உயிரை காக்கும் முயற்சிகள்

--------------------------
நாட்கள் தள்ளி செல்ல தன் நடையின்
அதிர்வை குறைத்து அடிவயிறு தடவி
தன் கருவை காக்கும் பெண்கள்..

பிரசவ உத்தேச நாள் பக்கம் நெருங்க
பதற்றம் அகமேறி தைரியம் புறமிருக்க
பிரசவ நாள் எண்ணி தவிக்கும் ஆண்கள்..

தடுப்பூசி அட்டையதை பத்திரம் போல் காத்து
தேதி மறந்திடுமோ என தேதி நினைவிலிட்டு
சிசு மருத்துவன் நாடிய அந்த தருணம்..

சிசுவின் தொடர் அழுகை நடுநிசியில் வந்திட..
நால் விழிகள் கலங்கி அவ்விருள் நேரம்
ஒரு மருத்துவன் தேடி அலைந்த அந்த தருணம்..

பருவம் வந்த பிள்ளை பிடித்த வாகனம் கேட்க..
பார்த்த சோதிடர் ஏனோ சிவப்பு கொடி காட்ட..
பிள்ளை விருப்பம் கொன்று பரிதவித்த அந்த தருணம்..

தன் அகவையது நால் பத்தை நெருங்க
முன் பரிசோதனை செய்து தன்னுயிர்
காக்க தக்க மருந்து ஏற்கும் தருணம்..

தொற்று நோய் வந்து முழுப்புவி புலம்ப..
முகக்கவசம் அணிந்து தன் சுத்தம் பேணி..
அரசு அறிவுறுத்தலில் சமூக இடைவெளி விட்டு..
தன்னுயிர் காக்க நினைத்த அந்த தருணம்...

உயிரை காக்கும் முயற்சிகள் பல.
சில வெற்றிகள்..சில தோல்விகள்..

பிறப்பு தேதியுடன் இறப்பு தேதியும் இருக்கும்
இருக்கும் இடைவெளியில் இரக்க குணம் கொண்டு
இனிதே வாழ முயற்சித்திடுவோம்..
------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (16-Nov-20, 11:19 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 344

மேலே