விவசாயி வாழ வேண்டும்

காளை ரெண்ட ஏரில் பூட்டி
காலை முதல் உங்கப்பன்
கழனியில உழுவறாரு - இப்ப
கஞ்சி சுமந்து வரேன்
சும்மா இரு மகனே

ஆத்துல தண்ணி வந்ததாலே
ஆர்வத்துல உங்கப்பன்
கழனியில நீர் பாய்ச்சி
கருத்தா அண்ட வெட்டி
களையெடுத்து வச்சிருக்கார்
கஷ்டப்படாம வா மகனே

வரப்புல மரமிருக்கு - அது மேல
வகை வகையா கூடு இருக்கு
வண்ண வண்ண பூக்கள் போல
வளருகிற பறவைங்க இருக்கு
வம்பு பண்ணாம வா மகனே

வயலில நடவு நட்டு
வத்தாம நீரை பாய்ச்சி - பயிர்
வதங்காம உரத்த போட்டு
வரும்படி பாக்க வேணும்
வல்லவனா வா மகனே

புயலடிக்காம இருக்க வேணும்
புழுப் பூச்சி தாக்காம காக்க வேணும்
புது நெல்லறுத்து - மன
புழுக்கம் தீர்க்க வேணும்
புத்திசாலியா இரு மகனே

ஒரு நாளு வெய்யிலடிக்கும்
ஒரு நாளு மழை பெய்யும்
ஒரு நாளு வயல் காய்ஞ்சி கெடக்கும்
ஒங்கப்பன் கெட்டிக்காரன்
ஒழுங்கா விளைய வைப்பான்
ஒன்றும் சொல்லாம வா மகனே

விவசாயமே நாய் பொழப்பு
விந்தையான நற்பிழைப்பு
விவரமில்லாதவன் விட்டுப் போவான்
விதிய நொந்து சில பேரு செத்தும் போவான்
விளையாடாம வா மகனே

வயிறு இருக்கற மனுசங்களுக்கு
வக்கனையா சோறு வேணும்
வயல் நடும் விவசாயி வாழ்ந்தா என்ன
வறுமையில் செத்தா என்னன்னு இருப்பான்
வரப்பு மேல் பாத்து வா மகனே

பட்ட படிப்பு படிச்சு கிழிச்சாலும்
பல நாட்டுக்கு போனாலும்
பணத்து மேல படுத்து உருண்டாலும்
பசின்னு வந்திட்டா - வயல்
பக்கம் வந்து தான் ஆகனும்
பயப்படாம வா மகனே

விவசாயி வாழ வேணுமுன்னு
விழிப்புணர்வு பெருக வேண்டும்
விளைச்சல் நிலத்திலெல்லாம்
விண்முட்ட கதிர்கள் வளர வேணும்.
விவசாயம் செழிக்க வேணும்
விவரத்தை சொல்லு மகனே

எழுதியவர் : கவிதை மழை கவிஞர் M K Rajkumar (1-Apr-21, 2:59 pm)
சேர்த்தது : கவிதை மழை
பார்வை : 238

மேலே