தோழமை

தோழமை

இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது. தீபாவளி பண்டிகை வர,. முகுந்தன் குழம்பினான். கம்பெனி இதுவரை ஒன்றும் பேசாமல் இருக்கிறது.. கம்பெனி ஊழியர்கள் தங்களுக்குள் இரகசியமாய் பேசிக் கொண்டிருக்கின்றனர். போன வருசம் இந்நேரம் கம்பெனியில் வேலை செய்யும் எல்லோருக்கும் பணப் பட்டுவாடா முடிந்து விட்டது.. விடுமுறை எத்தனை நாள் எனவும் அறிவிக்கப்பட்டுவிட்டது.. ஆனால் இந்த வருடம் கம்பெனி இது வரை எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருக்கிறது. போனஸ் பற்றியும் மூச்சு விடாமல் இருக்கிறது. ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பார்களா மாட்டார்களா என்ற எண்ணம் கூட வந்து விட்டது. உடனே போராட்டங்கள், கூட்டங்கள் போனறவை நடத்தக்கூடிய அளவில் பெரிய கம்பெனியும் அல்ல. மொத்தமே முகுந்தனோடு சேர்த்து பத்து பேர்கள்தான். இதில் நான்கு பெண்கள், ஆறு ஆண்கள். இதில் இருவர் அலுவலக ஊழியர்கள். முகுந்தான் தான் இவர்களில் சீனியர். கம்பெனி ஆரம்பிக்கும் போது முதலாளியிடம் சிறுவனாய் வந்து சேர்ந்தவன். பத்து வருடங்கள் ஓடி இன்று கம்பெனி சீனியர், மற்றும் தொழில் வல்லுநராகவும் ஆகி விட்டான்.
முதலாளிக்கு மிகவும் நம்பிக்கையானவன். இருந்தாலும் அளவோடு இருப்பவன். தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பவன். இவர்கள் பணி புரிந்த கம்பெனி பெரிய பெரிய “மில்களுக்கு” உதிரி பாகங்கள் செய்து கொடுத்துக் கொண்டிருந்த்து. கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவுக்கு இப்பொழுது போட்டிகள் முளைத்து விட்டன. முன்னர் இருந்த அளவு இப்பொழுது பெரிய பெரிய “மில்களிடமிருந்து” ஆர்டர்கள் வருவது குறைந்து விட்டது. என்பது முகுந்தனுக்கு தெரிந்தே இருந்த்து. காரணம் சுற்றிலும் புதிய புதிய கம்பெனிகள் தோன்றி விட்டன. இவைகளை விட குறைந்த விலைக்கு “உதிரி பாகங்கள்” தயார் செய்து கொடுக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் “மில்கள்” அவர்களிடம் ஆர்டர் கொடுக்க ஆரம்பித்து விட்டன.
முகுந்தனை விட நான்கைந்து வயதே மூத்தவராய் இருப்பார் முதலாளி நாராயணன். நன்கு படித்து விட்டு இந்த தொழிலை ஆரம்பித்தவர், ஆரமபத்தில் கொஞ்சம் தடுமாறி பின் சுதாரித்து தன்னுடைய திறமையால் கம்பெனியை இந்த அளவுக்கு கொண்டு வந்தவர். முகுந்தன் அவரிடமிருந்து தள்ளி நின்று பணி செய்தாலும் அவரிடம் பூரணமாய் நம்பிக்கை உள்ளவன். இத்தனை வருடங்களில் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த தொகையும் நிலுவை வைக்காமல் கொடுத்தவர்
ஆனால் கம்பெனி நிலை சரியில்லாமல் இருக்கும்போது நமக்கு கிடைக்க வேண்டியதை பற்றியே நினைப்பதும் அவனுக்கு சங்கடமாக இருந்தது மறு நாள் காலை ஊழியர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். மாலையில் முதலாலியிடம் முகுந்தனை விட்டு பேசுவதற்கு ஏற்பாடு செய்து அவரவர்கள் தங்கள் பணிகளை செய்ய தொடங்கினர். மதியத்துக்கு மேல் அலுவலகத்தில் பணி புரியும் பணியாளர், “ ஊழியர்கள் ” அனைவரும் மூன்று மணிக்கு கம்பெனி முதலாளியை வந்து பார்க்க சொல்லியிருக்கிரார். என்ற தகவல் தந்து விட்டு சென்றார். உடனே ஊழியர்கள் ஒன்று கூடி என்னாவயிருக்கும் என்று ஆலோசிக்க ஆரம்பித்து விட்டனர்.
வந்துள்ள அனைத்து ஊழியர்களையும் எழுந்து வரவேற்ற முதலாளி முதலில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து சொல்லிவிட்டு இந்த முறை உங்கள் போனஸ் தர தாமதமானதற்கு மன்னியுங்கள், என்றவாறு ஒவ்வொருவருக்கும் தனித் தனி கவரை கையில் கொடுத்தார். அனைவரும் வாங்கியபின் அனவரையும் உற்று நோக்கி விட்டு இந்த செய்தி சொல்வதற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன் இனிமேல் கம்பெனியை நடத்துவதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. அதனால் இந்த தீபாவளி முடிந்து மூன்று மாதங்கள் மட்டுமே நடக்கும். அதற்குள் உங்களுக்கு தரவேண்டிய தொகைகள் அனைத்தும் தரப்படும். இந்த மூன்று மாத்த்திற்குள் நீங்கள் நல்ல இடங்களுக்கு போய் சேர்ந்து கொள்ளுங்கள், என்னுடைய வாழ்த்துக்கள் என்று சொல்லி முடித்து உட்கார்ந்தார்.
அப்படியே உட்கார்ந்திருந்த நாராயணன் பத்து நிமிடங்கள் ஆகியும் ஊழியர்கள் யாரும் அங்கிருந்து நகராமல் நின்று கொண்டிருப்பதை கேள்விக்குறியுடன் பார்க்க முகுந்தன் சற்று முன்னால் வந்து உங்களோடு பேசலாம் சார் ? பணிவுடன் கேட்டான். தாராளமாய் பேசுங்கள் முகுந்தன். சார் இன்னைக்கு காலையில நாங்கள் ஒண்ணு கூடி பேசினோம். இப்ப நம்ம கம்பெனி நிலைமை சரியில்ல, அதனால் போனஸ் வாங்க வேண்டாம், அப்படீன்னு பேசி வைச்சோம். காரணம் நல்லா இருக்கும் போது தாராளமா கொடுத்தீங்க, இப்ப நிலைமை சரியில்லை அப்படீங்கறப்ப நாங்களும் கொஞ்சம் விட்டுக் கொடுக்கணுமில்லையா, என்றவாறு அவர் கொடுத்த அனைத்து கவர்களையும் திரும்ப அவர் மேசையின் மேல் வைத்தான்.
திகைத்து போனார் நாராயணன். கம்பெனி நிலைமை சரியில்லை எனும் போது தோள் கொடுக்க தயாராய் நிற்கும் தொழிலாளர்கள் கூட்ட,ம் இருக்கும்போது நான் மட்டும் பயந்து கொண்டு கம்பெனியை இழுத்து மூட நினைப்பது எவ்வளவு கோழைத்தனம். சட்டென நிமிர்ந்தவர் உங்கள் அனைவருக்கும் நன்றி, முதலில் இந்த கவரை எடுத்துக்கொள்ளுங்கள், நான் கம்பெனியை கண்டிப்பாய் மூடப்போவதில்லை, நீங்கள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பீர்கள் என்றால் நம்மால் மீண்டும் நல்ல நிலைமைக்கு இந்த கம்பெனியை கொண்டு வரமுடியும்.
“பத்து பேரும் கண்டிப்பாய் ஒத்துழைப்போம் சார்” மொத்தமாய் சத்தமிட்டனர்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (19-Jan-21, 3:12 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : tholamai
பார்வை : 264

மேலே