பப்பி லவ்

காலிங் பெல் பொறுமையற்று அலறிய சத்தத்திலேயே வந்தது யார் என புரிந்து விட்டது. அடுத்த அலறலை தவிர்க்க வேகமாய் சென்று கதவை திறந்தாள்.
வசந்தா, இன்னுமா யாமினி வரவில்லை , கேள்வியுடனே நுழைந்தான் ரமேஷ்.
இல்லை என்றபடியே தன் வேலையைத் தொடர கிச்சனுக்குள் சென்றாள்.
என்ன ஆயிற்று? நீ ஃபோன் செய்யலையா, ஆறு மணிக்குள் வீட்டில் இருக்கனும்னு சொன்னேனே. கேள்விகளுடன் தொடர்ந்து வந்தான்.
அப்பாடா, இன்றைய தினத்துக்கு ஒரு விவாத தலைப்பு கிடைத்து விட்டது. இனி தூங்கும் வரை இந்த இராமாயணம் தான் மனதுக்குள் அலுத்துக் கொண்டாள் வசந்தா.
என்ன கேள்விக்கு பதிலே காணும். ஃபோன் செய்யலையா .
இல்லைங்க. இப்போ தான் வீட்டுக்கு வந்தேன். நீங்க ஏன் அவளை கேக்கல? தயங்கி தயங்கி கேட்டாள்.
நான் என்ன உன்னை மாதிரி சுகமா இரயிலையா வரேன். ரோட்டுல டிராஃபிக்ல வண்டி ஓட்டிட்டு வந்து பாத்தா தெரியும்.
ஆமாம். இந்த புறநகர் இரயில் நெரிசல்ல ஒருநாள் வந்தா தெரியும், வசந்தாவின் மைண்ட் வாய்ஸ்.
சரி, இப்பவாவது உன் பெண்ணை கால் பண்ணி கேளு. இன்னும் அரைமணி நேரத்தில் வீட்ல இருக்கனும்னு சொல்லு.
ஆமாம். இப்போ மட்டும் என் பொண்ணு, சொல்லி கொண்டே யாமினிக்கு ஃபோன் செய்தாள்.
ஃபோன் முழு ரிங்கும் போய் நின்றது. சீ , இவள் வேறு, ஃபோனை எடுக்க மாட்டேன் என்கிறாளே, இப்போது ரமேஷுக்கு என்ன பதில் சொல்வது என யோசிக்கையில் ஃபோன் ரிங்கியது.
அப்பாடா, யாமினி தான்.
யாமினி, அப்பாவுக்கு உடனே ஃபோன் பண்ணு.
எதுக்கும்மா இப்போ, நான் வந்துண்டிருக்கேன். அப்பா கிட்ட சொல்லிடும்மா. அவளுக்கும் தெரியும். ரமேஷை கூப்பிட்டால் என்ன ரியாக்ஷன் இருக்கும் என்பது.
இல்லை இல்லை, நீ அப்பா கிட்ட பேசு என்று சொல்லி காலை கட் செய்தாள் வசந்தா.
இது பிரச்சினையை வளரக்குமா இல்லை தவிர்க்குமா என யோசித்துக் கொண்டே ரமேஷ் இருக்கும் அறைக்கு சென்றாள்.
அங்கு ரமேஷ் யாமினி உரையாடல் ஓடிக் கொண்டு இருந்தது.
பரவாயில்லை. சொல்லு யாமினி, நானே வண்டி எடுத்துண்டு வரேன். நான் வர ஒரு கால்மணிநேரம் தான் ஆகும். உன் ஃபிரண்டொட அங்கேயே இரு.
கேட்ட வசந்தாவிற்கு பற்றி கொண்டு வந்தது. என்னிடம் பேசியது என்ன, இங்கு நடப்பது என்ன.
ஆனால் ஒரு விஷயம், தன்னுடைய யுக்தி தவறாக போகவில்லை. நாமே யாமினியிடம் ரமேஷின் கோபத்தை சொல்லி இருந்தாலும் , அவள் நம்பி இருக்க மாட்டாள்.
ஏதோ இப்போது பிரச்சினை பெரிதாகாமல் முடிந்து விட்டது. பெண்ணும், ரமேஷே கூட்டி வருவதாக சொல்ல விட்டதால் பாதுகாப்பாக வந்து விடுவாள். நாமும் ஒரு அரைமணி நேரம் தனிமையில் இனிமை காணலாம்.
ஹூம், வாழ்க்கையில் எதற்கெல்லாம் சந்தோஷ பட்டு கொள்ள வேண்டியுள்ளது. தனக்குள்ளேயே புலம்பி கொண்டு, ரமேஷிடம் நேரமாகி விட்டதால் இரவுக்கு உப்புமா போதுமா எனக் கேட்டாள்.
இந்த உப்புமா கிண்டற விஷயத்துக்கு எல்லாம் இவன் அனுமதி கேட்டு நிற்க வேண்டும். என்ன தவம் செய்து இந்த பிறவி எடுத்தேனோ.
ம்ம். செய்து விடு. நானும் யாமினியும் வரும் போது சூடாக இருக்க வேண்டும்.
அவன் கிளம்பி சென்றவுடன், உப்புமா கிளற தொடங்கியவள் கையுடன், அவள் மனதும் இருபத்தைந்து வருட திருமண வாழ்வை கிளறத் தொடங்கியது.
திருமணமான புதிதில் எல்லாம் நன்றாக போவதாகத் தான் தோன்றியது. எல்லோரையும் நல்லவராகவே நினைத்து பழகும் அவளுக்கு ரமேஷின் தந்திரமான பேச்சும் நடவடிக்கைகளும் புரிபடவில்லை.
தன் வாயாலேயே வடை சுட்டு வாழ்பவன் அவன் என்பது புரியவே, கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
தான் நல்லவளாய் மட்டும் இருப்பதில் லாபமில்லை, வல்லவருக்கு தான் இங்கு வாழ்வு என புரிய தொடங்கியபோது முற்றிலுமாக எல்லா வகையிலும் ஏமாற்றப் பட்டிருந்தாள்.
அவளுக்கு வீட்டில் எந்த மரியாதையும் இல்லை. அவளே உழைத்து சம்பாதித்த பணத்திலும் உரிமை இல்லாத நிலைக்கு தள்ள பட்டிருந்தாள்.
இவ்வளவிற்கும், பெரும்பான்மை அவளால் வந்த பொருளே. தொடக்கத்தில் இருந்தே அவளுடைய அறியாமையையும் பயத்தையும் பயன்படுத்தி, அவளை டம்மியாக்கி விட்டான் ரமேஷ்.
இப்போது சிறிய சிறிய விஷயங்களை கூட அவன் அனுமதி, இல்லை, அவன் சொன்னால் தான் செய்ய வேண்டும், சொன்னதனால் செய்வதாக பாவிக்க வேண்டும் என்ற நிலையில் வந்து நிற்கிறது.
சில நேரங்களில், தான் ஏன் இப்படி வாழ வேண்டும். தனியாக சென்று விட்டால் என்ன என்று தோன்றும். தான் அவசரமாக பெற்று கொண்ட யாமினியின் நல்வாழ்வை எண்ணியே அனைத்தையும் பொறுத்து கொண்டு இருக்கிறாள்.
யாமினியும் இப்போது வளர்ந்த பெண்ணாகி விட்டாள். படித்து முடித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள். திருமணம் செய்ய வேண்டும்.
ஆனால், சுற்றியுள்ள நண்பர்கள் உறவினர்களை பொறுத்தவரை அவர்கள் ஆதர்ச தம்பதிகள். அதுவும் ரமேஷ் மாதிரி பொண்டாட்டியை யாரும் பார்த்து கொள்ள மாட்டார்கள் என்ற அளவில்.
அதுவும், வசந்தாவின், யாரை பற்றியும் மற்றவர்களிடம் குறை சொல்ல தெரியாத கெட்ட புத்தியினால் தான்.
பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணம் தான் என்றாலும், கல்யாணமான புதிதில் ரமேஷின் அரவணைப்பில் மகிழ்ந்து, அவன் மேல் ஏற்பட்ட காதல் இன்று வரை வசந்தாவிற்கு குறையவில்லை.
எண்ணங்களின் ஓட்டத்துடன் உப்புமா காய்கறிகளுடன் கிச்சடியாக உருப்பெற்றிருந்தது. என்ன தான் மனவருத்தம் இருந்தாலும் வயிற்றுக்கு சரியான விருந்து அளிக்க தவறியதில்லை வசந்தா.
ஆனால் ரமேஷ் தான் இந்த அன்பை புரிந்து கொள்வதில்லை. அவனுக்கு எல்லாமே கொடுக்கல் வாங்கல் பிஸினஸ் தான். எல்லோருடைய உறவும் அப்படிதான்.
அதுவும் வசந்தாவிடம், வாங்கல் மட்டும் தான். அவள் தன் கைப்பாவை என்ற எண்ணம். அவளுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்ற எண்ணமே கிடையாது. அதற்கு காரணம் அவள் தன்னை விட்டு எங்கும் செல்ல மாட்டாள். தன்னை யாரிடமும் விட்டு கொடுக்க மாட்டாள் என்ற நம்பிக்கை தான்.
அதனை ஒருநாள் உடைத்து விட வேண்டும் என்று எண்ணினாலும், சில சமயம் ரமேஷை பார்க்கும் போது மிகவும் பாவமாக தோன்றும். அவன் ஒரு பாதுகாப்பு அற்ற மனநிலையில் வளர்க்க பட்டுள்ளான் எனத் தோன்றும்.
காலிங்பெல் அலறியது. திடுக்கிட்டு தன் மன ஓட்டத்தை அடக்கி, எழுந்து சென்று கதவை திறந்தாள்.
யாமினி கையில் ஒரு பப்பியுடன் உள்ளே நுழைந்தாள். என்ன இது, இதை ஏன் கொண்டு வந்தாய், அப்பாவே ஓகே சொல்லிட்டாங்க , உனக்கென்ன வந்தது, வசந்தாவின் கேள்விக்கு யாமினியின் பதில்.
ஹூம். உன் மரியாதையை காப்பாத்திக்கனும்னா வாயை மூடிக்கொண்டு இரு என தனக்கே சொல்லிக் கொண்டு, சரி சாப்பிட வாங்க என இருவரையும் அழைத்தாள்.
ஒரு வாரம் ஆனது. முதல் மூன்று நான்கு நாட்கள், அந்த பப்பியை உணவு கொடுத்து, குளிப்பாட்டி, கொஞ்சி என மகிழ்ந்த யாமினிக்கு சிறிது சிறிதாக அவ்வேலைகள் அலுக்க தொடங்கின.
அது கத்துவதே பிடிக்கவில்லை. என்னம்மா நொய் நொய்னு கத்துது என இவள் கத்தினாள்.
உன் தோழியிடமே திரும்ப கொடுத்து விடு எனச் சொன்னதையும் கேட்கவில்லை. அது மரியாதை குறைவு போலும்.
வசந்தாவிற்கு தான் வேலைகள் அதிகம் ஆயிற்று. ரமேஷ் இதில் எதிலும் தனக்கு சம்பந்தம் இல்லை என நடந்து கொண்டான்.
வசந்தாவிற்கு சிறிது சிறிதாக அந்த பப்பியின் மீது ஈடுபாடு அதிகமாகிவிட்டது. அதற்கு ரவி என பெயரிட்டு அழைத்தாள். ரவியும் வசந்தாவிடம் பாசமாக இருந்தது.
வசந்தா சொன்ன அனைத்தையும் உடனே செய்தது. அவள் கோபபட்டால் பயந்தது. அவளுக்கு கீழ்படிந்து நடந்தது. கொஞ்சினால் அப்படியே அவளுடன் ஒட்டிக் கொள்ளும்.
வார இறுதி நாட்களில் ரமேஷும், யாமினியும் வெளியே சென்று, தான் தனியாக இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் அப்பாடா என்று இருக்கும் வசந்தாவிற்கு.
உடனே ஓடிப்போய் ரவியுடன் கொஞ்சி திட்டி அதட்டி என தன் உணர்ச்சிகளை கொட்டி விடுவாள். அதுவும் பாவம், இவளை புரிந்தது போல இவளுக்கு இணையாக நடந்து ஆறுதல் தரும். அவளை உரசி உரசி தன் அன்பை வெளிபடுத்தும்.
ரவிக்கு ஒருநாள் உடம்பு சரியில்லை என்றாலும், அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லி விட்டு அதை அக்கறையுடன் பார்த்து கொள்வாள் வசந்தா. நடுநடுவே யாமினிக்கும் ரமேஷுக்கும் வேறு நன்றி என இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குறுஞ்செய்தி அனுப்பி கொண்டே இருப்பாள்.
அவர்கள் சிறிது நாட்கள் ஏன் இப்படி அனுப்புகிறாய் எனக் கேட்டு, பதில் கிடைக்காமல் திட்டி அலுத்து பின்னர் இது ஒரு லூஸூ என முடிவுக்கு வந்தனர்.
ஆறு மாதங்கள் இப்படி போன நிலையில், யாமினிக்கு திருமணம் நிச்சயம் ஆனது. மாப்பிள்ளை யோகேஷ், இங்கே ரவியை பார்த்தவுடன் தன் வீட்டிலும் இரு நாய்க்குட்டிகளுடன், கிளி, பூனை என மற்ற செல்ல பிராணிகளும் இருப்பதாக சொன்னார். அத்துடன் இவை எல்லாவற்றையும் பராமரிக்க ஒரு வேலையாள் இருப்பதாகவும் கூறினார்.
திருமணமும் முடிந்தது. யாமினி மாப்பிள்ளை வீட்டாருடன் கிளம்பும்போது, யோகேஷ் , யாமினி, நாம ரவியையும் நம்மோட கூட்டிண்டு போலாம். உனக்கும் ரவி இல்லாமல் போரடிக்குமே என்றார்.
திடுக்கிட்ட வசந்தா, பரவாயில்லை அது இங்கேயே இருக்கட்டும் என்றாள். நிலைமை புரியாத யோகேஷ், இல்லை ஆன்ட்டி , யாமினி பாவம். ஏற்கெனவே உங்க ரெண்டு பேரையும் பிரிஞ்சதினால் வருத்தத்தில் இருப்பா. அவளோட பெட் டாக்காவது அவளுக்கு ஆறுதலா இருக்கட்டும் என்றான்.
பிரஸ்டீஜை விட்டு கொடுக்க முடியாமல், யாமினியும் ஆமாம்மா நான் ரவியை கூட்டிண்டு போறேன் என்றாள். அங்கே அதை பார்த்து கொள்ள ஆள் இருக்கிறது என்ற தைரியம் வேறு.
ரமேஷ் வழக்கம் போல வாயை திறக்கவில்லை.
கிளம்பும்போது, யாமினியை கண்டு கொள்ளாமல், ரவியை கட்டிக் கொண்டு அழுத வசந்தாவை ஒருமாதிரி பார்த்தனர் மாப்பிள்ளை வீட்டார்.
அவர்களிடம் நீங்கள் கிளம்புங்கள், அவள் ஒரு லூஸூ எனக்கூறி கொண்டிருந்தான் ரமேஷ்.

எழுதியவர் : கௌரி கோபாலகிருஷ்ணன் (21-Jan-21, 1:21 pm)
சேர்த்தது : gowri1968
பார்வை : 272

மேலே