ஐயுறா தாடுக நீர் - ஆசாரக்கோவை 10

பஃறொடை வெண்பா

தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலோ டிணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
ஐயுறா தாடுக நீர்! 10

ஆசாரக் கோவை

பொருளுரை:

தன்னால் வழிபடப்பெறுந் தெய்வத்தைத் துதித்தற்கண்ணும், தீய கனவைக் கண்டவிடத்தும், தூய்மை குன்றிய காலத்தும், உண்டதை வாந்தி செய்தவிடத்தும், மயிர் களைந்த விடத்தும், உண்ணும் பொழுதும், பொழுதேறத் தூங்கிய விடத்தும், புணர்ச்சியான காலத்தும், கீழ் மக்கள் உடம்பு தீண்டியவிடத்தும், மலசலங் கழித்தகாலத்தும் எனஇப்பத்திடத்தும் சந்தேகங் கொள்ளாமலே நீராடல் செய்க.

கருத்துரை!

கடவுள் வழிபாடு முதலிய பத்துச் சமயங்களிலும் இன்றியமையாது நீராடல் வேண்டும்!

வாலாமை – தூய்மையின்மை; வால் – தூய்மை; வைகு – தங்கு,

வைகு துயில் - படுக்கையில் நெடும் பொழுது தங்கிய துயில்;

கான்ற இடத்தும் - கழித்த போதும். மூத்திர புரீடங்கள்- சலமலங்கள்.

தீக்கனா - தீமை அல்லது துன்பத்தைத் தருங் கனவு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Aug-25, 4:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 4

மேலே