‘கம்ப ராமாயணக் கவி அழகும் நயமும் - 04 மருதம் கொலு வீற்றிருக்கும் மாட்சி

பால காண்டம், நாட்டுப் படலத்தில் இயற்கையை கம்பர் மருதமாகிய மன்னன் அரசவையில் அமர்ந்து இருப்பதாக வர்ணிக்கும் காட்சி.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

தண்டலை மயில்கள் ஆட,
..தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க,
..குவளைகண் விழித்து நோக்க,
தெண்திரை எழினி காட்ட,
..தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட,
..மருதம்வீற் றிருக்கும் மாதோ. 4

- நாட்டுப் படலம், பால காண்டம், ராமாயணம்

பொருளுரை:

குளிர்ச்சி பொருந்திய பூஞ்சோலைகளில் மயில்கள் ஆடவும், தாமரை மலர்கள் விளக்குகளை ஏந்தி ஒளி தரவும், மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி மத்தளம் போல ஒலி எழுப்பவும், குவளை மலர்கள் மலர்ந்து கண்களைப் போல விழித்துப் பார்க்கவும், தெளிந்த நீர்நிலைகளின் அலைகள் அழகு பொருந்திய எழில் காட்சியைக் காட்டவும், தேனைப் பிழிந்தது போன்ற மகர யாழினும் மேலாக வண்டுகள் இனிமையாகப் பாடவும் ஆகிய இசையும் கூத்தும் பொலிகின்ற அரங்கத்தில் மருத மன்னன் வீறு தோன்ற அமர்ந்திருப்பது போன்றிருந் தது” என்கிறார் கம்பர்.

கவிஞன் கையாளும் உவமை இயல்புக்கும் மரபுக்கும் ஒத்ததாக கவிதையை வாசிப்பவர்க்கு இன்பம் தரும். கொண்டல் முழங்க மயில்கள் ஆடும்; குவளை மலரும் மாலைப் பொழுதில் தாமரை மலர்கள் குவிந்து விடும், இந்த இயல்பு பிறழாமல் வரிசைப்படுத்தும் கவிஞனின் திறன் துய்ப்பார்க்குச் சுவையான அனுபவமாகும்.

மருதத்தை ஆண்பாலாக்கி உரையாசிரியர்கள் மருத மன்னன் என்றனர். அது பொருத்த மானாலும், இயற்கையை அன்னை எனப் போற்றும் மரபினால் மருத நாயகியாகவும் உரைக்கப்படுகிறது.

பேரா.அ.ச.ஞானசம்பந்தன், ’எதிரே கொலு வீற்றி ருக்கும் அரசி மருதாயி நாச்சி இக்காட்சியைக் கண்டு களிக்கிறாள்’ என்று உரை அளித்திருக் கிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jan-20, 4:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே