அம்மா, மகள் மற்றும் ஆசைக் குதிரைகள்

ஓடிப் போன
அப்பாவால்
வாடிப் போன வாழ்க்கையோடு
ஓடிக்கொண்டு இருக்கிறோம்
அம்மாவும் நானும்.

'வேலைக்காரி', வாழ்க்கையை
எனக்காகச் சுமக்கிறாள்
என்னைச் சுமந்தவள்.

எப்போதும் என்னிடம்
சிரிப்பைத் தவிர
வேறு எந்தப் பொருளையும்
காட்டாமல் வளர்க்கிறாள்
கண்ணீரால் வளர்ந்தவள்.

கண்ணீரைக் கூட
நான் உறங்கிய பிறகு
தலையணைக் கல்லறையில்
புதைத்துவிட்டு - மறு நாள் காலையில்
பூவாய் மலர்ந்து வருவாள்
என்னைப் பூவாய் வளர்க்கிறவள்.

"மதுரை ராஜா முத்தையா மண்டபத்தில்தான்
எனக்கு கல்யாணம் நடக்க வேணுமாம்;
சிறு செத்தை என் மேல் விழுந்தால் கூட
துடிக்கிற அத்தை - அதுதான் எனக்கு வரும் மாமியார் - எனக்குச் சொந்தம் ஆக வேண்டுமாம் ;
இருபத்தி நாலு மணி நேரமும் குடிதண்ணீர் வரும் பைப்பு வச்ச
வீட்டுக்குத்தான் நான் மருமகளாய்ப் போக வேணுமாம் ", என்று அடி பம்பில் தண்ணீர் அடித்து, அடித்துக் காய்த்துப் போன உள்ளங்கைகளால்-
என் கன்னத்தை அள்ளிக் கொஞ்சியபடி,
எத்தனையோ ஆசைக் குதிரைகளில்
சவாரி செய்வாள் என் 'இன்பம்', அம்மா!

"இவளுக்குத் துணையாக
இவளுக்குத் தூணாக இறுதிவரை
விளங்கவேண்டும்; அதற்குத் தோதாக- ஐம்பத்தி எட்டு வயது வரை வேலை தரும்
அரசுத் துறையில் எனக்கொரு
வேலை வேண்டும்;
என் அம்மாவை என்றும்
கண் கலங்காது பார்த்துக் கொள்ள வேண்டும்;
இதைப் புரிந்து கொண்டு
என் அம்மாவைத் தன் வீட்டோடு வைத்துக் கொள்ளும் மாப்பிள்ளை வேண்டும் !", என்ற
ஒற்றை ஆசையோடு,
நானும் ஒரு குதிரையில்
ஏறி ஓடுவேன் அவ்வப்போது.

"ஆசைகள் குதிரைகள் ஆனால்
ஏழைகளும் கூட சவாரி செய்யலாம்",
இல்லையா?

எழுதியவர் : முத்து நாடன் (24-Sep-11, 8:21 pm)
பார்வை : 933

மேலே