கார் நாற்பது 5 - இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல் - இன்னிசை வெண்பா

கார் நாற்பது
இன்னிசை வெண்பா

இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல்
பகழிபோ லுண்கண்ணாய் பொய்யன்மை யீண்டைப்
பவழஞ் சிதறி யவைபோலக் கோபந்
தவழுந் தகைய புறவு! 5

பொருளுரை:

அம்புபோலும் மையுண்ட கண்களையுடையாய்! இவ்விடத்து பவழம் சிந்தியவை போல காடுகள் இந்திர கோபங்கள் பரக்குந் தகைமையை உடையவாயின; ஆதலால், இகழ்வார் கூறும் பழிக்கு அஞ்சி பொருள் தேடச் சென்ற தலைவர் மீளவருதல் மெய்யாம்!

தமது தாளாண்மையாற் பொருள்தேடி அறஞ்செய்யாதார்க்கு உளதாவது பழியாகலின் ‘இகழுநர் சொல்லஞ்சி' எனப்பட்டது. வடிவானும் தொழிலானும் கண்ணுக்குப் பகழி உவமம். பொய்யன்மை - மெய்ம்மை.

ஈண்டைப் பவழஞ் சிதறியவை என்றமையால் தலைமகள் வருத்த மிகுதியால் தான் அணிந்திருந்த பவழ வடத்தை அறுத்துச் சிந்தினாளென்பது கருதப்படும்.

கோபம் - கார்கலத்தில் தோன்றுவதொரு செந்நிறப்பூச்சி; தம்பலப்பூச்சி யென்பர்.

எழுதியவர் : மதுரைக் கண்ணங் கூத்தனார் (18-Aug-25, 3:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே