கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள் நூல் ஆசிரியர் கவிஞர் சக்தி ஜோதி நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்!

நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


******


வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை -78.
பக்கங்கள் : 80, விலை : ரூ.100.


******

என்னிடம் முகவரி பெற்று மதிப்புரைக்காக நூலை அனுப்பி வைத்த நூல் ஆசிரியர் கவிஞர் சக்தி ஜோதி அவர்களுக்கு முதல் நன்றி.

நாடறிந்த பெண் கவிஞர், சிறந்த படைப்பாளி, சமூக செயற்பாட்டாளர், நல்ல பேச்சாளர், பன்முக ஆளுமை மிக்கவர், ‘வாருங்கள் படைப்போம்’ இணைய நிகழ்வில் நேர்முகம் முழுவதும் பார்த்தேன். சிறப்பாக இருந்தது. உரத்த சிந்தனையின் வெளிப்பாடாக இருந்தது. பாராட்டுகள்!

பயணத்தின் நடுவே

வழிதவறிய போக்கனொருவர்
கனக்கத் தொடங்கிய

கால்களோடு வரக்கூடும்
உறைந்துபோன

தன் வார்த்தைகளுக்கு
கொஞ்சம் வெம்மை தேடி.
அவளறிவாள்

குவளையளவு

பச்சைத் தேயிலையை
கொதிக்கவைக்க

அவ்வளவு ஒன்றும்
அதிகமாய் தேவைப்படாது

சுள்ளிகள் !



‘கனலி’ என்ற முதல் கவிதையிலேயே மனிதநேயம் விதைத்துள்ளார். நண்பர்கள், உறவினர்கள் உபசரிப்பது பெரிதல்ல, யார் என்று அறியாத வழிப்போக்கருக்கு வரவேற்று தேநீர் தருவது உயர்ந்த உள்ளம்! இந்த உள்ளம் இயந்திரமயமாகி விட்ட இக்காலத்தில் இல்லை, ஆனால் பழங்காலத்தில் தமிழர்களின் பண்பாடாக இருந்தது. யார் என்று தெரியாதவர்-களிடமும் அன்பு காட்டுவது, சிறிய கவிதையின் மூலம் தமிழரின் பண்பாட்டை நினைவூட்டியது சிறப்பு. நூலாசிரியர் கதை, கட்டுரை, கவிதை எழுதினாலும் பிடித்த வடிவம் கவிதை என்றே என்னுரையில் குறிப்பிட்டது சிறப்பு.

புன்கணீர்

உலகின்

உயிர்கள் மொத்தமும்
அச்சிறு வெண்கிழங்காய்

திரண்டு
தன் கைகளில் தவழ்வதாக

உளம் நெகிழ
அவள்

கண்களில் திரண்டு வழிந்தது
வேறு கண்ணீர்!

பச்சை காணாமல் இருந்த வறண்ட நிலத்தை திருத்தி, விதையூன்றி, நீர் பாய்ச்சி, களையெடுத்து, பயிர் செய்து, சொந்த விவசாயம் செய்து மகிழ்ந்ததை நூலாசிரியர் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். சொந்த நிலத்தில் சொந்த விவசாய்ம் செய்து விளைந்தது கண்டு ஆனந்தக்கண்ணீர் வடித்த உண்மை நிகழ்வை கவிதையாக்கியது சிறப்பு. உண்மையைக் கூறும் கவிதைக்க்கு அடர்த்தி உண்டு, பாராட்டுகள்.

வானத்தின் வரைபடம்!

வேலிகாற்று

விரிந்து கிடக்கிறது
வெளி

திசைகளைத்

திறந்து வைத்தபடி
காத்திருக்கிறது

காற்று

மிதந்து கொண்டிருக்கும்
மேகங்களைக் காட்சியாக்கி

விரிகிற
சிறகுகளுக்குள்

மறைந்திருக்கிறது
வானத்தின் வரைபடம்!

‘வானம் எனக்கொரு போதிமரம்’ என்பார் கவிப்பேரரசு வைரமுத்து. கணினி யுகத்தில் வானத்தை ரசிக்க யாருக்கும் நேரமும் பொறுமையும் மனமும் இருப்பதில்லை. ஆனால் வாய்ப்புக் கிட்டும் போது நேரம் கிடைக்கும் போது வானத்தை ரசியுங்கள். மனம் இதமாகும். கவலைகள் காணாமல் போகும். நூலாசிரியர், வானம் ரசிப்பது வசப்பட்ட காரணத்தால், நமக்கு வானத்தின் வரைபடம் என்ற நல்ல கவிதை கிடைத்து விட்டது. வானம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கும், ரசியுங்கள்.

பெயல் நினைந்து!

அழுதழுது கண்ணிமைகள்

கனத்துக் கிடக்கும்
பெண்ணைப் போல

நீரற்று

இரு கரையும்
மேடிட்டுக் கிடக்கிறது

கோடையில்
அற்றதி வறண்ட

மணற்படுகையில்

பதிந்திருக்கும்
பழைய சுவடுகளை மூழ்கடித்தவாறு
மீன்கள் துள்ளப்

பாய்ந்தோடுகிற

புதுவெள்ளத்தை
கனவு கண்டபடி

கடந்து போகிறதொரு
செங்கல் நாரை!

வரலாற்று சிறப்புமிக்க வைகையில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. ஆனால் இன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது கூட செயற்கையாக தெப்பம் கட்டி தண்ணீர் ஊற்றி இறங்கி வைத்த நிகழ்வும் நடந்தது. வைகை கோடையில் வறண்டு விடுகிறது. இப்படி பல நினைவுகளை இந்த ஒரு கவிதை மலர்வித்தது. பாராட்டுகள். நாரைக்கு கனவு வருமா? என்பது தெரியவில்லை. வைகை ஆற்றை கடக்கும் நமக்கு அக்கால தண்ணீர் ஓடிய கனவு வந்து போவது உண்மை.

மொழி!

தெவிட்டாத காதலின் பரவசத்திலும்
திடுமென நிகழும் தன்

வலிமிகு பிரிவிலும்
சொற்களற்ற

துளி கண்ணீரே

அந்தந்த
கணங்களின்

மெய்யமைக்குச் சாட்சி
யாகிறது

எப்போதும்!

ஆண்கள் அவ்வளவாக அழுவதில்லை. பெண்கள் அடிக்கடி அழுது விடுவார்கள். துன்பத்தில் மட்டுமல்ல, இன்பத்திலும் அழுவார்கள், துன்பக்கண்ணீரும் உண்டு, இன்பக் கண்ணீரும் உண்டு. பெண்களின் கண்ணீருக்கு காரணம் உண்டு. வலிமையும் உண்டு. பெண் கண்ணீர் குறித்த காரண காரியம் சொல்லி பெண்மையைப் பாடிய விதம் அருமை.

சுழற்சி!

‘இயற்கையின் நிகழ்வுகளை பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும்

ஏற்றுக் கொள்வது எப்போதுமே நல்லது
என்று சொல்லி கன்னத்தில் முத்தமிட்டேன் அடுத்த நாள்
தொலைபேசியில் அழைத்தவள்

கல்லூரிக்கு
விடுப்புக் கடிதத்தோடு

திட்ட அறிக்கையையும்
தோழியிடம்

கொடுத்தனுப்பியதாகச் சொன்னாள்?

இக்கவிதையின் முதல் வரிகள்தெரியுமா ?

தயவுசெய்து

இன்னைக்கு வர

வேணாம்ன்னு சொல்லும்மா

பயணிக்க வேண்டும் என்றாள் மகள்!

மங்கையராகப் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும். மகத்தான பிறப்பு தான் பெண் பிறப்பு. பெற்றோரை மூச்சு உள்ளவரை மறக்காமல் பாசம் காட்டிடும் உயர் பிறப்பு பெண் பிறப்பு. ஆனால் மிகவும் கொடுமையா வலி மிகுந்த வேதனையான ஒரு தொல்லை என்பது மாதவிலக்கு. பெண்ணாகப் பிறந்ததற்காக பெருமைப்பட்டுக் கொள்ளும் சாதனைப் பெண்கள் கூட பெண்ணாய் பிறந்ததால் இந்த சோதனை என்று வருந்துவதும் உண்டு. வலி மிகுந்த தொல்லை, மகளுடன் உரையாடுவது போல வடித்த கவிதை நன்று.

தரிசனம்!

உள்ளிருக்கும்

ஏதோ ஒன்றை
எங்கிருந்தோ தொடுகிறாய் !

இங்கிருக்கும்
அத்தனையும்

கண் மறைத்து

காணும்
வெளியெங்கும்

நீயே காட்சியாகிறாய்!

உணர்வில் சிறந்த உணர்வு காதல் உணர்வு அது எப்படி வரும், எப்போது வரும் எனப்து தெரியாது. புரியாத புதிராக காதல் உணர்வை குறைந்த சொற்களுடன் நிறைந்த பொருளைத் தந்துள்ளார். பாராட்டுகள். தொடர்ந்து நீங்கள் கவிதைகளே எழுதுங்கள் என்ற வேண்டுகோளை வைத்து முடிக்கிறேன்.


--

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (9-Aug-21, 7:39 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 100

மேலே