பொய்யே குறளை கடுஞ்சொற் பயனிலசொல் நான்கும் மறலையின் வாயினவாம் - ஏலாதி 28

நேரிசை வெண்பா

மையேர் தடங்கண் மயிலன்னாய் சாயலே
மெய்யே யுணர்ந்தார் மிகவுரைப்பர் - பொய்யே
குறளை கடுஞ்சொற் பயனிலசொல் நான்கும்
மறலையின் வாயினவா மற்று 28

- ஏலாதி

பொருளுரை:

மை தீட்டிய அழகான பெரிய கண்களையுடைய மயிலைப் போன்ற பெண்ணே! சான்றோர் மென்மையான நற்சொற்களையும், மெய்யையும் மிகவும் பேசுவார்; பொய்யும், புறங்கூறலும், வன்சொல்லும், பயனில்லாத சொற்களும் ஆகிய இவை நான்கும் புல்லறிவுடையான் வாயில் வருவனவாம்.

கருத்து:

பெரியோர் வாய் நன்மொழிகளும், சிறியோர் வாய்த் தீச்சொற்களும் பிறக்கும்.

மறல் - அறியாமை, பண்பாகு பெயராய்ப் பேதையரை யுணர்த்தியது; ‘சாயலாய்' என்று பாடங் கொள்ளுதலுமாம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jun-22, 8:18 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே