பிறந்த வீடு

பிறந்த வீடு

இருபத்து ஐந்து வருடங்கள் கழித்து
பிறந்த மண்ணில் காலடி எடுத்து வைத்தாள் ரேவதி. வாடகை காரில்
இருந்து இறங்கியதும், அந்த தெருவில் உள்ளவர்கள் அவளை
ஆச்சரியமாக பார்த்த போது,
அவர்களைப் பார்த்து பொதுவாக
சொன்னாள் "இது வாடகை கார் தான்
சீக்கிரமா சொந்த கார் வாங்கிடு வேன்" என்று. யாரும் பதில்
பேசவில்லை.

ஒரு மூதாட்டி மட்டும் "சரி கண்ணு.
நீ நல்லபடியா இருந்தா சந்தோசம் தான், உள்ள போய் உங்கண்ணிய
பாரு" என்றார்.

தான் பிறந்த வீட்டை கண்களால்
அளந்து படியே உள்ளே சென்றாள்.
அண்ணனின் மகன் அருகில் வந்து
"வாங்க அத்த. எப்படி இருக்கீங்க?"
என்னவனை ஏற இறங்க பார்த்து விட்டு பதிலேதும் சொல்லாமல்
இருக்க, எங்கோ வெளியே சென்று விட்டு வந்த அண்ணன் மூர்த்தி உள்ளே வந்து "வா ரேவதி நல்லா இருக்கியா? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? ஏதோ இத்தனை நாள் பேச முடியாம போச்சு. அதனால
என்ன? இப்போ தான் எல்லாம் சரியா
போச்சே. நீ மொதல்ல வந்து
அண்ணிய பாரு. அவதான் பொலம்பறா."

அண்ணனின் பின்னால் சென்றாள்.
அந்த பெரிய அறையில் பெரிய கட்டிலில் படுத்த படுக்கையாக
படுத்திருந்தாள் ஜெயா. இவளைப்
பார்த்ததும் கண்களில் ஒரு மின்னல்
தெரிந்தது. அது பொறாமையா,
ஆவலா என்று கண்டு பிடிக்க முடியவில்லை.

இப்படி தான் எப்போதும் அவள்
என்ன நினைக்கிறாள், என்ன சொல்லுவாள் என்று யாருக்கும்
கண்டுபிடிக்க முடியாது. ஆனால்
அவள் சொல்வதுதான் எல்லா
சபையிலும் அரங்கேறும்.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மூர்த்தியையும்
முடிந்து கொண்டாள். அண்ணனும்
அவளுக்கு சத்யமூர்த்தியாகவே
இருந்தான். உடன் பிறந்த தங்கை யுடன் அவளுக்கு தெரியாமல் கூட
பேசமாட்டான். பாசம் இருந்தாலும்
அதை தேய்ப்பான் கொண்டு
தேய்த்துக் கொண்டே இருந்தான்.
இன்றும் கூட.

ஏனென்றால் உடன் பிறந்த பாசம்
உடனே உடனே வளர்ந்து விடுகிறதே!

ஜெயா வந்ததும் தாய் தந்தையிடம்
சொல்லி ( மிரட்டி) ஒரு சாதாரண
மளிகைக்கடை வைத்திருக்கும்
மோகனுக்கு கட்டி கொடுக்க செய்தாள்.
அதன் பிறகு ஒரு சீர் செனத்தி ஏதும்
செய்ய முடியாது என்று சண்டை போட்டு விட்டு சென்றாள்.

மோகனும், அவன் வீட்டு ஆட்களும்
நல்லவர்களாக இருந்ததால் ரேவதி
பிழைத்தாள். அதற்காக மாடு போல்
உழைத்தாள்.

தாய் , தந்தையின் கடைசி
நாட்களுக்கு சென்றவள் தான்
அதன் பிறகு அவளை அழைக்க
யாருக்கும் மனதில்லை. 'தாயின்
நகைகள் மகளுக்கு' என்று யாரோ
சொல்ல அடிக்காத குறையாக
எல்லோரையும் விரட்டினாள்.

அதன் பிறகு பல வருடங்கள் கழித்து
கடை விரிவாக்கத்திற்கும் குழந்தைகள் மேற்படிப்பிற்கும்
மடியேந்தி வந்தவளை படியேற
கூட விடாமல் விரட்டினாள். அன்று
வாசலில் நின்று " இனி நீயே வருந்தி கூப்டாதான் வருவேன். அதுவும்
பணக்காரி யா. உலகத்துல மனுசங்க விட உனக்கு பணம் தான் உசத்தி இல்ல. என்னைக்காவது ஒரு நாள்
இது ஒரு பாடம் கத்து தரும். அப்போ
நான் வருவேன்" என்று சொல்லி விட்டு சென்றாள்.

தாய், தந்தை இருக்கும் வரைதான்
பிறந்த ஊரும், வீடும் நம்மோடு
உறவாடும். பின்பு அதை மிதிக்க கூட
அனுமதி என்பதின் " சாவி" யாரிடமோ சென்று விடுகிறது.
'பாவப்பட்ட ஜென்மங்கள் பெண்கள்'
என்று நினைத்து கொண்டு கண்களில் நீருடன் சென்றவள் தான்.

இதோ இந்த ஒரு மாதமாக வருந்தி, வருந்தி எல்லோரும் ஃபோனில் அழைத்ததாலும், முடியாமல்
இருக்கும் நேரத்திலாவது ஜெயாவை
பார்க்க வேண்டுமே என்பதாலும்
வந்தாள். யாரும் உடன் வரவேண்டாம்
என்று சொல்லி விட்டு வாடகை கார்
அமர்த்தி கொண்டு வந்தாள்.

கட்டிலின் அருகில் இருந்த நாற்காலியை இழுத்து கொஞ்சம்
தள்ளி போட்டு கொண்டு அமர்ந்தாள்.
அண்ணியை பார்த்தாள். நாடி
நரம்பு தளர்ந்து அடங்கி, ஒடுங்கி
படுத்திருந்தாள். ஆடிய ஆட்டமென்ன?
இன்றைய நிலை என்ன? பாவம் தான் என்று நினைத்து கொண்டாள்.

"சாப்புடு ரேவதி" என்றாள்.
" நான் சாப்டாச்சு"
" ஏங்க! தண்ணீயாச்சும் குடுங்க"
என்று கணவனிடம் சொல்ல,
" வேண்டாம். தாகமாக இருக்கும் போது தான் தண்ணி வேணும்.
தண்ணீலயே இருக்கும் போது
எதுக்கு தண்ணீ? என்னய எதுக்கு
வரசொன்னிங்க" என்றாள்
இயந்திரமாக.

" நான் உனக்கு துரோகம் செஞ்சிட்டேன். மூணு வீடு, நிலம்,
நகை எல்லாம் நானே எடுத்துக் கிட்டேன். இப்போ ஒரு வருசமா
படுத்த படுக்கை. நம்ம வள்ளியூர்
ஜோசியர் சொன்னாரு வூட்டு
பொண்ணுக்கு எவ்வளவு நல்லது
செய்யறையோ அவ்வளவு ஆரோக்கியம், ஆயிசு உனக்கு ன்னு.
நான் இதுவரைக்கும் ஏதும் செய்யல தான். இனிமேலாச்சும்....

அவள் முடிக்கும் முன் நாற்காலியை விட்டு எழுந்தாள். " நான் புள்ளைங்க
படிப்புக்கும், கடைக்கும் கொஞ்சம்
பணம் கடனா கேட்டப்ப, எனக்கு குடுக்க மனமில்லாத பணம் உங்க
உயிருக்காக பயந்து குடுத்தா
உடனே நான் வாங்கிக்கிட்டு
சந்தோஷப்படுவேன் ன்னு நெனச்சிங்களா? பணமும் தண்ணி
மாதிரி தான். தாகம் எடுக்கும் போது தண்ணி குடிச்சே ஆகனும். அதேபோல அவசியமா பணம் வேணும் ன்னு சூழ்நிலை இருந்தா
எப்படியாவது பணத்தை தேடி போகத்தான் வேணும்.

அப்படி ஒரு நிலமைல கதறிக் கிட்டு
உங்க கிட்ட கேட்டப்போ குடுத்திருந்தா உங்கள கடவுளா
மதிச்சிருப்பேன். ஆனா
இப்போ என் கிட்ட தண்ணி மாதிரி
பணம் இருக்கு. இப்போ நீங்க எவ்வளவு குடுத்தாலும்
அதுக்கு மதிப்பில்ல. நாங்க கஷ்டப் பட்டு முன்னேறி சாம்பாதிச்ச பணம் நிறைவா எங்ககிட்ட இருக்கு.
அதுவே எங்களுக்கு போதும்.
எங்க அப்பா பணமானாலும் அது
இப்போ உங்க பணம். அது
எனக்கு வேண்டாம்.

பொண்ணுகளுக்கும் சொத்துல
பங்கு இருக்குன்னு சட்டம் கொண்டு
வந்தாலும், அத அவங்களுக்கு
கொடுக்க கூடாது ன்னு வீட்ல
ஒரு எழுதப்படாத சட்டம் இருக்கு.
அது யாருக்கும் தெரியாது.

அதை சட்டத்தால் கட்டாயபடுத்தி வாங்க முடியும் தான் ஆனா மனசுக்குள்ள இருக்கிற உண்மையான பாசம்
அதுக்கு சம்மதிக்காது. மொதல்ல
உடைஞ்ச உறவு திரும்ப ஒட்டினாலும்
விரிசல் வெளியே தெரியத்தான்
செய்யும்.

உங்க உடம்புக்கும்,
என் மனசுக்கும் பணத்தால எந்த
சம்மந்தமும் வேண்டாம். நான்
போய்ட்டு வரேன் என்று திரும்பி பார்க்காமல் வந்து காரில் ஏறி
அவள் ஊருக்கு புறப்பட்டாள்.

அங்கே உள்ளே ஜெயா கதறுவது
தெருவரைக்கும் கேட்டது. எதை எதை
எப்போது செய்யவேண்டுமோ அதை
அதை அப்போதே செய்ய வேண்டும்.
இல்லை என்றால் அது திரும்பவும்
வேறு விதமான அனுபவமாக வந்து
பாடம் கற்பிக்கும் என்று எல்லோரும்
பேசிக்கொண்டே இருந்த போதே.....
ஜெயா.....???

நன்றி.
லதா சேகர்.

எழுதியவர் : லதா சேகர். (23-Apr-22, 7:22 am)
Tanglish : pirantha veedu
பார்வை : 268

மேலே