175 ஆண்டவன் தரும்பொருள் யார்க்கும் பொது - உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல் 2
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச் சீர் வரலாம்)
(1; 4 சீர்களில் மோனை)
நாதனே யுயர்வாந் தந்தை
..நரரெலா மன்னான் சேயர்
பூதலப் பொருள்கள் யார்க்கும்
..பொதுமையல் லாது சொந்தச்
சாதனப் பொருள்போற் செப்புச்
..சாசனம் பெற்றோ ரில்லை
ஆதலில் தாழ்ந்தோர் தம்மை
..அருஞ்செல்வர் தாங்கல் மாண்பே. 2
- உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”ஆண்டவனே எல்லோர்க்கும் சிறந்த தந்தை ஆகும். மக்களெல்லாம் ஆண்டவனின் பிள்ளைகள். உலகப் பொருள்கள் எல்லோர்க்கும் பொதுவானதாகும். இவ்வாறு இல்லாமல் தங்களுக்கே சொந்தமான பொருள்களைப் போல செப்பேட்டில் எழுதி ஆவணம் பெற்றவர்கள் இல்லை. ஆதலால், அருமை மிக்க செல்வர்கள் தம்மிலும் தாழ்ந்தோர்களை வேண்டுவன கொடுத்துக் காப்பது உயர்வாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

