‘கம்ப ராமாயணக் கவி அழகும் நயமும் - பாடல் 03 தம்மில் மயங்கும் மாமருத வேலி

பால காண்டம், நாட்டுப் படலத்தில் ’மருத நிலத்தில், பல ஒலிகளும் தம்முள் கலந்து ஒலிப்பதை சுவையுடன் கம்பர் கூறுகிறார். கோசல நாட்டின் மருத நில வளமையையும், ஓரிடத்தில் எழும் ஓசை கொண்டு அவ்விடத்தின் இயல்பினை அறிந்து கொள்ள முடியும். கடலுக்கு உரிய சங்குகள் புது வெள்ளப் பெருக்கில் எதிரேறி மருத நிலத்திற்கு வந்தன.

தனித் தனியே பிறக்கும் ஓசைகள் பரவும்போது கலந்து ஒலிப்பதை ‘மாறு மாறு ஆகித் தம்மில் மயங்கும்’ என விளக்குகிறார். வெவ்வேறு பொருட்களில் இருந்து எழும் ஒலி வெவ்வேறு சொற்களாக - அரவம், அமலை, ஓதை, ஓசை, தமரம், துழனி – அறியப்படுகின்றன. இவை ஒரு பொருட் சொற்கள் ஆகும்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

ஆறுபாய் அரவம், மள்ளர்
..ஆலைபாய் அமலை, ஆலைச்
சாறுபாய் ஓதை, வேலைச்
..சாங்கின்வாய்ப் பொங்கும் ஓசை,
ஏறுபாய் தமரம், நீரில்
..எருமைபாய் துழனி, இன்ன
மாறுமா(று) ஆகி, தம்மில்
..மயங்கும்மா மருத வேலி. 3

- நாட்டுப் படலம், பால காண்டம், ராமாயணம்

பொருளுரை:

”வயல் வெளிகளில் ஆற்று நீர் பாய்வதால் எழும் மெல்லிய சலசல ஓசை. உழவர்கள் கரும்பு வயல்களில் வேலை செய்யும் பொழுது கரும்புத் தோகைகளால் உண்டாகும் சரசர ஓசை. கரும் பாலைகளில் கரும்பைப் பிழிந்து கருப்பஞ்சாறு பாய்வதால் எழும் ஓசை.

புது வெள்ளப் பெருக்கில் கடலிலிருந்து எதிரேறி நீர்க் கரைகளில் உள்ள சங்குகளிடமிருந்து பெருகும் ஓசை. எருதுகள் தம்முள் மோதிப் பாயும்போது அவைகளின் கொம்புகள் உராய்வதால் எழும் ஓசை. நீர்நிலை களில் எருமைகள் படிந்து எழுவதால் உண்டாகும் ஓசை.

இத்தகைய ஓசைகள் வெவ்வேறாக மாறி மாறி தமக்குள் ஒன்றோ டொன்று கலந்து ஒலிக்கும் பெருமையுடையது கோசல நாட்டின் மருத நிலம்” என்று கம்பர் சுவைபட உரைக்கின்றார். அவ்வொலி கள் இயற்கையை அனுபவித்தவர்களால்தான் புரிந்து கொள்ள முடியும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jan-20, 3:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 67

சிறந்த கட்டுரைகள்

மேலே