கவி காளமேகம் தம் கவித்திறம் கூறியது - நேரிசை வெண்பா

அதிமதுரக் கவிராயர் தம்முடைய கவித்திறத்தை எடுத்துக்கூறிப் பெருமை பாராட்டிக் கொண்டார். தம்முடைய கவித்திறம் அவர்க்கும் அதிகம் எனக் கவிராயர் அப்போது அதிமதுரத்திற்கு எதிரிட்டுக் கூறியது இந்தச் செய்யுள்

நேரிசை வெண்பா

இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணுாறும்
அம்மென்றால் ஆயிரம்பாட் டாகாதோ - சும்மா
இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாயின்
பெருங்காள மேகம் பிளாய்! 9

- கவி காளமேகம்

பொருளுரை:

‘இம்’ என்று சொல்வதற்கு முன்னே எழுநூறு, எண்ணுாறு பாடல்களும், 'அம்' என்று அடுத்துச் சொன்னால் அதற்குள் ஆயிரம் பாட்டுகளும் ஆகிவிடாதோ? சிறுவனே! (அதிமதுரத்தை நோக்கிக் கூறியது) நீ சும்மா இருந்தாயானால் நானும் சும்மாயிருப்பேன்; நான் எழுந்து பாடத் தொடங்கினேனானால் பெரிய கார் மேகமாகப் பொழிவேன் (என்று அறிவாயாக) என்று அதிமதுரப் புலவர்க்கு அறிவுறுத்துகிறார் கவி காளமேகம்.

'பிளாய்' என்ற சொல்லின் பிரயோகத்தைக் கவனிக்கவும். தம் கவிவன்மைக்கு எதிரே அதிமதுரம் சிறு குழந்தை என்று கூறியதும் ஆம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jan-20, 3:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

மேலே