இரு பாகற்காய் - நேரிசை வெண்பா
இஞ்சிகுடி என்னும் ஊரில் ஒரு தாசி இருந்தாள், அவள் பெயர் கலைச்சி. அவள், கவிஞரைப் பாராட்டாது ஏளனஞ் செய்ய அவர் பாடிய வசை இச்செய்யுள்.
நேரிசை வெண்பா
ஏய்ந்த தனங்க ளிரண்டுமிரு பாகற்காய்
வாய்ந்தவிடை செக்குலக்கை மாத்திரமே - தேய்ந்தகுழல்
முக்கலச்சிக் கும்பிடிக்கு மூதேவி யாள்கமலைக்
குக்கலிச்சிக் குங்கலைச்சிக் கு. 183
- கவி காளமேகம்
பொருளுரை:
பாறிப்போன தலைமயிரிலும் முக்கலம் அளவிற்குச் சிக்குப் பிடித்திருக்கும் மூதேவி போன்றவளான தன்மையுடையவள்; திருவாரூர்த் தெருநாய் மட்டுமே விரும்பி அணுகக் கூடியவள். அத்தகையவளான இந்தக் கலைச்சி என்பவளுக்கு, அமைந்த தனங்கள் இரண்டுமோ, இரண்டு பாகற்காய்களைப் போன்று ஒட்டித் தொங்குவனவாம். பொருந்திய இடையோ வென்றால் செக்கு உலக்கையின் அளவேயாகும்?"
இதனால், கலைச்சியின் அழகை எல்லாம் இழித்துப் பழித்தனர் என்க.

