தாய்மை
என்னை பெற்றதும் பாரம் இறங்கியது என்று விட்டுவிடாமல்,
என்னை தன் மடியிலும் இடுப்பிலும் தாங்கி சீராட்டி,
தன் மார்போடு தான் தாலாட்டி பாலூட்டி வளர்த்த அன்னையே
உன் அன்பில் நான் மனிதனானேன்.
தாய்மைக்கு இலக்கணம் ஏட்டில் இல்லை, எந்த பாட்டிலும் இல்லை,
தாய்மைக்கு இலக்கணம் அனுபவத்தில் உள்ளிருந்து,
பொங்கும் அன்பில் இயல்பாய் தானே வந்தது வழிவழியாய்.
யார் சொல்லி கொடுக்க முடியும்?
யாரிடம் கற்றுக்கொள்ள முடியும்?
அனுபவித்து அறிந்தால் மட்டுமே தெரியும்.
கண்களில் தூசி விழுந்தால் துடைக்க தானே போகும் கைகளை போல
தன் பிள்ளைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று துடிக்கும்
அன்னையின் தாய்மை!
முன்பின் தெரியாத பிள்ளைக்காகவும் துடிக்கும் அந்த உள்ளத்தில்
குடிகொண்டதும் தாய்மையே!
கள்ளம் கபடமில்லாத உள்ளத்தில் நிறைந்து இருப்பது தாய்மையே!
நன்றி சொல்வதோடு தீர்ந்து விடாது தாய்மை கொண்ட நெஞ்சங்களுக்கு நாம் பட்ட கடன்.
யோசித்து பார் மானிடா!
சிறு வேலை செய்வதற்கே பெருந்தொகையை பணமாக கேட்கும் நம்மிடம்,
நம் அன்னை நம்மை வளர்த்து நமக்காக செய்த அனைத்திற்கும்
நம்மை போல் பெருந்தொகையை பணமாக கேட்டால்,
என்ன செய்வீர்கள்?
அந்த தொகையை உங்களால் செலுத்த இயலுமா?