வியன்கானல் வெண்தேர் துலங்கு நீர் - முத்தொள்ளாயிரம் 25
நேரிசை வெண்பா
(ளை, ல இடையின எதுகை)
குதலைப் பருவத்தே கோழிக்கோ மானை
வதுவை பெறுகென்றாள் அன்னை – அதுபோய்
விளைந்தவா இன்று வியன்கானல் வெண்தேர்த்
துலங்குநீர் மாமருட்டி அற்று. 25
- முத்தொள்ளாயிரம்
மழலைப் பருவத்தில் சோழ மன்னனைத் திரு மணம் புரிக என்றாள் தாய்.
ஆனால், அது நீங்கி இன்று அகன்ற கடற்கரைச் சோலைக் கானல் நீரென தெளிந்த நீர் போன்று பெரிதும் மயக்கும் தன்மையாக விளைந்தது.
சிறுவயதில் பெற்றோர் குழந்தைக்கு உணவூட்ட விளையாட்டாகக் கூறியதை வளர்ந்து பருவ மங்கையான பின்பும் தலைவி நம்பி வந்தாள். வளர்ந்த பின் அவள் நம்பிக்கை கானல் நீர் ஆனது.
இங்கு ‘வியன்கானல் வெண்தேர் துலங்கு நீர்’ என்பது கடற்கரையில் துலங்கித் தெரியும் கானல் நீரைக் குறிக்கும்.
அவ்வாறாக அக்காதல் நோய் என்னை மருட்டி வருத்துகின்றது என்று இப்பாடல் தலைவி
கூற்றுரைக்கின்றது.
இப்பாடல் கைக்கிளை.
என் அன்னை, நான் மழலை பேசும் சிறுமியாக இருந்த காலத்தில் சோழமன்னனை மணந்துகொள்ளும் பேற்றினை நான் பெறவேண்டும் என்று வாழ்த்தினாள். நான் மணப்பருவத்தையடைந்துள்ள இன்று, அக்கூற்றெல்லாம் மாறிப்போய் அவனைக் கண்ணால் காண்டலும் ஆகாது என்று வாயிற்கதவுகளை அடைத்து வைக்கிறாள். கடுங்கோடையில் தண்ணீர்போல் தோற்றமளித்து அருகில் சென்று பார்க்கும்போது மறைந்துவிடுவதாய் நீர்வேட்கை கொண்ட விலங்குகளை மயங்கச் செய்கின்ற பேய்த்தேர் போலாயிற்றே என் ஆசை!
இப்பாடல் உவமையணி.
குதலைப் பருவம் - மழலைமொழி பேசும் அறியாப் பருவம்;
கோழிக்கோமான் - உறையூரின் மன்னனாகிய சோழன்,
‘கோழி’ என்பது சோழர் தலைநகரமாகிய உறையூர்க்கு வழங்கிய மற்றொரு பெயர் ;
வதுவை - திருமணம்; வியன் - பெரிய; கானல் - கோடைக்காலம் , பாலைநிலம் ;
வெண்தேர் - பேய்த்தேர், கானல்நீர்; மா - விலங்கு, கால்நடைகள்;
மருட்டுதல் - மயங்கச் செய்தல்; அற்று - போன்றது; ஏ - அசைச்சொல்.