பதிவு செய்வார்கள். பணியை முடித்து வீடு திரும்பியபின்னரோ அல்லது மருத்துவமனைக்கு சென்ற பின்னரோ இணையம் மூலம் அது பதிவேற்றமாகும்.

இப்படி ஒவ்வொருவரும் மாவட்டத்தில் என்ன பணி செய்கிறார்கள் என்று கண்காணிக்க முடிந்தது. எங்கு யாரின் பணி சிறப்பாக இருந்தது என்பதனையும் இதில் பார்க்க முடியும். மேலும் இதில் அதிககவனம் தேவைப்படும் தாயையும் கண்டறிய முடியும். அதன் மூலம் அவர்களின் மரணத்தையும் சிசுவின் நலத்தையும் காக்க முடியும். பிப்ரவரி 2018ல் இதை தொடங்கினோம். அந்த மாதம்பிரசவத்தின் அளவு வெறும் 45%. ஜூன் மாதம் கணக்கெடுக்கும்போது அது 80% த்தை தொட்டது. தற்போது அது 90% வரை நெருங்கியுள்ளது. இதுவரை மருத்துவமனைக்கு வராத மாதர்களும்அவர்கள் குடும்பத்தினரும் வந்தனர். ஒரு பெண் இதற்கு முன்னர் நான்கு குழந்தைகளையும் தனியாகவீட்டிலேயே பெற்றெடுத்திருக்கிறார். இந்த முறைதான் முதன் முதலில் மருத்துவமனைக்கு வந்திருந்தார். மேலும் அந்த பெண்ணின் ரத்த அளவும் மிகக் குறைவாக இருந்தது. சரியானநேரத்தில் செயல்பட்டதால் வேறுவிபரீதங்கள் இன்றி தடுக்க முடிந்தது. அன்று அந்த மருத்துவர்எனக்கு அழைத்து சொன்னபோது மிகவும் நெகிழ்ந்துபோனேன். சிசு இறப்பு விகிதத்தையும் தாயின்இறப்பு விகிதத்தையும் இந்த ஆண்டில் கனிசமாக குறைத்திருக்கிறோம்.

தொழில்நுட்பம் மிக ஆழமாக பல தகவல்களை எங்களுக்கு திரட்டி தந்து இந்த சேவையை மிகவும்கூர்மையாக கவனிக்க உதவினாலும் இது வெற்றிபெற உதவியது வேறொரு முக்கிய காரணி. அதைநான் ஒரு பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தபோது உணர்ந்தேன். கிராமத்தில் இருக்கும் ஏழைகள்வீட்டிற்கு விருந்தாளிகள் வருவதில்லை. விருந்தோம்பல் என்பது காரோ பழங்குடிகளில் வேறுவகையாக இருந்தாலும் விருந்தினர்களை உபசரிப்பதை மிக கவுரமான ஒரு செயலாகவே அவர்கள் உணர்கிறார்கள். மருத்துவச்சிகள் சான்றாக எடுத்த படங்களை பார்த்தபோது அதில் இருந்த உணவுபண்டங்கள் ஆச்சரியப்படுத்தின. மருத்துவர்களையும் மருத்துவச்சிகளையும் அவர்கள் விருந்தினர்களாக உபசரித்து அவர்களின் வருகைக்கு மதிப்பளித்து மருத்துவமனையில்வந்து பிரசவம் பார்க்கின்றனர். இந்த ஒரு தகவல் நாம் எத்தனை கூர்மையாக எண்களை அடக்கிபுள்ளியல் ரீதியாக ஆராய்ச்சி செய்தாலும் புரியாது. இலக்கிய பரிச்சியமோ அல்லது என் சமூக கல்விபரிச்சியமோ இதை எனக்கு உணரவைத்தது. இதை நான் தில்லியில் நடந்த ஒரு விருதுநிகழ்ச்சியில் பகிர்ந்தபோது அதன் உண்மையை பல மருத்துவர்கள் உணர்வதை பார்த்தேன். சட்டென்று அழகிரிசாமியின் கதைதான் நினைவுக்கு வந்தது.

மாநில முதல்வரின் திரு.கான்ராட் சங்மாவின் ஆர்வத்தாலும் இதன் தொடக்க வெற்றிகளாலும்இன்று இந்த திட்டத்தை மாநிலம் முழுவதிலும் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். அதேவெற்றியை பெறுவோம் என்று நம்புகிறேன். இதை விரிவாக்கவும் எண்ணுகிறோம். தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால் மட்டுமே இந்த நூற்றாண்டில் இத்தனை மனிதர்களைஓரளவிற்கு நிர்வகிக்க முடிகிறது. மையமாக்கப்பட்ட அரசு என்பது ஒரு பழங்குடியில் இல்லை. அப்படிப்பட்ட ஒரு இடத்தில் அரசு நிறுவனங்களும் அத்தனை செரிவான நிலையை இன்னும்அடையவில்லை. அரசு என்ற ஒரு நிறுவனத்தை மக்களிடம் சேர்க்கவும் இப்படி தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன.

இதை உங்களுக்கு எழுதுவதற்கான காரணம் இந்த பணியில் சேர்வதற்கு தயாராகும் பலரும் உங்கள் தளத்தை வாசிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு ஊக்கமாகவும் செயலின் உன்னதத்தை நான் உணர்ந்த தருணத்தையும் கூறுவதற்காக இந்த பகிர்வு. இது சம்பந்தமான ஒரு காணொளியையும இங்கு இணைத்துள்ளேன்.

இதைப்போல பல மாநிலங்களில், மாவட்டங்களில் பலர் முயன்றிருக்கிறார்கள் என்பதையும் இங்கு பதிவிட விரும்புகிறேன்.

நன்றி

சா.ராம்குமார்.

எழுதியவர் : பாரி------ஜெ & --------------- ச (25-Jan-20, 5:49 am)
பார்வை : 96

மேலே