திட்டம் போட்டு நான் எழுதுவதில்லை

திட்டம்போட்டு நான் எழுதுவதில்லை......

திட்டம் போட்டு நான் எழுதுவதில்லை
வட்ட சதுரத்திற்குள் என் எழுத்துக்கள் அடங்குவதில்லை
பட்டம் பணத்திற்கு நான் படிந்ததும் இல்லை
மட்டம் பார்த்து என் எழுத்துக்கள் மயங்கியதில்லை

கொட்டும் மழையில் குதூகலித்து நனைந்திடுவேன்
சொட்ட வியர்த்தாலும் வெயிலையும் வரித்திடுவேன்
நட்ட விதை முளையின் ஈரிலையில் ஈர்ப்படைவேன்
பட்டமரச் சருகின் உதிரலிலும் லயித்திடுவேன்

தட்டுத் தடுமாறிடும் குழவிநடையிலும்
நெட்ட நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையிலும்
கட்டுத்தறி கழன்ற கன்றின் துள்ளலிலும்
கட்டுண்ட உணர்வுகளால் கவிதைகள் பொழிந்திடுவேன்

எட்டப்ப ஏமாப்புகளின் ஏளனங்களை
கிட்ட நின்றே கொல்லும் கருவேலங்களை
கட்டம்போட்டு கருவறுக்கும் கருங்காலிகளை
முட்டப் பகைவரினும் வார்த்தைகளில் உமிழ்ந்திடுவேன்

பட்டிவாழ் பாமரன் பாசங்களை
வெட்டிவேர் வாசத்துடன் வருடிடுவேன்
அட்டண அதிகாரங்களின் அநியாயங்களை
பட்டென தயங்காது பா வடித்திடுவேன்

திட்டம் போட்டு நான் எழுதுவதில்லை
வட்ட சதுரத்திற்குள் என் எழுத்துக்கள் அடங்குவதில்லை
பட்டம் பணத்திற்கு நான் படிந்ததும் இல்லை
மட்டம் பார்த்து என் எழுத்துக்கள் மயங்கியதில்லை....

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (14-Jul-21, 9:00 am)
பார்வை : 46

மேலே