வெள்ளந்திக் கருமி

வெள்ளாடுங்கற பேர்ல வந்த
கொம்பில்லாத மொட்டக் கருமியவ..
வாங்கிவந்த நாள் முதலாக்
கொம்பு வருமான்னு காத்திருந்தேன்..

கொம்பில்லாம செல்லக் கருமி
சண்ட எப்பிடி போடுவான்னு
கவலையோட கொம்புக்காக
கந்தங்கிட்ட வேண்டி இருந்தேன்!

புண்ணாக்கு தண்ணி குடிக்கிறப்ப
போட்டி போட்டு வந்த சண்டையில
புண்ணாகும்படி காதக் கடிச்சிட்டா...
கொம்பில்லாக் கவலையேல்லாம்
ஒன்னுமில்லாம போயிடுச்சு எனக்கு ...

கருமின்னு ஒத்த சத்தம் போட்டா
காத்தாப் பறந்து வந்திடுவா...
தனியா கடைக்குப் போனா
துணைக்கு கூட வந்திடுவா....

கலாக்காவும் கம்மரக்கட்டும்
அசைபோடுவதப் பார்க்கவே நான்
கருமிக்குன்னே வாங்கி வைப்பேன்...
பள்ளிக்கூடம் முடிஞ்சு வீடு வந்தா
கையில தீனி இருக்கா தேடிப் பார்ப்பா..
மேய்ச்சலுக்கு நான் போனா
மேயாம என்னைக் கொஞ்சிடுவா..

நாலு குட்டி போட்டிடுவா
நாலையும் பக்குவமா பாத்திடுவா..
மடியில கிளிச்ச ஒத்த முள்ளுக்கு
மாசம் பல கஷ்டப்பட்டா...
சீல் புண்ணு மஞ்ச வச்சும் ஆரல,
மருந்து வச்சும் ஆரல...

வலி தாங்க கத்துன கருமிய
வாரி அனைச்சு முத்தமிட்டேன்..
கண்கொண்டு பாக்க முடியலன்னு
காசுக்கு வித்துப்புட்டாங்க..

பள்ளி போயி வருமுன்னே
கறிக்கடைக்கு விலை போனா...
கருமி கருமின்னு காடெல்லாம்
சுத்தி வந்தேன்.. கத்தி வந்தேன்..

கறிக்கடைக்காரன் வந்த சேதிகேட்டு
கதறின நாளை மறக்கவும் முடியலயே...
சோறுதான் இறங்கலியே... கருமி
சோகமும் குறையலியே...கருமி

பட்டி நிறைய வெள்ளாடுகயென்ன
எட்டியெட்டிப் பார்த்தாலும்...
என் செல்லக் கருமி போல வருமா?
நீ மேய்ஞ்ச இடமெல்லாம்
உன் வாசம் வீசிடுதே கருமி... ❤️

எழுதியவர் : சுமதி பழனிச்சாமி (16-Nov-20, 9:23 pm)
சேர்த்தது : சுமதி பழனிச்சாமி
பார்வை : 54

மேலே