கொள்ளை நோய்கள் இல்லாத உலகம் படைப்போம்
அழகிய இயற்கையினாலே அதிசய பூமியை கண்டோம்,
பல வசதிகள் இருபதினாலே வாழ்ந்திட அங்கே சென்றோம்,
இருக்கிற இடம்தனை இரண்டாய் இறைவன் நீரென நிலமென தந்தான்,
இருப்பதை கொண்டு நீயோ இங்கே எழுந்திடு என அவன் சென்றான்,
நிலத்தினில் நீரினை ஊற்றி பொன் வளத்தினை உற்பத்தி செய்தோம்,
மனித உழைப்பினை விதையென தூவி முற்பாதயை வழியென செய்தோம்,
அளவுடன் இருப்பதை கொண்டு நீயோ வளமுடன் வாழு என்றால்,
வாழ வழி தெரியாமல் நீயோ இருக்கும் வளங்களை எல்லாம் தின்றாய்,
கொஞ்சம் அறிவுடன் இருந்து
இருந்தால் இந்த அவநிலை உனக்கு உண்டோ,
இன்னும் இது புரியாமல் நின்றாள் பெற்ற அறிவிற்கு இது நன்றோ,
இயற்கையின் மடிதனில் நாமும் சுகமாய் இருக்கிறவரைதனில் வாழ்ந்தோம்,
செயற்கையை பலமென என்னி சீக்கிரம் மண்ணில் வீழ்ந்தோம்,
மரத்தினை மீண்டும் மண்ணில் மலர்ந்திட செய்திடுவாயோ,
நல்ல உரத்தினை நிலத்தினில் தூவி இங்கு மலட்டினை ஓட்டிடுவாயோ,
நீ மலைகளை குடைந்ததினாலே மண்ணில் மழை வளம் குறைவதை பாரீர்,
இப்படி அதன் மகத்துவம் அறியாது செய்தால் நீங்கள் வாழ்வதற்கு எங்கே போவீர்,
உலகினில் அனைவரும் ஒன்று என்ற கூற்றினை உணர்வதே நன்று,
இருக்கிற இடம்தனில் யாரும் பெரியவர் சிறியவர் இல்லை,
பிறக்கிற உயிர் எதுவேனும் அவை அனைத்துமே இயற்கையின் பிள்ளை,
என்பதை மனதினில் ஏற்றி நீ பிறந்திடு மீண்டும் புதிதாய்,
நிலத்தடி நீரினை பெருக்கி மண்ணில் வளத்தினை மீண்டெழச் செய்வோம்,
வனத்தினை வயலென எண்ணி மிருகம் வாழ்ந்திட வழிவகை செய்வோம்,
கடலினில் கழிவுகள் சேரா வண்ணம் கடமைகள் ஆற்றிட சொல்வோம்,
அதில் கிடக்கிற கழிவினை கூட நம் கரத்தினால் கலைந்துரச் செய்வோம்,
இருக்கிற விளைநிலமெல்லாம் வளம் கொழிக்கிற மாதிரி பண்ணு,
உழைக்கிற மக்களின் பசியைப் போக்கி அப்புறம் உணவினை உண்ணு,
மரங்களை வளர்பதினாலே காற்று மாசினை போக்கிடலாமே,
மனித கரங்களை கொண்டு இவ்வுலகை தூய்மையாக ஆக்கிடலாமே,
தேவைக்கு மட்டும் இங்கே செயற்கை கருவியை தேடிடுவாயா,
இல்லை உன் தேக உழைப்பினை தவிர்க்க எண்ணி அனைத்தையும் மூடிடுவாயா,
இருந்த பொழுதினையெல்லாம் நீ இருளினில் மூழ்கிட செய்தாய்,
இனி திருந்தி மனிதரையெல்லாம் இங்கு நலமுடன் வாழ்ந்திட செய்வாய்,
மதியால் இவ்விதியை நாம் மாய்போம் என நீ நினைத்தாய்,
இயற்கை சதியால் நீ இன்றோ சவக்குழியினை அரவனைத்தாய்,
உயரத்தில் பறந்தாலும் ஊர் குருவி பருந்தல்ல,
புதிய உலகத்தை படைத்தாலும் அது இயற்கைக்கு நிகரல்ல,
செயற்கையை அழித்திடுவோம் நம் இயற்கையை அனைத்திடுவோம்,
இதுவரை படிந்திருந்த பழைய கறைகளை துடைத்திடுவோம்,
வெள்ளையை நீ பூசி பாழும் வீட்டினை இடித்து விடு,
இங்கே கொள்ள நோய்கள் இல்லாத புதிய உலகினை படைத்து விடு.

