115 செம்மையிலாக் காதலரைச் செம்பொருள் காயும் - கணவன் மனைவியர் இயல்பு 7
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
பொய்யான நாடகத்திற் பதிமனைபோல் வேடமுற்றோர்
..பூண்ட கன்மஞ்
செய்யாரேல் நகைக்கிடமா முலகறிய மணவாளன்
..தேவி யென்ன
மெய்யாவுற் றோர்தம்முள் நட்பிலரேல் பிரபஞ்ச
..விநோதக் கூத்தைக்
கையாற்கொண் டாட்டுவிக்கும் பரனவரை யழற்புகுத்திக்
..காய்வா னம்மா. 7
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்,
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
பொருளுரை:
மேடையில் நடிக்கும் பொய்யான நாடகத்தில் கணவன் மனைவியென்று வேடமிட்டு நடிப்பவர்கள் அவர்கள் பூண்ட பாத்திரத்திற்குத் தகுந்தார் போலச் செம்மையாக நடிக்காவிட்டால் அது நகைப்பிற்கு இடமளிக்கும்.
அதுபோல, உலகம் அறிய கணவன் மனைவி என்ற திருமண பந்தத்தை உண்மையாகவே பெற்ற இருவரும் தங்களுக்குள் நட்புக் கொள்ளவில்லை என்றால் உலகவாழ்வு என்ற விநோத நாடகத்தைத் தம் கைகளில் வைத்து ஆட்டி வைக்கும் ஆண்டவன் அவர்களைத் துன்பத்திற்கு ஆளாக்கி வருத்தமடையச் செய்வான் என்று இவ்வாசிரியர் உணர்த்துகிறார்.
பதி - கணவன். பரன் – இறைவன். அழல் - துன்பம். காய்வான் - வருத்துவான்.