குமரேச சதகம் – நற்பொருளுடன் தீயபொருள் பிறத்தல் - பாடல் 90
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கோகனக மங்கையுடன் மூத்தவள் பிறந்தென்ன
குலவும் ஆட்டின்கண் அதர்தான்
கூடப் பிறந்தென்ன தண்ணீரி னுடனே
கொடும்பாசி உற்றுமென்ன
மாகருணும் அமுதினொடு நஞ்சம் பிறந்தென்ன
வல்இரும் பில்துருத்தான்
வந்தே பிறந்தென்ன நெடுமரந் தனில்மொக்குள்
வளமொடு பிறந்தென்னஉண்
பாகமிகு செந்நெலொடு பதர்தான் பிறந்தென்ன
பன்னுமொரு தாய்வயிற்றில்
பண்புறு விவேகியொடு கயவர்கள் பிறந்தென்ன
பலன்ஏதும் இல்லை அன்றோ
மாகனக மேருவைச் சிலையென வளைத்தசிவன்
மைந்தனென வந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 90
- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்
பொருளுரை:
பெரிய பொன் மயமான மேருமலையை வில்லாக வளைத்த சிவபிரானுக்குத் திருமகவாகத் தோன்றிய முருகனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!
தாமரையாளுடன் (இலக்குமியுடன்) மூதேவி பிறந்ததனால் (மூதேவிக்கு) யாது நலம், விளங்கும் ஆட்டினிடத்தில் (கழுத்தில் நீண்டு தொங்கும்) அலைதாடி உடன் பிறந்து யாது பயன்? தண்ணீரில் கொடிய பாசி தோன்றிப் பயன் யாது?
வானவர் உண்ணும் அமுதத்தோடு நஞ்சு தோன்றி யாது பயன்? உறுதியான இரும்புடன் துருவந்து தோன்றி யாதுபயன்? நீண்ட மரத்தினிலே (குமிழிபோன்ற) முடிச்சு செழிப்புடன் உண்டாகி யாது பயன்?,
உண்ணும் பதம்மிகுந்த செந்நெல்லுடன் பதர் தோன்றி யாது பயன்? சிறப்பாகச் சொல்லப்படும் ஒரு தாயின் வயிற்றிலே நற்குணமுடைய அறிவாளியுடன் கொடியவர்கள் தோன்றி யாது பயன்? எவ்வகை நலனும் இல்லையன்றோ?
அருஞ்சொற்கள்:
கனகம் - பொன். கோகனகம் - தாமரை. மாகர் - வானவர். அதர் - அலைதாடி (ஆட்டின்
கழுத்தில் தொங்குவது) மொக்குள் - மொக்குள் போன்ற முடிச்சு.
கருத்து:
நல்லதுடன் தீயது தோன்றினும் நற்பொருளாகாது.