காமம் உயிரைக் கடைப்படுத்தி எஞ்ஞான்றும் தீமை அடையத் திருப்பும் - காமம், தருமதீபிகை 641

நேரிசை வெண்பா

காமம் உயிரைக் கடைப்படுத்தி எஞ்ஞான்றும்
தீமை அடையத் திருப்புமால் - சேமம்
பெறவிரும்பி னாரப் பிழைபாடு நீங்கி
அறவரென நின்றார் அமர்ந்து. 641

- காமம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

புன்மையான காம இச்சை உயிரை இழிவுபடுத்தி ஈனமுறச் செய்யும்; மேன்மையான இன்பம் பெற விரும்பினார் அப்புன்மை நீங்கிப் புண்ணிய சீலராய் உயர்ந்து கண்ணியம் ஓங்கி விளங்குவார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உயிர் வாழ்வு பலவகையான சோதனைகளையுடையது. தீய சூழல்களிலிருந்து தன்னைத் தூயனாக்கிக் கொண்ட போதுதான் மனிதன் மேன்மையான மகிமைகள் தோய்ந்து மேலான கதிகளை அடைகின்றான். மாய மயக்குகளுக்கு இடையே மருவிக் கிடத்தலால் சீவர்கள் தூயராய் உயர்தல் அரிய செயலாயுள்ளது.

ஐந்து பொறிகளின் வழியே வாழ்வு நடந்து வருகிறது. மாய மோகங்கள் யாண்டும் நீண்டு நிற்றலால் யாவும் தீய வெறிகளாய்ச் சேர்ந்து திரிகின்றன. புலன்களிலேயே பாய்ந்து புலையாய்த் தோய்ந்து எவ்வழியும் சீவர்கள் இழிந்து வருதலால் புலை வாழ்வே எங்கும் நிலையாய் ஒங்கி வர நேர்ந்தது.

இந்த அவலவாழ்வு இழி பழியுடையது என்று உணர்ந்து உள்ளம் தெளிந்தவர்கள் உறுதி நலங்களை ஓர்ந்து சீல வேலி கோலி மேலே போகிறார்கள்,

மாயமயக்கங்களுள் காமம் மிகவும் தீயது. உணர்வைச் சிதைத்து உயிர்களுக்குத் துயர்கள் விளைப்பது ஆதலால் இது சீவ விரோதி, தீய பகை என அஞ்ச நேர்ந்தது.

பெண் ஆசையை இங்கே காமம் என்றது. எல்லா ஆசைகளையும் பொதுவாக இது குறித்து நிற்பினும் பெண்ணின் விழைவையே சிறப்பாக உணர்த்தி வருகிறது.

விரகம் மதனம் காமக் கவலை
காம நோயின் கட்டுரை ஆகும். - பிங்கலந்தை

காமத்தை நோய் என்று குறித்து அதன் பரியாய நாமங்களையும் இது விளக்கியுளது, சுட்டியுள்ள உரைகளால் உயிர் வேதனைகளின் நிலைகளை உணர்ந்து கொள்ளலாம்.

காமம் உயிரைக் கடைப்படுத்தும் என்றது காமமோகத்தால் சீவ கோடிகள தாழ்ந்து இழிந்துள்ள நிலைகளை ஓர்ந்து உணர்ந்து கொள்ள வந்தது. அது ஒரு மையல், மாயவெறி, தீய மயக்கம், அந்த மோக வேகத்தில் மனித சமுதாயம் ஏகமாய் உழன்று வருகிறது.

பசி எப்படி சீவர்களுக்கு இயற்கையாய் அமைந்திருக்கிறதோ அப்படியே காமமும் தொடர்ந்திருக்கிறது. ஆனால் அதற்கும் இதற்கும் சிறிது வேறுபாடு உண்டு. மனிதன் பிறந்த போதே தொடர்ந்து இறந்துபடும் வரையும் பசி ஒட்டி நிற்கும்; காமம் பதினாறு வயதிலிருந்து தொடர்ந்து, முதுமையில் கழிந்து போகிறது. கழியினும் விழியளவில் வெதும்பி நிற்கிறது.

இந்தக் காமத்தை நெறி முறையே ஒழுங்கு செய்து கொள்ளவே ஆண்மகன் ஒரு பெண்மகளை மணந்து கொள்ள நேர்ந்தான். மணமகன், மணமகள் என்னும் பேர் மணம் படிந்து வந்துள்ளது. மணத்தல் - கூடி வாழ்தல், இணைந்து பிணைந்து வாழும் கூட்டுறவுக்கு மணம் என்.று பெயர் அமைந்திருப்பது நினைந்து சிந்திக்கத்தக்கது. மலரில் மருவியுள்ள வாசனை மணம் என வந்தது. பூவும் மணமும் போல் புருடனும் பூவையும் மேவியுள்ள உண்மையை இது வெளிப்படுத்தியுள்ளது.

தேக போகமாய் அமைந்துள்ள காமம் நேமம் நியதிகளோடு கலந்து கொள்ள நேர்ந்தது. நெறியோடு நேர்ந்து வரும் அது நல்ல மக்களைப் பயந்து உலக விருத்திக்கு உரிமையாய் நின்றது. காம விழைவிலிருந்தே கருதரிய விளைவுகள் உளவாயின.

இவ்வகையில் செவ்வையாய் நின்று வரும் அளவு காமம் சேமமாய்ச் சிறந்து வரலாயது. உயர்ந்த ஞான முனிவர்களும் இவ்வாழ்க்கையை உவந்து கொண்டுள்ளனர்.

இந்த நெறியையும் நீதியையும் கடந்து வெறி கொண்டு எழுந்த போது அந்தக் காமம் தீமையாய் ஓங்கித் தீங்கு புரிகின்றது. வழி வழுவியது இழிபழிகளாய் நின்றது.

கொடிய காமத்திற்கு அடிமையாயின் அந்த மனிதனிடம் பொல்லாத தீமைகள் எல்லாம் வந்து குடிபுகுந்து கொள்வதால் நிலைகுலைந்து நெடும்புலைகள் நேர்ந்தன.

இன்னிசை வெண்பா

கொலையஞ்சார் பொய்ந்நாணார் மானமும் ஓம்பார்
களவொன்றோ ஏனையவுஞ் செய்வார் பழியோடு
பாவமிஃ தென்னார் பிறிதுமற் றென்செய்யார்
காமங் கதுவப்பட் டார். 79 நீதிநெறி விளக்கம்

காமம் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டபோது அந்த மனிதன் இன்னவாறு இழிதீமையாளனாய் அழிவான் என இது உணர்த்தியுள்ளது. ஒரு புலை பல துயர்களை விளைத்து நின்றது.

கொலை, பொய், களவு, மானக்கேடு, பழிபாவம் யாவும் காமிக்கு உறவாம் என்றதனால் அவனது புலையும் நிலையும் பொல்லாத தீமைகளும் நேரே புலனாய் நின்றன.

கடுங்காமம் கொண்டவன் கொடுந்தீமைகள் உடையனாய் நெடுங்கேடுகள் செய்தலால் அவனது வாழ்வு நீசமாய் நாசமடைய நேர்கிறது. இவ்வாறு நாசத்தை விளைத்தலால் காமம் நீசமுடையது என மேலோர் நெஞ்சம் அஞ்ச நேர்ந்தார்.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

தீமை யுள்ளன. யாவையும் தந்திடும்; சிறப்பும்
தோமில் செல்வமும் கெடுக்கும்;நல் லுணர்வினைத் தொலைக்கும்:
ஏம நன்னெறி தடுத்திருள் உய்த்திடும்; இதனால்
காமம் அன்றியே ஒருபகை உண்டுகொல் கருதில். - காந்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

அணங்குநோய் எவர்க்கும் செய்யும்
..அனங்கனால் அலைப்புண்(டு) ஆவி
உணங்கினார் உள்ளம் செல்லும்
..இடனறிந்(து) ஓடிச் செல்லா
குணம்குலன் ஒழுக்கம் குன்றல்
..கொலைபழி பாவம் பாரா
இணங்குமின் உயிர்க்கும் ஆங்கே
..இறுதிவந்(து) உறுவ தெண்ணா 1558

கள்ளுண்டல் காமம் என்ப;
..கருத்தறை போக்குச் செய்வ(து)
எள்ளுண்ட காமம் போல
..எண்ணினில் காணில் கேட்கில்
தள்ளுண்ட விடத்தின் நஞ்சம்
..தலைக்கொண்டால் என்ன ஆங்கே?
உள்ளுண்ட உணர்வு போக்கா(து)
..உண்டபோ தழிக்கும்.கள்ளூண்.. 1559

காமமே கொலைகட் கெல்லாம்
..காரணம்; கண்ணோ டாத
காமமே களவுக் கெல்லாம்
..காரணம்; கூற்றம் அஞ்சும்
காமமே கள்ளுண் டற்கும்
..காரணம்; ஆத லாலே
காமமே நரக பூமி
..காணியாக் கொடுப்ப(து) என்றான். 1560

- மாபாதகம் தீர்த்த படலம், கூடற் காண்டம், திருவிளையாடற் புராணம்

காமத்தின் தீமைகளைக் குறித்து வந்துள்ள இவை இங்கே கூர்ந்து நோக்கி ஓர்ந்து கொள்ளவுரியன. தீய காமத்தால் மனித சமுதாயம் இங்ஙனம் துயருழந்து அழிதலால் அதனை ஒழிந்து நின்றவர் தெளிந்த மேன்மையாளராய் உயர்ந்து விளங்குகின்றார்,

’சேமம் பெற விரும்பினார் பிழைநீங்கி நின்றார்’ என்றது காமப் பழிநீங்கினாரது காட்சியைக் கருதியுணர வந்தது.

அரிய பேரின்ப நிலையை அடைய விரும்பிய மகான்கள் சிறிய இன்பம் போல் தோன்றிச் சீரழித்து வரும் இந்தக் காமத் தீமையை நீங்கித் தங்களைச் சேமம் செய்து கொண்டு திவ்விய நீர்மையோடு சிறந்து திகழ்கின்றார்,

காமத்தை ஒழித்த அளவு மனிதன் சேமத்தை அடைகிறான்.

பொல்லாத காமப் புலைஒழியின் பேரின்பம்
எல்லாம் விளையும் எதிர்.

புல்லிய துன்பம் ஒருவி நல்ல இன்பம் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Sep-20, 5:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 156

மேலே