"பஞ்சத்திற்கு பஞ்சமில்லை என்போல் ஏழைக்கு"


பஞ்சம் என்று சொல்லும் போது
நெஞ்சம் அழுவது தெரியலையா...

பாவப்பட்ட மக்களின் பாவ நிலை
பார்மகளவளுக்கு (பூமித்தாய்) புரியலையா....

வருடம் ஒருமுறையாவது வருகை தந்து
என் வீட்டை சுத்தப்படுத்தி போகும்
வெள்ள நீருக்கு எப்படி தெரியும்
எங்கள் உள்ள நீர் (இரத்தம்) உறைந்து போவது...

தண்ணீர் பஞ்சம் வருமென்றறிந்த
கடவுள் நல்லவனே....,
கண்களுக்குள் குளம் ஒன்றை வெட்டிவைதிருக்கிறான்,
கண்ணீரை காய்ச்சி பருகுகிறோம் குடிநீராக...

மேகம் கருத்திருக்கு....
இரவுமுழுவதும் விழித்திருக்கிறாள் என்தாய்
ஒழுகாத இடம் தேடி எங்களை உறங்க வைக்க...

பிரதான சாலையோரம் (main road)
எங்கள் வீடிருந்தால்
ஆனந்தம் கொண்டிருப்பேன்,
பிரதான சாலையே எங்கள் வீடாயிற்றே
இக்கொடுமையை எப்படிசொல்வேன்.....

உதவி கேட்பவனை உதைத்தனுப்பினால்
திருடன் பிறக்காமல்
திருமாலா (பெருமாள்=இந்து கடவுள்) பிறப்பான்....

உழைக்காத நாளில்லை,
இருந்தும் உதவிக்கு ஆளில்லை...

சேதி பலரிடம் சொல்லியும்
செவி கொடுக்கவில்லை,
ஏன் இந்த பிறவி.. இது பிடிக்கவில்லை....

அரவணைப்பிற்கு ஆளில்லாத நாளில்
ஆறுகள் தான் எங்களுக்கு ஆறுதல் சொன்னது...
இருந்தாலும் வறுமை எங்களின் வயதை தின்னது...

அறிவியல் வளர்ச்சியினால், நடைமேடையில் கூட
நடக்கவில்லை நீங்கள்,
அறிவிழந்த போது நடைப்பாதையில்
இன்று நடை பிணமாய் நாங்கள்.....

என்போல் ஏழைகள் அதிகமாக அதிகமாக
அந்த பஞ்சத்திற்கும் பஞ்சம் வருமடா........!

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (7-Oct-11, 8:02 pm)
பார்வை : 397

மேலே