இது ஒரு கொரோனாக் காலம்
இது ஒரு கொரோனாக் காலம்
பூட்டிய வீட்டுக்குள்
பூட்டப்படா மனச்சிறைகள்
நம்பிக்கையின் எச்சில் தொட்டு
வரைகின்றன எதிர்காலத்தை!
கடந்து சென்ற காலச் சுவடுகள் நினைவுகள் நீருற்ற
வேர்பிடிக்கப் பார்க்கிறது
மனத் திண்ணையில்!
சாதியும் மதமும்
வெள்ளாவியில்
வெளுத்த ஆடைகளாய்
மனிதத்தின் மடியில்!
பரணில் கிடந்த சாஸ்திரங்கள்
உயிர்ப்பிக்கப்படுகின்றன
சாம்பிராணிப் புகையில்!
காலிப் பானைகள்
பாசக் கரண்டி கொண்டு
பரிமாறிக் கொள்கின்றன
பட்டினியை!
நாகரீகப் போர்வையின் கிழிசல்கள்
விலை போகின்றன
முகமூடிகளாய்!
ஊரடங்கிப் போனதில்
ஓர் கூட்டில் ஒடுங்கி மகிழ்வாய்
பணிப்பிணியில் தள்ளி வைக்கப்பட்ட
தாயும் சேயும்!
துரித உணவகங்களின் பூட்டுக்கள்
சாவியிட்டுத் திறக்கின்றன்
வீட்டுச் சமையலறையை!
ஓசோனைத் துளையிட்ட
புகைக் கரங்களில்
விலங்கிடப்படுகிறது
தற்காலிகமாய்!
நோன்பாலும் வேம்பாலும்
தன்னை
சுத்திகரிக்கத் தொடங்கியது
காலம்!
சு. உமாதேவி

