நயமின் மனத்தவர் நட்பு இன்னா - இன்னா நாற்பது 8
இன்னிசை வெண்பா
பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா
நகையாய நண்பினார் நாரின்மை யின்னா
இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா
நயமின் மனத்தவர் நட்பு. 8
- இன்னா நாற்பது
பொருளுரை:
ஞாயிறு போன்ற தெளிவுடைய மனமுடையவர் பண்பில்லாது இருத்தல் துன்பமாகும்.
புன்னகையுடைய நண்பர்கள் அன்பில்லாது இருத்தல் துன்பமாகும்.
போருக்கு முனைந்து எழுந்தவர் புறங்காட்டி ஓடுதல் துன்பமாகும்.
நீதியில்லாத நெஞ்சினையுடையாரது நட்பு துன்பமாகும்.
பகல்போலும் நெஞ்சம்- ஞாயிறு திரிபின்றி ஒரு பெற்றித்தாதல் போலத் திரிபில்லாத வாய்மையை உடைய நெஞ்சம்.
இனி நுகத்தின் பகலாணி போல் நடுவுநிலை யுடைய நெஞ்சம் எனினும் பொருந்தும்.
"நெடுநுகத்துப் பகல்போல, நடுவு நின்ற நன்னெஞ்சினோர்" என்பது பட்டினப்பாலை பண்பாவது உலகவியற்கை யறிந்து யாவரொடும் பொருந்தி நடக்கும் முறைமை.
தூயமனமுடையரேனும் உலகத்தோடு பொருந்தி நடவாமை தீதென்பதாம்.
நகையாய நண்பீனார் நாரின்மை என்பது முகத்தால் நகுதல் செய்து அகத்தே அன்பு சுருங்குதல்.
நயம் - நீதி, இனிமை, விருப்பம் எனவும் பொருள் கூறலும் ஆம்.