குமரேச சதகம் – பயனற்ற உறுப்புக்கள் - பாடல் 89

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தேவா லயஞ்சுற்றி டாதகால் என்னகால்
தெரிசியாக் கண்என்னகண்
தினமுமே நின்கமல பாதத்தை நினையாத
சிந்தைதான் என்னசிந்தை

மேவா காம்சிவ புராண மவை கேளாமல்
விட்டசெவி என்ன செவிகள்
விமலனை வணங்காத சென்னிஎன் சென்னிபணி
விடைசெயாக் கையென்னகை

நாவார நினையேத்தி டாதவாய் என்னவாய்
நல்தீர்த்தம் மூழ்காவுடல்
நானிலத் தென்னவுடல் பாவியா கியசனனம்
நண்ணினாற் பலனேதுகாண்

மாவாகி வேலைதனில் வருசூரன் மார்புருவ
வடிவேலை விட்டமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 89

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

கடல் நடுவிலே மாமரமாகி வந்த சூரன் மார்பிற்படும்படி வடிவேலை விடுத்த முருகனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

(நின்) தெய்வக்கோயிலை வலம் வராத கால் காலன்று; காணாத கண் பயனற்ற கண்; நாடோறும் உன் தாமரைத்தாள்களை எண்ணாத உள்ளம் பயனற்றது;

பொருந்திய சைவ ஆகமங்களையும் சிவபுராணங்களையும் கேளாது விலகும் செவிகள் பயனற்றவை; குற்றமற்ற சிவ பரம்பொருளை வணங்காத தலை பயனுடையது அன்று; தொண்டு செய்யாத கைகள் பயனற்றவை;

நா நிறைய உன்னை வாழ்த்தாத வாய் பயனற்றது; உலகிலே தூய சிவதீர்த்தங்களில் மூழ்காத மெய்யாற் பயனில்லை; பாவத்தன்மை பொருந்திய இத்தகைய பிறவி எடுத்ததனாலே எப்பயனும் இல்லை.

விளக்கவுரை:

தேவ + ஆலயம்: தேவாலயம்; சிவபுராணம் என்றதனால் ஆகமமும் கோயிலும் பிறவும் சிவத்தொடர்பு ஆயின.
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நால்வகைப்படும். ஆகையால் நிலம் நானிலம் ஆயிற்று.

நான்கு + நிலம்: நானிலம்.

கருத்து:

சிவபிரானை வழிபடாத பிறவி பயனற்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Sep-20, 7:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 68

மேலே