வலை

#வலைகள்

பின்னுவதற்கும் வீசுவதற்கும்
வித்தியாசங்கள் பலவாய்
பின்னியதில் சிக்குவோர்
மீள்வது கடினம் தான்..
சூட்சுமத்தில் வீசுவது
மகாபாரத பகடைத்தனமாய்…

உயிர் சேதங்களின் பின்னால்தான்
பின்னிய வலைகள்
அறுதெரியப்பட்டது மகாபாரதத்தில்..
சதிவலையை அறுத்தெரிய
பரந்தாமனின் அனுகூலம்
தேவையாய் இருந்தது.!

முன்னேற்றத்தை முடக்க
வீசப்படும் அதிகார வலைகளை
நாசுக்காய் அறுக்கும்
புத்திசாலித்தனங்களில்
சிதறுண்டு போகும்
சதிகார வலைகளுமுண்டு…!

மீன் வலைகள்
சிறிதும் பெரிதுமான இடைவெளிகளில்
பின்னப்பட்டத்தில்
சிக்கும் மீன்கள்
பின்னப்பட்டும் துள்ளுகிறது
கொதிக்கும் குழம்பினுள்..!

கடல் ஏரி வாழ்
இறைச்சி உயிரினங்களுக்கு
கடைசியான வாழ் நாளில்
எமன் வீசுவது
மீன் வலைகளைத்தான்..!

காதலனுக்கு காதலி வீசும்
விழி வலைகள் வினோதமானது
மூலப்பொருள் ஏதுமின்றி
பின்னப்பட்டு
முன்னறிவிப்புன்றி வீசியதில் சிக்கி
மீள்தலின்றி முடங்கிக்கிடப்போர்
பலருண்டு
உண்மை காதலுக்கு உன்னத வலை
உதவாக்கரை காதலுக்கு
இறுக்கும் சுருக்கு…

கடந்த நூற்றாண்டில் துவங்கி
இந்த நூற்றாண்டிலும்
வெற்றி நடைபோடுகிறது
இணையதள மின் வலைகள்..
வலை வீசி அடிமைப்படுத்திவிட்டு
அடுத்த நூற்றாண்டிலும்
எங்களின் ராஜ்ஜியமே
என்று மார்தட்டிக்கொள்ளும்
தொழில் நுட்ப வலைகளை
என்னவென்பது..??

நாட்களை, மனிதர்களை
என்றில்லாது
ஆரோக்கியத்தையும்
சுருட்டிக்கொள்ளும்
மின் வலைகள்
நமக்கு நாமே விரித்துக் கொண்டு
நாட்களை மட்டுமா தொலைக்கிறோம்..?
உறவுகளையும்தான்..!

நல்லதுக்கும் கெட்டதுக்குமான
நவீன வலைகள்
பக்குவமாய் சிக்குங்கள்
பாதகமேதுமில்லை…!

எல்லாவற்றிற்கும்
முத்தாய்ப்பாய் ஒரு வலையுண்டு
எல்லோருக்குமான வலை அது
சிக்கவில்லை என்போரில்லை
சிக்கலில்லை என்போரும் இல்லை
விதி வலையை மிஞ்சிய
வலையுண்டோ கூறுங்கள்..!

#சொ.சாந்தி

கடந்த ஞாயிற்றுக்கிழமை 08-07-2018 அன்று
ஆவடியில் எழில் கலை இலக்கிய மன்றத்தில்
முதல் பரிசினை பெற்றுத்தந்த கவிதை. திரு எழில் பொன்னுசாமி அய்யா, திரு நாதமணி, திரு தங்க ஆரோக்கிய தாசன் மற்றும் சங்கர் சுவாமிநாதன் ஆகியோருக்கு என் நன்றிகள்..!🙏🙏

எழுதியவர் : சொ.சாந்தி (14-Jul-20, 6:59 pm)
சேர்த்தது : C. SHANTHI
Tanglish : valai
பார்வை : 46

மேலே