92 வயது இளைய பெண்மணி
பதினேழு வருடங்கள் வரை என் வீடு அக்கம் பக்கம் மற்றும் என் பள்ளி இதை தவிர நான் எதையும் அறியாதவன். பதினெட்டாம் வயதில் முதன் முறை வேலூரில் உள்ள என் பெரியம்மா வீட்டிற்கு முதன் முறையாக ரயில் ஏறி சென்றேன். ஏதோ, வேறு ஒரு பிரதேசம் செல்வது போல் இருந்தது. மூன்று நாட்கள் அங்கு தங்கி இருந்தேன். பெரியம்மா மிகவும் நன்றாக வக்கணையாக சமைத்து எனக்கு பரிமாறினார்கள். இந்த நிகழ்ச்சி நடந்து நாற்பத்திஐந்து வருடங்கள் ஆயினும், அப்போது எனக்கு இனிப்பு என்றால் விருப்பம் என்பதால் தினமும் ஒரு இனிப்பு செய்து கொடுத்தார்கள். அவர் வீட்டில் எப்போது சென்றாலும் உணவு கிடைக்கும். சமையல் பலகாரங்கள் எதுவும் மிகவும் தாராளமாக செய்யும் பழக்கம் உடையவர் என் பெரியம்மா. அந்த இனிமையான மொன்று நாட்கள் இன்னும் பசுமையாக என் மனதில் உள்ளது. இன்றும் என் பெரியம்மா வேலூரில் தனியாக அவர் சொந்த வீட்டில் தான் இருக்கிறார்கள். என் பெரியப்பா காலமாகி பல வருடங்கள் ஆகிறது. அவரது மகன்கள் இருவரும் வேறு ஊரில் தான் இருக்கிறார்கள். பெண்கள் நால்வருக்கும் திருமணமாகி எல்லோரும் வெளியூரில் தான் இருக்கிறார்கள். இப்போது 92 வயதாகும் என் பெரியம்மா இன்னமும் தனியாக இருப்பது மட்டும் இல்லாமல், தானாகவே சமைத்துக்கொண்டு சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார்கள். வேறு யாரிடமும் நான் ஒரு சுமையாக இருக்க மாட்டேன் என்ற வைராகியதில் வாழ்ந்து வருகிறார்கள். அவ்வப்போது அவரது இரு மகன்களும், ஒரு மகளும் வேலூர் சென்று என் பெரியம்மாவை பார்த்து வருகின்றனர் . நான் பெரியம்மாவுடன் தொலைபேசியில் மாதம் ஒரு முறை பேசி வருகிறேன். அடிக்கடி அவர் ஏதாவது அடி பட்டுக்கொண்டு தான் இருக்கிறார். சின்ன வயதிலிருந்தே அவருக்கு மைக்ரேன் தலைவலி. இன்னமும் இருந்து வருகிறது பெரியப்பா அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றதால் அவர் காலமான பிறகு, பெரியம்மாவுக்கு பென்ஷன் கிடைத்து வருகிறது. அதே தெருவில் உள்ள கடைக்கு சென்று காய்கறிகள் வாங்கி வருவார். இரண்டு வரும் முன்பு வரை வருடம் மூன்று நான்கு முறை சென்னை பஸ் பேருந்தில் சென்று வந்து கொண்டிருந்தார். அங்கே அவரது பெரிய மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இத்தனை வயதிலும் இவ்வளவு உடல் உபாதைகள் இருப்பினும், முதியோர் இல்லம் சென்று தாங்காமல், தனியாக துணிவுடன் வாழ்ந்து வருகிறார். இரண்டு வருடங்கள் முன்பு நானும் மனைவியும் அவரை சென்று பார்த்து வந்தோம். நாங்கள் அவர்கள் வீடு சென்றபோது பாயாசத்துடன் சமையல் செய்து எங்களுக்கு பரிமாறினார். நாங்கள் இரண்டு நாட்கள் அவருடன் தங்கி இருந்தோம். என் மனைவி பெரியம்மாவுக்கு உதவியாக இருந்தாள். பின் நாங்கள் ஊர் திரும்பி விட்டோம். நாங்கள் என்று இல்லை, என் பெரியம்மாவை யார் சென்று பார்த்தாலும் , அவர்களுக்கு சமைத்து பரிமாறுவர். இப்போது கண் பார்வை மிகவும் மங்கலாகி விட்டது. அடுப்பிலிருந்து சில சமயம் சூடாக எண்ணெயோ, வேறு சமையல் பதார்த்தமோ இவர் காலில் விழுந்து , காயமும் படுகிறது. இருப்பினும் இன்று வரை இவர் தனியாகவே வாழ்ந்து வருகிறார். என் உடலில் கொஞ்சமாவது தெம்பு இருக்கும் வரை நான் என் சொந்த வீட்டில், சொந்த காலில் தான் இருப்பேன் என்கிறார். இவரை போல மனிதரை காண்பது மிகவும் அரிது. ஒரு பெரிய நல்ல விஷயம், இவருக்கு இதுவரை சர்க்கரை வியாதி, ரத்த அழுத்த வியாதி எதுவும் இல்லை. அறுவது வயது ஆன உடனேயே பல உடல் உபாதைகள் சேர்ந்து, வீட்டில் பிறர் உதவியுடன் சிரமத்துடன் வாழ்ந்து வரும் பல முதியவர்களுக்கு நடுவில், அசாதாரண துணிச்சல் மற்றும் வைராகியமும் கொண்டு தனித்து வாழும் என் பெரியம்மா, ஒரு நூதன பிறவி என்றால் அது மிகையா?
ஆனந்த் ராம்

