என்னுள் ஒருவன்

நான் மதுசூதனன். ஆபிஸ் விட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டேன்;மாதத்தின் கடைசி நாள்; வங்கியில் வேலை பார்க்கிறேன்; கணக்கு முடித்து கிளம்ப நேரம் ஆகிவிட்டது;வீட்டுக்கு போனதும் என் கடைக்குட்டி ஸ்ரீ யை வாரி அணைத்துக் கொள்ளணும். பெரியவன் ரமேஷ் ஸ்கூல் எக்ஸாம்ஸ் எப்படி எழுதினான் என்று கேட்கணும். என் மகள் பார்கவியை பாட சொல்லி ரசிக்கணும். அலமேலு கிட்ட சூடா காபி கேட்டு பேசிக்கிட்டே குடிக்கணும்.
எனக்குள் ஒருவன் இருக்கிறான்; என்ன செய்ய?
-----------------------
ரமேஷ் வெளியிலிருந்து வேகமாக உள்ளே ஓடினான். அம்மா, அப்பா வந்திட்டிருக்கார் என குரல் கொடுத்தான். அலமேலு வேகமாக அடுப்படிக்கு சென்றாள்; பார்கவி சத்தம் போட்டு பாடம் படிக்க தொடங்கினாள்; ஸ்ரீ குட்டி கூட மலங்க, மலங்க விழித்தது கையில் பொம்மையுடன்;
-----------------------
மதுசூதனனுக்கு, எப்போதும் நன்றாக படிக்கும் ரமேஷ் யை பற்றி மிக பெருமை; ஊரெல்லாம் பெருமை பேசுவார்; அவனிடம் இன்னைக்காவது சொல்லணும், உங்க சார் சொன்னார், நீ தான் கிளாஸ் பர்ஸ்ட் ஆமேன்னு; பேஷ் ; பேஷ்; என தட்டிக் கொடுக்கணும்; காலையில் அலமு கட்டியிருந்த புடவை நன்றாக இருந்தது; ஆபீஸ் வரும் அவசரத்தில் சொல்லவில்லை; இப்போ போனதும் சொல்லணும்; என்னுள் ஒருவன் இருக்கிறான்; என்ன செய்ய?

-----------------------
வீட்டின் உள்ளே நுழையும் போதே தொண்டையை செருமிக்கொண்டே வந்தார் அப்பா; அப்பாவை கண்டதும் புத்தகத்தை தீவிரமாக படிக்க தொடங்கினேன்; கலுக்குன்னு என்னை ஜன்னலில் பார்த்து சிரித்தாள் பக்கத்து வீட்டு பிரபா. நான் முறைத்தேன்; திரும்பிக் கொண்டாள்; எங்களை பார்த்துக் கொண்டே ஹாலை கடந்து போனார்; குனிந்த தலை நிமிராமல் எழுதி கொண்டிருந்தாள் தங்கை பார்கவி; ஸ்ரீ மட்டும் அவரை நோக்கி ஓடினாள்; அவரும் குனிந்து தூக்கிக் கொண்டார்; அம்மா, அவசரமாக வந்து அவர் பையை வாங்கி மேஜை யில் வைத்தாள்; வா ஸ்ரீ என்று பாப்பாவை வாங்கிக் கொண்டு முகம் கழுவி வாங்க என்றார்; அப்பாவையே பார்த்தேன்; அப்பாவின் நடை, என்னை போலவே இருந்தது;
-----------------------

என் மகனை பார்த்ததும் சந்தோஷம்; என்னடா , இன்னுமா படிக்கிற ? நீ தான கிளாஸ் பர்ஸ்ட் ; அப்புறம் என்ன ? எடுத்து வைத்து விட்டு வா சாப்பிடலாம் என்று சொல்ல நினைத்தேன்; வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொண்டது; செருமிக்கொண்டே என்னடா , படிச்சிட்டியா? இல்ல உன் பிரின்ட ரெங்காவுடன் சேர்ந்து ஊரு சுத்திரியா ? கவனமா படி ; படிப்பும், ஒழுக்கமும் தான் நல்லபடி நம்மை வாழ வைக்கும்; பார்கவி, பாட்டு கிளாஸ் எப்படி போயிட்டு இருக்கு? பாட்டு மட்டுமே முக்கியமில்லை; நல்லா படிக்கவும் செய்யணும்; சரியா ? என் மகனையே பார்த்தேன்; என்னைப்போலவே கண்களை நேராக பார்த்து பேசினான்; சந்தோசமாக இருந்தது;
என்னைப்போல் ஒருவன்;
என்று ஸ்ரீ குட்டிக்கு ஊட்டி விட்டுக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தேன்;
-----------------------
என் அப்பா, படிப்பை பற்றி கேட்டதும், எழுந்து படிச்சுட்டேன் அப்பா; இன்னைக்கு கூட எக்ஸாம் நல்லா தான் எழுதினேன்; நான் தான் எப்போவும் கிளாஸ் பர்ஸ்ட்; என்று சொல்ல நினைத்து சொல்லாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்; எல்லோரையும் போல எனக்கும் என் அப்பான்னா ரொம்ப பிடிக்கும். ஒரு தான் என் ஹீரோ.எங்க அப்பா என்றாலே எனக்கு ரொம்ப பெருமை; அவர் கம்பீரமான குரல்; எல்லோரிடமும் அவரின் அக்கறையான பேச்சு; அவர் மீது எல்லோருக்கும் நல்ல மரியாதை; அவருக்கு ஊருக்குள் இருக்கும் மரியாதை; எனக்கும் அப்பாவை போல வரணும்னு ஆசை; அதிகம் பேசமாட்டார்; ஆனால் எந்த ஒரு செயலிலும் குறை வைக்க மாட்டார்; தவறான பழக்கங்கள் கிடையாது; நினைத்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தேன்; எனக்குள் அவரது செயல்கள் வெளிச்சம் தந்தது;
என்னுள் ஒருவன் ;
-----------------------
அலமு வீட்டு வேலைகளை முடித்து ஸ்ரீ குட்டி யை தூங்க செய்தாள்; நான் மாடியில் காற்று வாங்கியபடி காலாற நடந்து கொண்டிருந்தேன்;
மதுசூதனன், " அலமு, ஸ்ரீ தூங்கிட்டாளா ? ";
அலமு , "தூங்கிட்டா";
மதுசூதனன்," பசங்க, ரமேஷும், பார்கவியும் தூங்க போயாச்சா?";
அலமு, "தூங்க போயாச்சு";
மதுசூதனன் , " ரமேஷ் எப்படி படிக்கிறான் ?" ;
அலமு, " ரொம்ப நல்லா படிக்கிறான்; அவனிடமே நீங்க பேசலாமே; நீங்கன்னா அவனுக்கு கொள்ளை பிரியம்; அப்பாகிட்ட இதெல்லாம் சொல்லணும் அம்மான்னு சொல்லிக் கொண்டே இருப்பான்; நீங்க, அவனிடம் காட்டற கண்டிப்பை கொஞ்சம் குறைத்துக் கொள்ளக் கூடாதா? ";
மதுசூதனன், " எனக்கும் மனசுக்குள்ள நிறைய பாசம் இருக்கு; ஆனால், ஆண் பிள்ளைகளிடம் கண்டிப்பை காட்டித்தான் ஆக வேண்டும்.";
அலமு, " உங்களை பார்த்தால், எங்க அப்பா தர்மலிங்கம் தான் நினைவுக்கு வருகிறார்; அவரும் இப்படித்தான் பெண் குழந்தைகள் எங்களிடம் காட்டிய கண்டிப்பை விட எங்கள் அண்ணன்களிடம் மிகவும் அதிகமான கண்டிப்புடன் தான் நடந்து கொள்வார்; ஆனால், அவர்கள் மீது அதிக பாசம் இருந்தாலும் அதை வெளி கட்ட மாட்டார்;நான் கூட இதை பற்றி கேட்கும்போதெல்லாம் பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகளுக்கு தான் அதிகமான கண்டிப்பு தேவை என்பார்; ஏனெனில் அவர்களுக்கு பொறுப்புகள் அதிகம்; ஒரு குடும்பத்தினை திறம்பட நடத்தும் திறமையுடன் அவர்கள் வளரணும்னா இந்த கண்டிப்பும் அதனுடன் கூடிய அன்பும் அவர்கள் நல்லபடி வளர உதவும் ன்னு சொல்லுவார்;
மதுசூதனன்," ஆமாம், அலமு; நிஜம் தான்; என் தந்தையார் என்னிடம் நடந்து கொண்ட முறைகளில் தான் நானும் தந்தையாரின் வளர்ப்பு முறையை கற்றுக் கொண்டேன்; ஏன்? உனது அண்ணன்கள் கூட இன்று நல்ல நிலையில் உள்ளார்கள் தானே;
அலமு, " ஆமாம் ; பெண்குழந்தை வளர்ப்பு முறைக்கும் ஆண் குழந்தை வளர்ப்பு முறைக்கும் வித்தியாசம் உண்டா, என்ன ?";
மதுசூதனன், " நிச்சயமாக, ஒரு பெண் குழந்தை என்பவள் அன்பையும் , பண்பையும் மட்டும் தெரிந்து கொண்டால் போதும்; அவர்கள் நல்லபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளமுடியும்; ஆனால், ஆண் குழந்தைகள் அப்படி அல்ல; அவர்களுக்கு அன்பும், பண்பும் மட்டும் போதாது; நிச்சயம் அந்த குணங்களையும், அந்த குணமுடைய பெண்களையும் சேர்த்து காக்கும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது;
மதுசூதனன், “ஒரு குடும்பத்தில் ஆண் என்பவன் மரத்தின் வேர்களை போன்றவன்; வேர்கள் ஆழமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் அந்த மரத்தில் இருக்கும் இலைகள் மற்றும் கிளைகள், பூக்கள் போன்ற பிற உறவுகளை காக்க முடியும்; ஆண் என்பவன் ஒரு குடுபத்தின் தலைவன்; தலைவனாகும் தகுதியை ஒரு அப்பாவால் தான் உருவாக்க முடியும்; ஒரு அப்பா, அதை சரியாக செய்யவில்லையனில் ஒரு தலைமுறையே சிரமப்படும்; அடுத்த தலைமுறைகள் தடுமாறும்; அவர்களின் தடமும் மாறக்கூடும்;
எல்லா அப்பாக்களின் கனவும் குழந்தைகள் பற்றித்தான்; என்னை போல் ஒருவர்;
-----------------------
பார்கவி, " என்ன அண்ணா யோசிக்கிற? தூங்காமல்; "
ரமேஷ், " அப்பாவை பற்றி தான்";
அப்பாவுக்கு நாம தான் உலகம்; நம்ம அப்பா, மத்த பசங்க அப்பா மாதிரி இல்லை; ஆபீஸ் விட்டதும் நேராக, வீட்டுக்கு வந்திடறார்; அம்மாகிட்ட கூட அன்பா இருக்கார்; என்ன, நம்ம கிட்ட தான் ரொம்ப கண்டிப்பு காட்டறார்; "
பார்கவி, " ஆமாம், அண்ணா, அப்பா உன் கிட்ட ரொம்ப ஸ்ட்ரிக்ட் தான் ";
ரமேஷ், " அம்மா சொன்னாங்க அப்பாவுக்கு என்னை பற்றி நிறைய கனவுகள் இருக்காம்; எப்போதும் நம்மை பற்றி நிறைய பேசுவங்களாம்; "
பார்கவி," உனக்கு அப்பாவை பிடிக்குமா ? அம்மாவை பிடிக்குமா ?";
ரமேஷ்,"ரெண்டு பேரையும் தான்; அம்மா, லேடீஸ் அதால அவங்க எப்போவும் நம்ம கூடவே இருக்க முடியும்; ஆனால் அப்பா என்னை போல பாய்ஸ் அவருக்கு வெளிலயும் வேலை; எங்க ஸ்கூல் சார் கூட சொல்வாங்க; ரமேஷ், நீ உங்க அப்பா மாதிரி பெரிய வேலைக்கு போகணும்னு; அப்புறம், என் பிரின்ட் ராகவனோட அப்பா கூட சொல்வாராம் , அப்பா என்னை பற்றி அவர்கிட்ட ரொம்ப பெருமை பட்டாராம்; சரி, சரி, நீ தூங்கு; நாளைக்கு எக்ஸாம்; நான் நல்ல மார்க்ஸ் வாங்கினால் சார் அப்பாகிட்ட சொல்லுவார்; அப்பாவும் என்னை பாராட்டுவார்" .
இவர்களின் பேச்சு தண்ணீர் எடுக்க வந்த அலமுவின் காதில் விழுந்தது; உண்மை தான்; அம்மா என்பது தொப்புள் கொடி உறவு; ஆனால் அப்பா என்பது தெய்வீக உறவு; ஒவ்வொரு குழந்தைக்கும் அம்மாவால் உறவை மட்டும் தான் தர முடியும்; அப்பாவால் மட்டுமே நல்ல அறிவையும், தரமான
வாழ்வையும், உயர் சிந்தனைகளையும் தான் வாழ்ந்து காட்டுவதன் மூலம் குழந்தைகளுக்கு மானசீகமான ஆசானாக உணரவைக்க முடியும் என்பதை உணர்ந்தாள்;
-----------------------

எழுதியவர் : சம்யுக்தா ( நரேனி தாசன் ) (18-Jul-20, 7:46 pm)
சேர்த்தது : Samyuktha
Tanglish : ennul oruvan
பார்வை : 154

மேலே