விழி நீர் சிந்தி வீற்றிருப்பேன்
ஆற்றங்கரைத் தோப்புகளில் ஓடிவிளையாடி
அகமகிழ்ந்த நாட்களை நீ மறந்தனையோ தோழி?
காற்றினிலே உதிர்சருகாய் காதலானதேனோ ?
காலமெலாம் உன்நினைவால் நான்கரையத்தானோ?
மேற்றிசையில் செங்கதிரோன் மறைகின்ற நேரம்
மென்மை மணல் மூடியுள்ள ஆற்றங்கரை ஓரம்
ஏற்றிவைத்த அன்பெனும் விளக்கேற்றி நானும்
ஏந்திழையே! உனைக்காணக் காத்திருப்பேன் தினமும் .
மண்மேட்டில் பதிந்து இருக்கும் வண்டித்தடம் பின்பு
மறைகின்ற தன்மையைப்போல் நம் தூய அன்பு
மண்ணோடு கரைகின்ற கொடுமை என்ன கொடுமை ?
மறைந்துவிடும் காவியமோ நம் காதற்பெருமை ?
விண்முகட்டில் நிலவுதொட்டு விளையாடும் நேரம்
விழி நீரைச் சிந்தியந்த ஆற்றங்கரையோரம்
கண் மேட்டில் காதலெனும் கொடிஒன்றை ஏற்றி
காத்திருப்பேன் உனக்காக நினைவுகளைப் பற்றி