ஓய்வு வயது- ஒரு பக்க கதை இலவசமாய் பாரதியாரின் கதைகள் இரண்டு

ஓய்வு வயது- ஒரு பக்க கதை
(இலவசமாய் பாரதியாரின் கதைகள் இரண்டு)

அலுவலகத்தில் மிகவும் பிசியாக இருந்த ராமகிருஷ்ணனை மானேஜர் அழைப்பதாக சொன்னதும் என்னவோ ஏதோவென்று வேகமாக அவரது அறைக்குள் கதவை தட்டி விட்டு நுழைந்தார்.
வாங்க ராமகிருஷ்ணன் இன்னோயோட உங்களுக்கு சர்வீஸ் முடியுதுன்னு கேள்விப்பட்டேன், உங்களை இன்னைக்கு சாயங்காலம் நம்ம சேர்மன் சந்திக்கணும்னு விரும்புறாரு. அதனால நாலு மணிக்கு தயாராய் இருங்க, அவரு வீட்டு கார் வரும் நீங்க போயிட்டு வாங்க.
அவர் சொல்லவும்தான் இவருக்கு இன்றோடு தனக்கு சர்வீஸ் முடியப்போகிறது என்பது ஞாபகம் வந்தது. அதை நினைத்தவுடன் மனது துக்கத்தில் பொங்கியது.
ராமகிருஷ்ணன் சார் இந்த அக்கவுண்ட்சை கொஞ்சம் சொல்லி கொடுங்களேன், உங்களை மாதிரி பொறுமையா எங்கனால வேலை செய்ய முடியலை சார், எதுன்னாலும் ராமகிருஷ்ணனை கேளுங்க, இப்படி எத்தனை வார்த்தைகள் இந்த அலுவலகத்தில் புழங்கி வந்திருக்கிறது.
இந்த மானேஜரே இங்கு வந்தவுடன் இவரிடம்தானே அலுவலக வேலைகளை கற்று கொண்டார். சார் நீங்க மட்டும் இந்த மாதிரி செய்யுங்கன்னு சொல்லையின்னா இந்நேரம் சேர்மன் முன்னாடி கையை கட்டி நின்னுட்டு அவர்கிட்ட பேச்சு வாங்கிட்டிருக்கணும், அவரின் கையை பிடித்து சொன்ன வார்த்தைகள்.
மாலை நாலும் மணிக்கு முன்னாலேயே அலுவலக ஊழியர்கள் அவரிடம் வந்து கையை குலுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு, சேர்மனை பார்த்துட்டு வந்துடுங்க, அதுக்கப்புறம் உங்களுக்கு எந்நேரமானாலும் இருந்து பார்ட்டி வச்சுட்டு போகலாம்,
நாலு மணிக்கு சேர்மன் வீட்டு கார் இவர்கள் அலுவல்கம் முன்னால் நிற்க, இவர் அந்த காரில் ஏறி செல்வதை ஊழியர்கள் கொஞ்சம் பொறாமையுடனும், கொஞ்சம் பேர் பெருமையுடனும் பார்த்தார்கள்.
வாசலிலேயே நின்று கொண்டிருந்தார் சேர்மன், வாங்க ராமகிருஷ்ணன், கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றவர் சோபாவில் உட்காரவைத்து இந்த கம்பெனிக்காக முப்பது வருஷம் உழைச்சிருக்கீங்க. இப்ப உங்களுக்கு இன்னையோட அம்பதெட்டு தானே முடிஞ்சிருக்கு.
ஆமாம் சார் மெளனமாய் தலையாட்டினார்.
கவர்ன்மெண்டு அவங்க ஊழியர்களுக்கு அறுபது பண்ணியிருக்கு, அப்ப நாம ஏன் அறுபதா பண்ண கூடாது?
இதற்கு என்ன பதில் சொல்வது என்று விழித்தார்.
ஓ.கே, இருங்க காப்பி சாப்பிட்டுட்டு போலாம், உங்களுதுல இருந்து நாமளும் நம்ம ஸ்டாப்புகளுக்கு அறுபது வயசுதான் ரிட்டையர்ட்மெண்ட் வயசுன்னு ஆரம்பிக்கலாம்.
சார்..வியப்புடன் கண்களை உயர்த்த, அதற்குள் காப்பியும் பிஸ்கட்டும் அவர் அருகில் கொண்டு வந்து வைக்கப்பட்டது.
சேர்மன் எழுந்து அலுவல்க அறைக்குள் சென்று எதோ பேசிவிட்டு வந்தார். அதற்குள் ராமகிருஷ்ணன் அவர் வருவதற்குள் காப்பியையும், பிஸ்கட்டையும் சாப்பிட்டு முடித்தார்.
சேர்மன் பத்து நிமிடத்துக்குள் வந்தவர் நீங்க நாளையில இருந்து எப்பவும் போல வேலைக்கு வந்துடுங்க. ஆபிசுல பேசிட்டேன்.
சார்..ரொம்ப நன்றி சார், சொல்லும்போதே ராமகிருஷ்ணனுக்கு கண்ணீர் வந்தது, இன்னும் பையனுக்கு ஒரு வேலை அமையவில்லை. பெண்ணுக்கு ஒரு வருடத்திற்குள் கல்யாணம் செய்யவேண்டும், இத்தனை கவலைகள் இருக்கும்போது இந்த ரிட்டையர்மெண்ட் அவரை படுத்தி கொண்டிருந்தது.
ரொம்ப நனறி சார், நான் கிளம்பறேன், சார் அவரிடம் கை கூப்பி நன்றி சொல்லிக்கொண்டிருந்தார்.
“ஏங்க நடு ராத்திரி எந்திரிச்சு, கைய கூப்பி நன்றி சார் நன்றி சார்ன்னு சொல்லிகிட்டிருக்கீங்க, மனைவி உலுக்கிய உலுக்களில் விழித்தவர் தன் நிலை உணர்ந்தபோது தான் கட்டிலில் இருந்து எழுந்து கை கூப்பி நின்று கொண்டிருப்பதை
கண்டவருக்கு அப்போ இவ்வளவு நேரம் கண்டது எல்லாம் கனவா..!
ரிட்டையர்டாயி இந்த இரண்டு நாள்ல இராத்திரியானா உளர்ற ஆரம்பிச்சிட்டீங்க, கவலைய விடுங்கன்னு சொன்னா கண்டதையும் நினைச்சு குழப்பிகிட்டு இப்படி நடு இராத்திரி எந்திரிச்சு புலம்பிகிட்டு…
மனைவி முணுமுணுத்துவிட்டு அவள் படுத்திருந்த கட்டிலுக்கு திரும்பி சென்று படுத்து ஐந்து நிமிடத்தில் தூங்கி போனாள்.
இராமகிருஷ்ணனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தவாறு தான் படுத்திருந்த கட்டிலில் உட்கார்ந்திருந்தார்.
(கதை முடித்து விட்டாலும் சோகமாய் முடிக்க விருப்பமில்லை)
காலை பத்து மணி இருக்கலாம், அவர் வேலை செய்து கொண்டிருந்த அலுவலகத்திலிருந்து போன், “ரிட்டையர்டுமெண்ட் வயச அறுபது பண்ணிட்டதுனால நாளையில இருந்து நீங்க வேலைக்கு வரலாம்” சர்வீஸ் அப்படியே கண்டிணியூ ஆயிடும் தகவல் அவர் காதில் வந்து சேர்ந்தது.

பாரதியாரின் தேவ விகடம்

நாரதர் “கைலாசத்துக்கு” வந்திருந்தார். வழியை மறித்த நந்திகேஸ்வரர் உள்ளே அம்மையும் அப்பனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நீர் காத்திரும், சொன்னது மட்டுமில்லாமல் காத்திருக்கும் நேரம் சற்று பேசிக்கொண்டிரும்
அப்படியே நாரதரும் பேச உட்கார, அங்கு பிள்ளையார் வந்தார். அவர் வந்து நாரதர் அருகில் உட்காரவும் நந்திகேஸ்வரர் அருகில் இருந்த பூதத்திடம் முப்பது வண்டி கொழுக்கட்டை, முந்நூறு குடம் பாயாசம் ஒரு வண்டி நிறைய வெற்றிலை பாக்கு கொண்டு வா என்று சொன்னார்.
பூதம் கொண்டு வரவும், பிள்ளையார் சிரம பரிகாரம் செய்து கொண்டார். அப்படியே நாரதரும் ஒரு கொழுக்கட்டை, எடுத்து தின்று ஜலத்தையும் குடித்தார். நந்திகேஸ்வரர் இரண்டு மூட்டை பருத்தி கொட்டை, இரண்டு மூட்டை உளுந்து, இரண்டு மூன்று கட்டு புல்லு ஒரு திரணை போல விழுங்கி விட்டு கொஞ்சம் தீர்த்தம் சாப்பிட்டார்.

பிறகு வார்த்தை சொல்ல தொடங்கினார்கள்.

பிள்ளையார்- சமீபத்தில் எங்காவது கலகம் விளைவித்தீரா?

நாரதர்-கிடையாது ஸ்வாமி,இப்போதெல்லாம் மனுசருக்குள்ளேதான் சண்டை நடத்தி கொண்டிருக்கிறேன்.

பிள்ளையார்- நடந்ததை சொல்லும்

நாரதர்-விழுப்புரத்திலே ஒரு செட்டியார், அவன் லோபி, தஞ்சாவூரிலே ஒரு சாஸ்திரி அவன் கர்வி. செட்டிக்கு செலவு வைக்கவும், சாஸ்திரிக்கு கர்வத்தை அடக்கவும் முடிவு செய்து, சாஸ்திரியை விழுப்புரத்துக்கு வரும்படி பண்ணினேன்.

பிள்ளையார்-எப்படி?

நாரதர்- செட்டியின் கனவில் போய் தஞ்சாவூரில் ஒரு சாஸ்திரி இருக்கிறார், அவர் உன் வீட்டில் வந்து யாகம் செய்தால், உனக்கு ஆண் மகவு கிடைக்கும், தோஷ சாந்திகள் போக்கும்படியும் செய்வார் என்று கூறினேன்.
அதே போல் சாஸ்திரியின் கனவில் போய் செட்டி வீட்டுக்கு போனால் நிறைய பணமும், கீர்த்தியும் கிடைக்கும் என்று சொன்னேன்.

சாஸ்திரி செட்டி கடிதம் போடுமுன் அவன் வீட்டுக்கு சென்று ஹோமம் பண்ண தொடங்கினான். காசும் அதிகமாக கேட்டான். அதனை கேட்ட செட்டி சாஸ்திரியை பாதியிலேயே நிறுத்த சொல்லி வீட்டுக்கு போக சொல்லிவிட்டான்.

சாஸ்திரியை செட்டிக்கு ஆகாத பிரபு ஒருவர் கூட்டி போய் ‘பகவத் கீதை’ பிரசங்கம் பண்ண சொன்னான்.

ஏற்கனவே செட்டிக்கும், அந்த பிரபுவுக்கும் “கொடுக்கல் வாங்கலில்” தீர்ப்புக்கு சென்று வழக்கு பிரபுவுக்கு சாதகமாயிருந்தது.

இந்த நேரத்தில் செட்டியின் பணியாள் ஒருவன் செட்டியிடம் சென்று யாரோ ஒரு ‘அய்யர்’ உனக்கு சூனியம் வைக்கிறாரென்று மாரியம்மன் ஆவேசம் வந்த பொழுது என் பொண்டாட்டி சொன்னாள் என்று சொல்லி விட்டான்.

உடனே செட்டி அந்த தஞ்சாவூர் சாஸ்திரியும், பிரபுவும் சேர்ந்து தனக்கு சூனியம் வைக்க திட்டமிடுகிறார்கள் என் முடிவு செய்து ஒரு ஆளை வேவு பார்க்க அவர்கள் வீட்டுக்கு அனுப்புகிறான்.
வேவுக்காரன் சென்ற பொழுது அவர்கள் இரண்டு பேரும் வேதாந்தம் பேசிக் கொண்டிருந்தார்கள் “பிரமந்தான் சத்தியம்”
மற்றதெல்லாம் சூனியம்”
சாஸ்திரி சொன்னான். வேவுக்காரனுக்கு சூனியம் என்னும் வார்த்தைத்தான் கேட்டது, போய் செட்டியிடம் சொல்லிவிட்டான்.சூனியம் வைப்பதாக சொன்னதை என் காதால் கேட்டேன் என்று சத்தியம் வேறு செய்தான்.
அது மட்டுமல்ல நான் சொன்னது பொய்யானால் என் பொண்டாட்டி வாங்கியிருக்கும் கடனெல்லாம் மோட்டு தெரு “பிள்ளையார் கொடுக்க கடவது” என்று சொன்னான்.

பிள்ளையார்- சிரிப்புடன் அட துஷ்டப்பயலே, அவன் பொண்டாட்டி வாங்கின கடனெயெல்லாம் நானா தீர்க்க வேண்டும், இருக்கட்டும் அவனுக்கு வேண்டிய ஏற்பாடு செய்கிறேன்.

செட்டி ஒரு கள்ளனை அழைத்து வர செய்து அந்த பிரபுவின் வீட்டில் போய் கொள்ளை அடித்து விட்டு அந்த சாஸ்திரியின் “குடுமியை அறுத்து வந்து” என்னிடம் கொடு என்று சொல்லி நூறு பொன்னை கொடுத்தான்.

அதுவரை அந்த கள்ளன், செட்டியை ‘ஏழை’ என்றே நினைத்திருந்தான். இவன் நூறு பொன் கொடுப்பானாகில், இவனிடம் நிறைய பொன்னும் பொருளும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து “நாலு கள்ளர்களை” அனுப்பி அன்று இரவே செட்டி வீட்டை கொள்ளையடித்து அனைத்தையும் வாரி சுருட்டிக்கொண்டு போக செய்து விட்டான்.

செட்டியிடம் கொள்ளை அடித்ததற்கு பதிலாக அவன் கொடுத்த வேலையை முடிப்போம் என்று சாஸ்திரியின் “குடுமியை நறுக்கி” செட்டியிடம் கொண்டு போய் கொடுத்தான்.பொன் களவு போன பெட்டியில் இந்த சாஸ்திரியின் குடுமியை வாங்கி பூட்டிக்கொண்டான் செட்டி.

சாஸ்திரி கர்வமடங்கி நான் யாருக்கும் ஒரு தீங்கு நினைத்ததில்லையே எனக்கு இப்படி ஒரு அவமானம் வரலாமா? என்று தஞ்சாவூரில் அவன் வீட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கும் போது நான் பிச்சைக்காரன் வேஷத்தில் அங்கு சென்றேன்.
“கடலைப்போலே கற்றோமென்றே
கருவங்க் கொண்டாயே
கல்லா ரென்றே நல்லார்தம்மைக்
கடுமை செய்தாயே”

பிள்ளையார்-இது நடந்ததா, கற்பனையா?

நாரதர்-கற்பனைதான் சந்தேகமென்ன?

பிள்ளையார்- ஏனய்யா, உண்மை போல சொல்லிக்கொண்டு போனீரே, நான் கூட உண்மை என்று நம்பி உன்னிடம் கதை கேட்டேனே

நாரதர்-வேண்டுமென்றேதான் பொய் சொன்னேன்

பிள்ளையார்-ஏன்?

நாரதர்- நந்திகேஸ்வரர் பொழுது போவதற்காக கதை சொல்ல சொன்னார், நீர் வந்து கலந்து கொண்டதால் உம்மையும் சேர்த்து கொண்டேன்.

பிள்ளையார்-நந்திகேஸ்வரருக்கு கதை சொல்வதற்காக என்னையும் சேர்த்து கொண்டீரா? என்ன நந்தியாரே எஜமான், பிள்ளை நீயா நானா?

நந்தியார்- பிள்ளையாரே உமக்கு எவ்வளவு கொழுக்கட்டை கொடுத்தாலும் ஞாப்கம் இருப்பதில்லை. உமக்கு பொழுது போகாமல் போனால் வாயில் காக்கும் என்னிடம் வந்து தொல்லை செய்கிறீர், முருகக்கடவுள் இப்படியெல்லாம் செய்வதில்லை. என்னிடம் இது போல் சொன்னால் நான் உம் அம்மையிடம் போய் சொல்லுவேன்.

நாரதர்- சிரித்து நான் தேவர்களுக்கிடையில் நான் கலகமுண்டாக்கும் வேலைகளை நான் நிறுத்திவிடவில்லை.

பிள்ளையாருக்கும், நந்தியாருக்கும் வெட்கம் வர, இலேசான வேடிக்கை குட்டு ஒன்றை நாரதரின் தலையில் வைத்தார்கள்.

நாரதர்- இன்று காலையில் “பிரகஷ்பதியிடம்”பேசிக்கொண்டிருந்த பொழுது என் ஜென்ம ராசிக்குள் அவருடைய “கிரகம்” நுழைப்போகிறதாம், அதனால் இன்று நந்திகேஸ்வரரும், பிள்ளையாரும் குட்டுவார்கள் என சோதிடம் சொன்னார்.

நான் அப்படி நடக்காது என்று சொன்னேன்.அவர் அப்படி குட்டினால் என்னிடம் பதினைஞ்சாயிரம் “பஞ்சாங்கங்கள்” வாங்கி கொள்ள வேண்டும் என்று சொன்னார்.

நீங்கள் குட்டாவிட்டால் ஆறு சங்கீத கக்சேரி ஏற்பாடு செய்து தருவதாக சொன்னார். அவர் கட்சி வென்றுவிட்டது, அவரிடம், “பதினைந்தாயிரம் பஞ்சாங்கங்கள்” வாங்க வேண்டும்.

பிள்ளையார்-இரக்கத்துடன் அதன் விலை என்ன?

நாரதர்-இருபதனாயிரம் பொன்.

பிள்ளையார்- பூதத்தை அழைத்து இவருக்கு இருபதாயிரம் பொன் கொடுத்துவிட்டு அதனை “பிள்ளையார் தர்ம செலவு கணக்கு” என்று எழுதி விடு. ஆமாம் இந்த பந்தய கதை பொய்யா, மெய்யா?

நாரதர்- பொய்தான் சந்தேகமென்ன? பணத்தை கீழே போட்டு விட்டு ஓடிப்போனார்.


கதை -2
முன்னொரு காலத்தில் “வாந்தி பேதி பிசாசு” இந்தியாவிலிருந்து புறப்பட்டு அரேபியாவிலுள்ள “மக்கா” நகரத்துக்கு போய்க் கொண்டிருந்ததாம், போகும் வழியில் பாரசீகத்திலுள்ள “பெரிய தப்ஸ்வியும் ஞானியுமாகிய ஒரு மஹம்மத பக்கிரி” அந்த பேயை கண்டு எங்கே போகிறாய்? என்று கேட்டார்.

மக்கா நகரத்தில் இப்பொழுது வருஷ திருவிழா தொடங்கியிருக்கிறது. நாலா தேசங்களிலும் இருந்து எண்ணற்ற ஜனங்கள் திருவிழாவுக்காக அங்கு வந்து கூடியிருப்பார்கள்.அவர்களை” வேட்டையாடும்” பொருட்டு மக்காவுக்கு போகிறேன்.

அது கேட்ட அந்த சந்நியாசி “சீ சீ மூர்க்க பிசாசே”, மக்காவில் அல்லாவைத் தொழும் பொருட்டு நல்ல பக்தர்கள் வந்து திரண்டிருப்பார்கள், அவர்களை நீ போய் கொல்ல நான் இடம் கொடேன் என்றார்.

அதற்கு வாந்தி பேதி பேய் சொன்னது ஸ்வாமி என்னையும் “அல்லாதான்” படைத்து மனித உயிர்களை வரிக்கொண்டு போகும் தொழிலுக்கு நியமனம் செய்திருக்கிறார்.

நடக்கும் எல்லா காரியங்களும் அல்லாவின் செயல்களேயன்றி மற்றில்லை.அவனன்றி ஒரு அணுவும் அசையாது, ஆதலால் எந்து போக்கை உம்மால் தடுக்க முடியாது.

வந்திருப்போர் அத்தனை பேரும் புண்ணியாத்மாக்களென்று நினைத்து விடக்கூடாது. எத்தனையோ பாவிகளும் அதரமிஷ்டர்களும் “குரான்” விதிகளை மீறி நடப்போரும் அங்கு வந்திருப்பார்கள். தவிரவும் பாவம் செய்தோருமட்டுமல்ல, புண்ணியாத்மாக்களும் சாகத்தான் செய்கிறார்கள். இவ்வுலகில் சாவு கிடையாதென்று “அல்லா” விதிக்கவில்லை.

வேறு நோய்களால் நெடுங்காலம் வருந்தி வருந்தி துடித்து சாவதை காட்டிலும் என்னால் துரிதமான மரணத்தை அளித்து சீக்கிரம் அவர்களை மரணிக்க செய்கிறேன்.

இருந்தாலும் அல்லாவின் கருணை பெற்றவரும் புண்ணியாத்மாவாகிய நீர் மனம் வருந்தா வண்ணம் ஒன்று சொல்கிறேன். நீர் அங்கு எத்தனை பேரை மரணிக்க சொல்கிறீர்களோ அத்தனை பேரை மட்டும் மரணிக்க வைக்கிறேன் என்று “பிரதிக்கிணை” கொடுக்கிறேன் என்றது.
அங்கு லட்சக்கணக்கான ஜனங்கள் கூடியிருப்பார்கள், அவர்களில் நீ ஓராயிரம் பேரை மாத்திரமே கொல்லவேண்டும் என்றார்.

நல்லதென்று சொல்லி மக்காவுக்கு பயணமானது வாந்தி பேதி பேய்.

ஆனால் அந்த திருவிழாவிற்கு வந்தவர்களில்” லட்சம் பேர் இறந்துவிட்டார்கள்” என்று செய்தி அவர் மனதை துன்புறுத்தியது. அவருக்கு அந்த ‘பேயின்’ மீது கடும் கோபம் வந்தது.

மறு நாள் அந்த பேய் ‘மக்காவிலிருந்து’ திரும்பிக்கொண்டிருந்த பொழுது அந்த பக்கிரியை கண்டு வணங்கிற்று.

“துஷ்டப்பேயே” பொய் சொல்லிய நாயே, என்னிடம் ஆயிரம் பேருக்கு மேலே கொல்வதில்லை வக்குறுதி கொடுத்து விட்டு மக்காவிற்கு போய் லட்சம் பேரை கொன்றிருக்கிறாய், உனக்கு என்ன தண்டனை விதிக்கலாம்?
வாந்தி பேதி பேய் கல கலவென்று சிரித்தது, கேளீர் முனிஸ்டரே, நான் உமக்கு கொடுத்த வாக்கின்படி ஆயிரம் பேருக்கு மேல் ஒருவரையும் தீண்டவில்லை. ஆயிரம் பேரே என்னால் மாண்டனர். மற்றவர்கள் எல்லாம் தமக்கு தாமே பயத்தால் வாந்தியும், கழிச்சலும் வருவித்து கொண்டு மாய்ந்தனர். அதற்கு நான் என் செய்வேன்? என் மீது பிழை சொல்லுதல் நியாயமாகுமோ?

முனிவர் பெருமூச்சுவிட்டு ஆகா! ஏழை மனித ஜாதியே பயத்தாலும் சக்சயத்தாலும் உன்னை நீயே ஓயாமல் கொலை செய்து கொண்டிருக்கிறாய், இந்த மகா மூடத்தமை கொண்ட மதியையும், இம் மதியை உன்னிடத்தே தூண்டி விடும் மகா பயங்கரமனான விதியையும் நினைக்கும் போது என் நெஞ்சம் கலங்குகிறதே, நான் என்ன செய்வேன்.

“அல்லா ஹோ அக்பர்”, அல்லா மகான், அவருடைய திருவுளப்படி எல்லாம் நடை பெறுகிறது. அவர் திருவடி வெல்லுக” என்று சொல்லியபடி முழங்கால் படியிட்டு வானத்தை நோக்கியவராய் அல்லாவை கருதி தியானம் செய்ய தொடங்கினார்.

நோய்க்கு முக்கிய காரணம் ஜீவர்களின் மனதில் தோன்றும் பயம், கவலை, கோபம், சம்சயம், பொறாமை, வெறுப்பு, அதிருப்தி முதலிய விஷ குணங்களேயாமென்பது இந்த கதையின் பொருள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-Feb-22, 10:43 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 143

மேலே