47 அரசு இன்றேல் உலக ஒழுக்கம் அழியும் - குடிகளியல்பு 1

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா விளம் மா / விளம் விளம் மா
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

வேந்தனே யில்லா விடினுல கத்து
..மேலது கீழதா மணஞ்செய்
காந்தனுக் கடங்கிக் களத்திரம் நடவாள்
..காதலர் தந்தைசொற் கேளார்
மாந்தர்வே ளாண்மை முதற்றமக் குரிய
..வளமைகூர் தொழில்களின் முயலார்
சாந்தருந் தீய ராவரேல் தீயர்
..தன்மையைச் சாற்றுமா றெவனோ. 1

- குடிகளியல்பு
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மன்னன் இல்லையென்றால் உலகத்தில் மேன்மை யெல்லாம் தாழ்வை அடையும். திருமணம் செய்த கணவனுக்கு மனைவி அடங்கி குடும்பம் நடத்த மாட்டாள். பிள்ளைகள் தந்தை சொற்படி கேட்க மாட்டார்கள். உழவர் முதலான மக்கள் பயிர்த் தொழில் முதலாக அவரவர்களுக்கு உண்டான செழுமை தரும் தொழில்களைச் செய்ய மாட்டார்கள்.

அமைதியான வரும் தீய செயல்களைச் செய்பவர் களாக ஆவார்கள் என்னும் பொழுது தீயவர்களின் தன்மையைச் சொல்லவும் வேண்டுமா” என்றும், அரசு என்ற ஒன்று இல்லையென்றால் உலக ஒழுக்கம் அழிந்துவிடும் என்றும் கூறுகிறார் இப்பாடலாசிரியர்.
.
களத்திரம் – மனைவி, குடும்பம்,
காதலர் – பிள்ளைகள்,
மாந்தர் – உழவர் முதலான மக்கள்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jan-20, 1:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

சிறந்த கட்டுரைகள்

மேலே