வலையிற் கயல்போற் பிறழுமே சாலேக வாயில்தொறுங் கண் - முத்தொள்ளாயிரம் 26

நேரிசை வெண்பா

சுடரிலைவேற் சோழன்தன் பாடலம் ஏறிப்
படர்தந்தான் பைந்தொடியார் காணத் - தொடர்புடை
காலேர் வலையிற் கயல்போற் பிறழுமே
சாலேக வாயி(ல்)தொறுங் கண்! 26

- முத்தொள்ளாயிரம்

பொருளுரை:

ஒளிபடைத்த வேலையேந்திய சோழன் தன்பாடலம் என்னும் குதிரையின் மேலேறிப் பசிய வளையலணிந்த மகளிரும் காணுமாறு நகர்வலம் வந்தான் ; தத்தம் வீடுகள்தோறும். வலை பொருத்தப் பெற்ற சாளரங்களின் பின்னிருந்து அவனைக் காணும் மகளிரின் கண்கள், நீர்வலையில் மாட்டிக்கொண்டு பிறழ்கின்ற மீன்களைப் போலத் தோன்றுகின்றன.

இதுவும் உவமை.

பாடலம் - சோழனது குதிரையின் பெயர்; (பாண்டியனது குதிரை ‘கனவட்டம்’ என்றும் சேரனது குதிரை ‘கோரம்’ என்றும் வழங்கப்பெற்றன)

தொடி - வளையல்; கயல் - மீன்; சாலேகம் - சாளரம், காலதர்; ‘பிறழுமே’ என்பது ‘பிறழும்மே’ என விரிந்துவந்தது விரித்தல் விகாரம்.

(அறுவகைச்செய்யுள் விகாரங்களுள் ஒன்று.) ஈற்றடி இரண்டாம் சீர் “வாயிறொறும்” எனப்புணர்த்துப் படிக்க, சீரும் தளையும் சிதையா.

எழுதியவர் : பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை (21-Aug-25, 3:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 3

மேலே